என் மலர்
சிவகங்கை
- கிராவல் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
- இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிராமணம்பட்டி ஊராட்சியில் உள்ள குண்டேந்தல்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பிராமணங்கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவும் 1500 ஆயகட்டுதாரர்களும் கொண்ட மிகப்பெரிய கண்மாயாகும்.
பல வருடங்களாக கண்மாய்க்கு குடிமராமத்து பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலிங்கு பாதை, வரத்து கால்வாய், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் பொதுப்பணி துறையினரால் மேற்கொ ள்ளப்பட்டு வந்தது.
தற்சமயம் காரைக்குடி யிலிருந்து மதுரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வரும் காரணத்தினால் அப்பணிக்காக இக்கண்மா யின் வரத்து கால்வாய் அருகே 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் எந்திரத்துடன் கிராவல் மண் எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்தப்பகுதி கிராம மக்கள் கிராவல் மண் அள்ளுவதை கண்டித்து அங்கு முற்றுகையிட்டனர். தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டி யூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கலையரசன், கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- வேலுநாச்சியாரின் இசை நாடக விழா 30-ந் தேதி நடக்கிறது.
- பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரமங்கை வேலு நாச்சியாரின் இசை நாடக விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னே ற்பாடு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்தும் வீரர்களின் தியாகம், போராட்டம் போன்றவைகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசின் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு குறித்து இசை சார்ந்த நடன நாடகத்ைத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் நிறைவாக சிவகங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடகம் வருகிற 30-ந் தேதி வேலுநாச்சியர் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வின் தியாகத்தையும், தமிழ் பற்றையும், வெளிக்கொணர்வதில் முதலமைச்சருக்கு நிகர் எவரும் இல்லை. இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளைய தலைமுறை யினரான எதிர்காலச் சந்ததியினர் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் வீரப்பெண்மணியாக திகழ்ந்து, அனைத்துப் பெண்களுக்கும் முன்னோ டியாக திகழ்ந்து வருவது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், நடத்தப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தை அனைவரும் கண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் சுகிதா, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, நகர்மன்றப் பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், உதவி செயற் பொறியாளர் பெருமாள்சாமி, வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் உடனிருந்தனர்.
- தென் மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
- இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை-சீதையம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் அறக்கட்டளை சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். போட்டியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குழுக்கள் அடங்கிய மாணவ -மாணவிகள் வந்திருந்தனர்.
தனித்திறன், குழு திறன், பொது திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 3-ம் பரிசு அம்மன் சிலம்பக்கூடம் திருச்சி, 2-ம் பரிசு ஜோதி வேலு சிலம்பக் கூடம் திருச்சி, முதல் பரிசு முத்தமிழ் சிலம்ப கூடம் திருச்சி ஆகிய குழுவினர் பரிசினை பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் செய்திருந்தார்.
- அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
- கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
அதனை தொடர்ந்து மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இதே போன்று சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புலவர் செவந்தியப்பனின் மகன் துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்பத்தூர்வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் தென்னவன், கல்லல் ஒன்றிய செயலாளர் அண்ணா மலை, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் குண சேகரன் உள்ளிட்ட 26 பேர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவருமான சண்முக வடிவேல், நெற்குப்பை பேரூராட்சி மன்ற தலைவர் புசலான், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்க வாசகம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலை வர் கோகிலாராணி நாராயணன், மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், மாவட்ட விவசாய அணி சாமிகண்ணு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாண வரணி அமைப்பாளர் சோமசுந்தரம், சீமான் சுப்பையா, எம்.புதூர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- பழுதான எரிவாயு அடுப்புகளை சரி செய்ய சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- இண்டேன் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவரும் இண்டேன் எரிவாயு அடுப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நாளை (23-ந் தேதி) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இண்டேன் நிறுவனத்தின் சார்பில் 13 விநியோகஸ்தர்களும் அவர்களின் கீழ் சுமார் 3 லட்சம் எரிவாயு இணைப்புகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்த எரிவாயு இணைப்புகளின் மூலம் பயன்படுத்திவரும் அடுப்புகள் மற்றும் அதன் குழாய்கள் அதிக பயன்பாட்டின் காரணமாக பழுதடைந்திருக்கும் நிலையில் அதனை பயன்படுத்துவது ஆபத்து அதிகம் இருப்பதால் ''பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்'' நடக்கிறது.
