என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.
    • அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மானாமதுரை சுந்தரவிநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
    • குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. இதில் தவழும் கிருஷ்ணர் அலங்கரித்து வெண்ணெய் வைத்து வழிபாடு, பூஜை நடந்தது.

    அதைதொடர்ந்து சுந்தரவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள சுமார் 150 குழந்தைகள் ராதை- கிருஷ்ணர் வேடங்களில் வந்து வழிபாடு செய்தனர்.

    ராதை-கிருஷ்ணர் வேடங்களில் கோவிலுக்கு வந்த குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இரவு கோவில் முன்பு கோலாட்டம் நடந்தது.

    இதேபோல் மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில், ெரயில்வே காலனி, கொன்னக்குளம், புலிக்குளம், வன்னிக்குடி, தெ.புதுக்கோட்டை, வேம்பத்தூர், வேதியேரேந்தல், செய்களத்தூர், சிப்காட், மாங்குளம் ஆகிய கிராம பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

    • தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந் தேதி) 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, உதையாச்சி, கோட்டூர், அனுமந்தக்குடி, புளியால் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • புதிய கோவில் கட்டுவது தொடர்பாக ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கொலை குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் குலதெய்வம் ஆகும்.

    இந்த நிலையில் தங்களது ஊரிலேயே புதிதாக அழகருக்கு கோவில் கட்ட கிராமமக்கள் முடிவு செய்தனர். இதற்காக இன்று காலை அழகர் கோவில் சென்று அங்கிருந்து பிடிமண் எடுத்து வர திட்டமிட்டிருந்தனர். ஊரில் புதிய கோவில் கட்டுவதற்கான ஊர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஊர் கூட்டம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றபடி இருந்தனர். அப்போது பெரியசாமி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது21) என்பவரும், சந்திரன் என்பவரின் மகன் மெய்யரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். மெய்யர் அதே ஊரில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த அவர்கள் இருவருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அப்போது ஆத்திரமடைந்த மெய்யர், கத்தியால் ராஜேசின் கழுத்துப்பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மெய்யர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கல்லல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ராஜேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதிய கோவில் கட்டுவது தொடர்பாக ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாகிவிட்ட கொலையாளி மெய்யரை தேடி வருகின்றனர். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊரில் புதிய கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்ட போது கிராமத்துக்குள் கொலை நடந்துள்ளது அந்த கிராம மக்களிடையே பெரும் வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்களை ஒழிப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது. போதைப்பொருள் ஓழிப்பு உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ்கான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தலின் அபாயம் குறித்து பேசினார். மேலும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.

    இதில் இளையான்குடி, வருவாய் கோட்டாட்சியர் சுகிந்தா, இளையான்குடி, போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மணிகண்டேஸ்வரர், சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி முத்துசாமி, வட்டாச்சியர் அசோக் குமார், துணைவட்டாச்சியர் முத்துவேல், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் ராம கிருஷ்ணன், சதீஸ்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, சேக் அப்துல்லா மற்றும் இளை யோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது நன்றி கூறினார்.

    • கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் நேஷனல் அகாடமி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு விழா நடந்தது. ஆரத்தி எடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார். நர்சிங் மாணவிகள் முதல் உதவி சிகிச்சை முறைகளை விளக்கி செயல் விளக்கம் அளித்தனர். கேட்டரிங் மாணவர்கள் சமையல் செய்யும் இடம் தகுந்த பாதுகாப்புடன், உடை சுத்தம், உடல் சுத்தம் பற்றி பேசினார்கள்.

    ஏசி சர்வீஸ் பற்றி பயிலும் மாணவர்கள் எவ்வாறு ஏசியை பராமரித்தல் மற்றும் பாதுகாப்புடன் சர்வீஸ் செய்யும் முறைபற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர்கள். எலெக்ட்ரிக், பேசன் துறையை சேர்ந்த மாணவர்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில் முறைகள் குறித்து பேசினர்.நிகழ்ச்சி ஏற்பாடு ஆசிரியர்கள் மது மோனிஷா, பூவிழி, கனிமொழி, தன வேந்தன், செல்வா, பொன்னுசாமி, ஷாஜகான் செய்திருந்தனர்.ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்கள்.

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணை யாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர்கள் படமாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஏற்கனவே இருந்த கழிப்பறை சேதமடைந்ததைத் தொடர்ந்து பள்ளியினை புனரமைப்பதற்காகவும், பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காகவும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வை யிட்டனர்.

    பின்னர் கிராமப்புறங்க ளில் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நமச்சிவாயபுரம் கண்மாயில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைத்து ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ள கண்மாயினையும், மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்ட உபகரணங்களையும் பார்வையிட்டனர்.

    மேலும் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறையினையும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு மேம்பாட்டின் கீழ் 15.41 ஏக்கர் நிலத்தினை சீர்செய்து சமப்படுத்தி ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரிசு நிலங்களில் பழம் வகை மரக்கன்றுகள் நடவு செய்து 36 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபால், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகு மலை, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, வேளாண் பொறி யியல் செயற்பொறியாளர் செல்வம், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டாட்சியர்தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

    விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் உற்சவ விழா மற்றும் முளைப்பாரி நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் கோவிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர்

    அதன்பின் மாரியம்ம னுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பாற்றிய தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பாராட்டத்தக்க வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த, தலை சிறந்த தொழில் மற்றும் வணிக நிறுவனத்திற்கு, விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என சட்ட சபையில் 2022-23-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட–ப்பட்டது.

    அனைத்து தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவை பொதுத்துறை, தனியார், கூட்டுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் இந்த விருது பெற தகுதி உடையவை ஆகும். இந்த நிறுவனங்கள், பங்கு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.

    தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளும் இந்த விருதுக்கு பெறத் தகுதி உடையவை ஆகும். மேற்கண்ட நிறுவனங்கள் நேரடியாகவோ, அறக்கட்டளைகள் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ, இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.

    தனித்துவமாக அறக்கட்டளைகள், தொண்டு நிறுவ–னங்கள் மற்றும் மன்றங்கள்,சங்கங்கள் இந்த விருது பெறத் தகுதியற்றவை ஆகும். ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்க எடுத்துக் கொள்ளப்படும்.

    விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

    மேலும் பல்வேறு சமூகநல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    தகுதியு டைய நிறுவனங்கள் அரசின் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாலுகோட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து.கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், கிராமப்புறங்களில் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தி, சுகாதாரத்தினை பொதுமக்கள் பேணிக்காக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வானதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணி பாஸ்கரன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், நாலுகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×