என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்கள் பங்கேற்ற திருவிழா
    X
    ஆண்கள் பங்கேற்ற திருவிழா

    ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா

    சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே  திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அருகே மடை கருப்பசாமி கோவில் உள்ளது.  நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.  திருமலை கண்மாயில் உள்ள 4 மடைகளில் (நீர் திறப்பிற்கான பகுதி) காராலமடைக்கு சிறப்பு செய்யும் விதத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.மேலும் திருமண தடை, மழை பெய்து விவசாயம் செழிக்க போன்ற வேண்டுதலுக்காக விழா கொண்டப்படுவது வழக்கம்.

     இக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு ஆண்கள் மட்டும் சித்திரை முதல் தேதியில் இருந்து விரதம் இருப்பார்கள். திருவிழா தொடங்கியதும்  திருமலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடை கருப்பசாமி கோவிலுக்கு புறப்பட்டனர். 

    நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கோவில் காளைகள், கிடாய்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு  கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து மண்பானையில் பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டன.

    முதலில் கிராமத்து ஆடு, அடுத்து பூசாரி ஆடு என 325ஆடுகள் வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.

    இங்கு சமைத்த உணவுகளை சாப்பிட்டு காலி செய்த பிறகே பக்தர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால் அதிகாலை  3  மணிவரை பக்தர்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர். பலியிட்ட 325 ஆடுகளின் தலைகள் விழாவிற்கு வந்திருந்த ஒரு பிரிவினரிடம் வழங்கப்பட்டது. 




    Next Story
    ×