இந்த முகாம் இண்டேன் நிறுவனத்தின் சார்பில் நாளை (23-ந் தேதி) சிவகங்கை- திருப்பத்தூர் சாலையில் பழைய நீதிமன்றம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெறுகிறது. இதில் 13 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பழுதடைந்த எரிவாயு அடுப்புகளை சரி செய்யவும் அல்லது பழைய அடுப்பை பெற்றுக்கொண்டு புதிய அடுப்புகள் வழங்கப்பட உள்ளது.மேலும் புதிதாக பாதுகாப்புடன் கூடிய டியூப்புகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இண்டேன் மாவட்ட பொது மேலாளர் ரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.இதனை இண்டேன் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பகுதி அலுவலர் மிருதுவாசினி தெரிவித்துள்ளார்.
- ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல நேரடி ரெயில் வசதி இல்லை. புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல 2 ரெயில்கள் மட்டுமே தினசரி சேவையாக உள்ளது.
இந்த 2 ரெயில்களை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பயணிகள் உள்ளனர். இதன் காரணமாக இந்த ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ஆபத்தான நிலையில் சரக்கு பெட்டிகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.
ரெயில் நிலையங்கள் இல்லாத ஊர்களான இளையான்குடி, கமுதி, சாயல்குடி, பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் சென்னை செல்ல மானாமதுரை ரெயில் நிலையம் வந்து சென்னை-திருச்சி செல்லும் ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணம் செய்கின்றனர்.
சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் பல ஆண்டுகளாக கூடுதல் ரெயில்களோ, பகல் நேரசிறப்பு ரெயில்களோ இதுவரை இயக்கப்படவில்லை. பயணிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் சிவகங்கை மாவட்ட பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை சென்னை மார்க்கத்தில் இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- தேரோட்டம் 30-ந்தேதி நடக்கிறது
- வருகிற 27-ந்தேதி மாலை கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது.மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் இக்கோவில் குடவரை கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர் சிறப்பு அலங்காரங்களில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, மாலையில் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.
அதன்படி இன்று மாலை தங்க மூஷிக வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி கஜமுக சூரசம்ஹாரமும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதியும் நடக்கிறது. அன்றைய நாளில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி அன்று (31-ந் தேதி) காலையில் கோவில் குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் மூக்குரணி மோதகம் மூலவருக்கு படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.
விழா நடக்கும் நாளில் தினசரி மாலையில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு கூலிப் போன்ற போதை தரும் பொருட்கள் விற்கப்படுவதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான போலீசார் செல்வ விநாயகர் கோவில் தெருவில் வெங்கடேஷ் என்பவரது கடையில் 5 பாக்கெட் கணேஷ் புகையிலை மற்றும் 8 பாக்கெட் கலைமான் புகையிலையும் பறிமுதல் செய்தனர். தெற்கு வேளார் தெருவில் உள்ள ஜெகநாதன் கடையில் பள்ளி மாணவர்களுக்கு கூலிப் போன்ற போதை தரும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
வெங்கடேஷ், ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிங்கம்புணரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ நடந்தது.
- சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாத சுவாமி ஜீவசமாதி பீடத்தில் இன்று கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூைஜ நடந்தது.
இந்த நகரில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கண்கண்ட தெய்வமாக விளங்கிய சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.
வழிபாட்டுத் தலமாக மாறிய இந்த ஜீவசமாதி பீடத்தில் 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. யாக வேள்விகள் 10 மணி வரை நடந்தன.
பூஜையில் கலசு ஸ்தாபனம் செய்யப்பட்டு தெய்வ சக்திகள் கலசம் பிரவேசிக்க பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து பூர்ணா குதியுடன் பூஜை நிறைவு பெற்று தீப ஆரத்தி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சித்தர் முத்து வடிவ நாதர் சுவாமியின் வம்சாவளியினர், வணிகர் நல சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். யாக வேள்விகளை தலைமை சிவாச்சாரியார் சின்னையா தலைமையில் 15-க்கும மேற்பட்டோர் நடத்தினர். திருப்பணிகள் தொடங்கி முடிந்தவுடன் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
- நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
- அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
சிங்கம்புணரி
மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
- வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
- இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி தெருவை சேர்ந்த முருகேஷ் மகன் ராஜேஷ் (வயது27). இவர் திருப்பத்தூர் சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிள் சென்று செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது செவரக்கோட்டையார் வீதியில் 30 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் எழுந்தபோது மீண்டும் இவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் கீழே விழுந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேசை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சமீப காலமாக வெள்ளையன் ஊரணி பகுதியில் மர்ம நபர்கள் முதியவர்களிடம் நகை பறிப்பு ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடந்த வழிப்பறி சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.






