என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த உருளிகோட்டையை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்தி வயது (19). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வெளியே சென்ற கார்த்தி மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று கார்த்தியை தேடினர்.
இதற்கிடையே மாயமான கார்த்தி சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள நடேசபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடப்பது இன்று காலை தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் கார்த்தி உடலை மீட்டனர். பின்னர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மதுரைதொண்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார்த்தி சாவில் மர்மம் உள்ளதா ?என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் உருளி கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






