என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- மேலும் ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் உள்ள சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இதையொட்டி விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன், கொடியசைத்து தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 1,552 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ைமயங்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 54 ஆயிரத்து 797 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடையவும், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருவதையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
1,500 நகர்ப்புற, ஊரக பகுதிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தரமான, நல்ல சத்தான உணவுகளை காலை மற்றும் மதிய வேலைகளில் கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளார். இதனை பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு முதல் 1,000 நாட்களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து குறித்த தகவல் பலகையை துணை சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த செவிலியர்களுக்கு அமைச்சர் ெபரியகருப்பன் வழங்கினார். மேலும் ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பரமேஸ்வரி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிங்கம்புணரி அருகே உள்ள உள்ள ெஜயங்கொண்டானில் நடந்த 24-வது மருத்துவமுகாமில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
- பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சீரணி அரங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு மருத்துவமனை சாலை, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு, பஸ் நிலையம், 4 முனை சாலை சந்திப்பு வழியாக திருப்பத்தூர் ரோட்டில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.
41 விநாயகர் சிலைகள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. சிறுபான்மையினர் ஒன்றிய செயலாளர் சகுபர் சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள பள்ளிவாசல் முன்புறம் மாநில சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் சேக் தாவூத் விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் அமைதியான முறையில் கண்டு களித்தனர்.
விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். வட்டார தலைவர் குகன் மற்றும் தினேஷ், சத்தியன் அம்பலம், பாலசுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பத்தில் விநாயகர் அனைத்து விநாயகர் சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது. பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.
- காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- மேலாளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.ஆணையாளர் ஹேமலதா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கேசவன் முன்னி லை வகித்தார்.
கூட்டத்தில் 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சொக்கலிங்கம், கடந்த மாதம் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் முகாமில் நரம்பியல் மருத்துவர் கலந்து கொள்ளாததால் சிவகங்கைக்கு செல்லு மாறு கூறியதால் மாற்றுத் திறனாளிகள் சிரமத்திற்குள் ளாயினர்.அனைத்து முன் னேற்பாடுகளுடன் முகாமை நடத்த வேண்டும் என்றார்.
10-வது வார்டு உறுப்பினர் தேவிமீனால் பேசுகையில்,ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர்க ளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற இருப்பதால் வீடு களை காலி செய்ய சொல் கிறார்கள். வறுமையில் வாடும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சங்கரா புரம் பகுதிகளில் மின்கம்ப ங்கள் பல பழுதாகி உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பி.டி.ஓ கேசவன் பதிலளிக்கையில், ஆக்கிர மிப்புகளை அகற்றுவது அவசியம். புதிதாக கட்ட ப்பட்டு வரும் அரசு அடுக்குமாடி குடியிருப்பு களில் முன்னுரிமை வழங்க வழி செய்யப்படும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசு கையில், மழைக்காலத்திற்கு முன்பாக பழுதடைந்து உள்ள சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும் என்றார்.
தலைவர் சரண்யா செந்தில் நாதன் பேசுகையில், உறுப்பினர்கள் தங்கள் பகுதி களில் குளம், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், தகுந்த முன்னேற்பாடுகள் உள்ளனவா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்கம்பங்கள் சரி செய்யப்பட வேண்டும். மழைக்காலம் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து ரூ.ஒரு கோடி மதிப்பில் சாலை களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற ப்பட்டன.
இதில் துணைத்தலைவர் கார்த்திக்,உறுப்பினர்கள் ஜெயந்தி,திவ்யா, தமிழ்செல்வி,தேவிமீனாள்,சுப்பிரமணியம்,ராமச் சந்திரன், சொக்கலிங்கம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலா ளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.
- ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்கப்பட்டது.
- அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகருமான சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை கேம்பஸ் சிவில் துறைத்தலைவர்-ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப்பேராசிரியர் அய்யாவு வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் மகாலிங்க, சுரேஷ், துறைத்தலைவர்களை அறிமுகம் செய்தார். அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர். பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.
- சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பம்புசெட் வாங்க விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர்பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (3 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) புதிய மின்மோட்டார் பம்புசெட்டு மானியத்தில் வாங்குவதற்கு தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 28 பேருக்கு தலாரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்க ரூ.2.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே மின்இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்புசெட்டு அல்லது பழைய மின்மோட்டார்களை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள் 10 குதிரைத்திறன் வரையிலான புதிய மின்மோட்டார் மாற்றிக்கொள்ள பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரை படம், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின்இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்மோட்டார் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை- தொண்டி ரோட்டில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ), சிவகங்கை அலுவலகத்திலும், 8220253460 என்ற கைபேசி எண்ணிற்கும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), காரைக்குடி அலுவலகத்திலும், 9489440970 என்ற கைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையாத்தங்குடியில் கைலாசநாதர் சமேத நித்திய கல்யாணி கோவில் 7 குளங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. நகரத்தார்களின் 9 கோவில்களில் முக்கியமானது இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் 3 காலபூஜைகளும் பூர்ணாகுதியும் நடந்தது.
பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் புனிதநீர் நிரம்பிய குடத்தை சுமந்து வந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரங்களை அடைந்தனர். பின்னர் கோபுரகலசங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பிரமுகர்கள், சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடந்தது.
- முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வவர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டலின் படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி, தாலுகா அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.
இதில் தாசில்தார் அசோக்குமார், மண்டல துணை தாசில்தார் முத்துவேல், சாலைகிராமம் துணை வட்டாச்சியர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணன் மற்றும் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆதார் எண்ணைவாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தரங்கமும் நடந்தது.
- நரிக்குறவர் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் ஒன்றியம் -கல்வெட்டு மேடு இந்திரா நகர்ப்பகுதியில் உள்ள நரிக்குறவர் குழங்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை நிர்வகிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொண்டு நிறுவனம் தேசிய அறக்கட்டளை சட்டம்/சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் இருந்தால் ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பெயரில் 80ஜி/12எ விதிவிலக்கு சான்றிதழ் (Exemption Certificate) கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
தர்பான் போர்டல் கட்டாயம் பதிவு செய்திரு த்தல் வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளில் தொண்டு நிறுவனத்தின் வரவு-செலவு சார்ந்த ஆண்டுத் தணிக்கை விபரங்களை வைத்திருத்தல் வேண்டும். 2019-2020, 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்திருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனம்/சுயஉதவிக் குழுவானது உண்டு உறைவிடப் பள்ளி நடத்துதல் மற்றும் நலிவடைந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான சமூக சேவை செய்தல் போன்ற செயல்பாடுகளில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மையத்தை நடத்துவதற்கு போதுமான இடவசதி இருத்தல் வேண்டும்.
மையம் செயல்பட தேர்வு செய்யப்படும் இடம் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து கட்டிட உறுதித்தன்மை, தீ பாதுகாப்பு தடுப்பு, சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆகியவை தொடர் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இளஞ்சிறார் சட்டம்/விடுதிகள் சட்டம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் மின்னஞ்சல் மூலமாக சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் நாளை (3-ந் தேதி) முதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புக் கொண்டு பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10-ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடந்த இருதரப்பினர் மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இறந்தவரின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (56). இவர் கடந்த 25-ந் தேதி மருதிப்பட்டியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
அவர் மீது மோதிய சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் பிரபு என்பவரும் காயமடைந்ததால் இருவரையும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டியை, மனைவி பாண்டியம்மாள் பாதி சிகிச்சை நிலையில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்த முனியாண்டி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டில் முனியாண்டியின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. முனியாண்டியின் இறப்பு குறித்து தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மதுபோதையில் அங்கு வந்த முனியாண்டி மற்றும் பாண்டியம்மாளின் உறவினர்கள் அரசு மருந்துவமனை வளாகத்தின் உள்பகுதியில் கல்லால் எறிந்தும், கட்டை, கம்புகளுடனும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதில் காரைக்குடி ஓ.சிறுவயல் பகுதியை சுரேஷ் (35), கருத்த பாண்டி, வல்லரசு, கண்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சுரேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர்களைத் தாக்கியதாக விராலிமலையைச் சேர்ந்த முத்து, கண்ணன், சக்திவேல் கருப்பையா, ஆனந்த், சேகர், சிவா, விஜய், பாரதி மற்றும் ஆறுமுகம் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை கைது செய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இறந்த உறவினர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வந்த இடத்தில் மது போதையால் இருதரப்பாக மோதி அரசு மருத்துவமனையை போர் களமாக மாற்றிய இந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
- கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது.
துணை சேர்மன் கான்முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரில் பல்வேறு வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய சேர்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் ஆக்கிர மிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குடிநீர் பாதைகளும், கழிவு நீர் பாதைகளும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
- சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பில் பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளின் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் பால்உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்காக ரூ.1லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டிலான நிதியுதவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பீட்டிலான பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
அதேபோன்று 2 மாற்றுத்தி றனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 792 மதிப்பீட்டிலான மோட்டர் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் ரூ.19 ஆயிரத்து 584 மதிப்பீட்டிலும், ஒரு மாற்றத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 633 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
- இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிளாமடம் கிராம பகுதியில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்படுவது குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவது குறித்தும், 2021-22 மானிய தவணையில் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு பகுதிகளை மறுசுழற்சி செய்தல், சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பருவமழை தொடங்க இருப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்ப டுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோருவது குறித்தும், பேரூராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்கள் வாங்குவது குறித்தும், விவாதிக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.






