என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமையான நாளை (10-ந் தேதி) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனுச் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரையில் வ.உ.சி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை நகரில் பல இடங்களிலும் வ.உ.சி உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்.சி தெரு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    கால்பிரிவு கிராமத்தில் 23-வதுஆண்டாக வ.உ.சி. மன்றம் சார்பில் வ.உ.சிதம்பிரம்பிள்ளை பிறந்தநாள் விழா நடந்தது. விழாவை கிராமம் முழுவதும் வீதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வ.உ.சி. உருவப்படத்துக்கு பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்புவனம் நகரில் வ.உ.சி. பேரவை, வெள்ளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் ஒன்றியப் பகுதிகளிலும் மற்றும் ஏராளமான கிராமங்களில் வ.உ.சி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்
    • வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தலைமை ஆசிரியையைக் கொன்று, 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர்.

    அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்ததில், வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ரஞ்சிதம் அணிந்திருந்த 20 பவுன் நகைகளும் காணவில்லை என்பதால் பணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதில், வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர்.
    • பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ராம்நகர் 4 வீதியில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது70) என்பவரும், அவரது மனைவி குழந்தை திரோஸ் (65) ஆகியோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் குழந்தை திரோஸ் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு காணத்தங்காடு கிராமத்தில் உறவினர் திருமணத்திற்காக சென்று விட்டார்.

    அப்போது அவரது வீட்டிலிருந்து தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்து புகை வெளிவந்ததை கண்டு பொதுமக்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே இச்சம்பவம் குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானாமதுரை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • 4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூரில் அழகிய திருவேட்டை அய்யனார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனிதநீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன.

    4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூர்ண புஷ்கலா சமேத அழகிய திருவேட்டை அய்யனார் சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு வழிபாடு செய்தனர்.

    கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசளை கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் முத்துமாரி அம்மனை வேண்டி இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தனர் . இதனைத் தொடர்ந்த கிராம இளைஞர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, சூப்பு தயாரித்து கிராம மக்களுக்கு வழங்கினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
    • ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி முன்னாள் மாணவர்கள் ஆசி பெற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் கடந்ம 1980-க்கு பின் இந்த பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை போற்றும் விதமாக விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள், இந்நாள் ஆசிரியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வழங்கினார். இதையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

    இந்த விழாவில் மாவட்ட போலீஸ் செந்தில்குமார் பேசும்போது, வாழ்க்கையில் நாம் எதை இழந்தாலும் நம்மை காப்பாற்றுவது கல்விதான் என்று மாணவர்களிடம் கூறினார். பின்னர் அவருடன் மாணவ, மாணவிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    • திருப்பத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துள்ளானது.
    • பின் பக்க சக்கர அச்சு உடைந்து சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.

    திருப்பத்தூர்

    மதுரையில் இருந்து தினசரி திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதி களுக்கு மளிகை பொருட்கள். கட்டுமானப் பொருட்கள், பாத்திரம், பர்னிச்சர் கடைகளுக்கு தேவையான பொருட்களை மினி லாரி, கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    அதன்படி மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக்குடி நேற்று இரவு கனரக லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.திருப்புத்தூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிருஷ்ணம்பட்டி விலக்கு அருகில் சென்றபோது பின் பக்க சக்கர அச்சு உடைந்து சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல் வாய்ப்பாக எதிரே எந்த ஒரு வாகனமும் வராததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமின்றி உயிர் தப்பித்தார். இந்த விபத்து குறித்து திருப்புத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் அந்த பகுதிகளில் அடிக்கடி மினி சரக்கு வாகனம், லாரிகள் பேருந்துகள் என தொடர்படியாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் 2 பிரிவுகளாக பெரியமாடு, சின்னமாடு பந்தயம் நடந்தது. இதில் பெரியமாடு பந்தயம் 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 25 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

    பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இடையன்காடு பரணி மாட்டுவண்டி முதலிடமும், பழவரசன் ஆறுமுகம் மாட்டுவண்டி 2-வது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் இ.எம்.எஸ். முகமது, பொய்யாநல்லூர் அயன் அஸ்ஸாம்மாட்டு வண்டிகள் 3-வது இடமும் பிடித்தன.

    தேனி மாவட்டம் போடி சின்னக்காளைத்தேவர் பதனக்குடி சிவசாமி உடையார்மாட்டுவண்டி 4-வது இடமும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் பிரவீன் சாத்தம்பத்தி சரவணன் மாட்டுவண்டி முதலிடமும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி மருதுபிரதர்ஸ் மாட்டுவண்டி 2-வது இடமும், சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாஹினி மாட்டுவண்டி மற்றும் மதுரை மாவட்டம் பரவை சிலைகாளி அம்மன்மாட்டுவண்டி 3-வது இடமும், தேனி மாவட்டம் போடி சின்ன க்காளைத்தேவர் மாட்டுவண்டி, கோட்டவயல் ராஜ்குமார் பதனக்குடி அருணாசலம் மாட்டு வண்டி 4-வது இடமும், பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி மற்றும் உரிமையாளர்களுக்கு வேட்டி, துண்டு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார்.

    முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குநர் ஷபினுல்லாகான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆகியோர் பேசினர்.

    இதில் ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், அப்துல் சலீம், உஸ்மான் அலி மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணைமுதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

    • பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ரேசன் கடையை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டபோது பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தற்போது பேராணிபட்டியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார். அப்ேபாது தங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, மாவட்ட கவுன்சிலர் கோமதி, ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், கண்ணன் மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் பெரியகாரை, அடசிவயல், கள்ளிக்குடி, கோட்டூர், நயினார்வயல், நாகாடி, திருமணவயல், பாவனக்கோட்டை, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×