என் மலர்
சிவகங்கை
- தேவகோட்டை நகரில் போலீசார் பற்றாக்குறையால் அதிகாரிகள் திணறுகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறையில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனை பலமுறை ஐ.ஜி.யிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
காவல்துறையில் திறமையான நல்ல நேர்மையான அதிகாரிகள் இருந்தும் காவலர்கள் பற்றாக்குறையால் தேவகோட்டை நகரில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது.
குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை பகுதிகளில் தான் அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. மாவட்டத்தில் குறைவான போலீசார் இருக்கிறார்கள் என்றால் அது தேவகோட்டை உட்கோட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணங்குடி ஒன்றி யத்தில் பெண்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.
வழிப்பறியில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கண்ணங்குடி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராம் நகரில் இருந்து ஒத்தக்கடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதுதாகும். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்.டி.ஓ., நகராட்சி, காவல்துறை 3 துறைகளும் இணைந்தால் மட்டுமே நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். தேவகோட்டை நகரில் காவலர்கள் பற்றாக்குறையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு அளிக்க எங்களால் தற்போது இயலாத நிலை உள்ளது என்று நகர் காவல் ஆய்வாளர் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை.
இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்தார். ராம்நகரில் இருந்து ராமேசுவரம் சாலையில் பஸ் நிலையம் வழியாக பேரணி சென்றது. இதில் பங்கேற்றவர்கள் கடவுள் வேடம் அணிந்து தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.
- தேவகோட்டையில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. நகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் உதவியுடன் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், சொந்த செலவில் 3-வது வார்டு அண்ணாசாலை 5-ம் வீதியில் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவினார். இந்த நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், இதேபோல் நகரில் அனைத்து வார்டுகளிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பட்சத்தில் நகர்பகுதி முழுவதும் பாதுகாப்பாக அமையும். கண்காணிப்பு காமிராக்கள் ஒவ்வொரு வீடுகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது. நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் இளங்கோ தேவர் நினைவு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.
பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும் சிறிய மாடு 32 ஜோடிகள் 2 பிரிவுகளாகவும் மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன.
பெரிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது.
எல்லையை நோக்கி பெரிய மற்றும சிறிய மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தை சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் பொதுமக்கள் அதிகாலையிலேயே சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.
பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இளங்கோ தேவர் நினைவுகுழு மற்றும் வண்டிபந்தய இளைஞர்கள் குழு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 12ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
சின்ன மாடு பந்தயத்தில் 2 பிரிவுகளாக பந்தயம் நடந்த காரணத்தால் முதல் பரிசு ரூ. 12 ஆயிரத்தை 2 பேருக்கும், 2-ம் பரிசு ரூ.9ஆயிரம் 2 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் 2 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.4 ஆயிரம் 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு வழங்கப்பட்டது.
- மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
- இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.
சாரதா நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராள மான பக்தர்கள் பார்வையிட்டனர்.
மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள நலம்தரும் சீரடிபாபா கோவிலில் நவராத்திரி உற்சவவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி கலசபூஜை, வித்யாரம்பம், அன்னதானம் நடைபெறுகிறது. மெயின் பஜாரில் உள்ள தியாகவிநோதப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாதொடங்கியது.
இதில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. வருகிற 5-ந்தேதி புதிய குதிரை வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- இதில் செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி தெருக்களின் நிலவரம் குறித்தும் கண்மாய் மற்றும் வர்த்தக பகுதிகளின் நிலவரம் குறித்தும் குறும்பட காட்சி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் பராமரிப்பு செய்தல், நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், நகரின் தூய்மை குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், நகரின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுதல், தெருக்களில் சுற்றிதிரியும் நாய், மாடு, குரங்கு, பன்றி மற்றும் ஏனைய பிராணி களை கட்டுப்படுத்துதல், மயானங்கள் மற்றும் மக்கள் பயன்பாடு இடங்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், நாள்தோறும் விநியோகிக்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் கொண்டு உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டு வருதல், பாகுபாடின்றி நகரில் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும், அதனை உடனடியாக செயல்படுத்துவது குறித்தும் அனைத்து தரப்பினரிடமும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டு அறியப்ப ட்டது.
இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார்.
- இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.
இந்த நிலையில் சினேகாவும், இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் (28) என்பவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சினேகா-கண்ணன் இடையே இருந்த காதல் முறிந்தது.
அதன் பின்னர் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தரும்படி கேட்டுள்ளார். அதை சினேகா கொடுக்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் சினேகாவை அடித்து கொலை செய்து விட்டார். இது பற்றி சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார். அப்போது இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.
தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்த அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். அவரிடம் போலீஸ்காரர் சசிகுமார் பாபு பேசியபோது, கல்லூரி மாணவி சினேகாவை கொலை செய்த கண்ணன் அவர்தான் என்பது தெரியவந்தது.
அப்போது கண்ணன் தற்கொலை செய்வதற்காக எலி பேஸ்ட் வைத்திருந்தார். அதனை போலீஸ்காரர் கைப்பற்றி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு போலீசாரிடம் கண்ணனை ஒப்படைத்தார். இதையடுத்து அவரிடம் கல்லூரி மாணவியை கொன்றதற்கான காரணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனது காதலை புறக்கணித்ததால் சினேகாவை கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி கண்ணனை தனிநபராக பிடித்து வந்த போலீஸ்காரர் சசிகுமார் பாபுவை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.
- கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். அவருக்கும் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கண்ணன் கட்டிட வேலை செய்து வந்தார். இவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சினேகாவின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு செல்போனில் பேசி கேட்டுள்ளார்.
இதை தொடர்ந்து சினேகா பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு கண்ணனை சந்திக்க சென்றார். அவர்கள் மாத்தூர் ரேசன் கடை அருகில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சினேகா தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதனால் அச்சமடைந்த கண்ணன் அங்கிருந்த தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினேகா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாண்டியர் 12-வது வார்டில் குப்பை வளமீட்பு மைய கட்டிட திறப்பு விழா நடந்தது.
- நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மருது பாண்டியர் 12-வது வார்டில் மத்திய மானிய நிதிகுழு திட்டத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிட்டில் குப்பை வள மீட்பு மைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
இதில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேலிங் எந்திரத்தின் மூலம் மக்காத நெகிழித்தாள்களை சுருக்கம் செய்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், ஆறு சரவணன், ராம்தாஸ், பொதுப்பணி மேற்பார்வையாளர் உலகநாதன், ஒப்பந்ததாரர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
- நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர், துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கண்மாயில் 4 மடைகள் உள்ளன. இதில் 4-வது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார் பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், 4-வது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
இதில் நயினார்பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் 4 பிரிவாக பிரிந்து செல்கிறது. பாசன நீரை பங்கீடு செய்வதில் நைனார் பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.அதன்பேரில் கலெக்டர் திருப்புவனம் கண்மாய் 4-வது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு செய்தார்.
மேலும் தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட ெவள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், கலெக்டர் ஆய்வு செய்து சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் கலெக்டர் ஆய்வு செய்து முட்செடிகள் மற்றும் கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநில கோட்டம்) செயற்பொறி யாளர் பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளார் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆ. தெக்கூர்-கீழச்செவல்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே உள்ள ஆ.தெக்கூர் மற்றும் கீழச்வசெவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (27-ந் தேதி) நடக்கிறது.
எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, எஸ்.எஸ்.கோட்டை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் முறையூர் இளையாத்தன்குடி, விராமதி, சிறுகூடல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.
- கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி சித்தர் கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.
- முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகநன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.
இதில் மருத்துவ குணமிக்க மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்திரம் போன்ற பொருட்களை யாகத்தில் இட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகத்தை புதுக்கோட்டை பனைய பட்டி ஞானிபுல்லான் சாதுவழிபாட்டு குழு செழியன் சுவாமி வேதமந்திரங்களை கூறி நடத்தினார்.
சிவகங்கை, மது ரை, புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் நடந்தது. இன்று காலை அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் சூட்டுகோல் மாயாண்டிசுவாமிக்கு அபிஷேக ஆராதனை- சிறப்பு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம்சூட்டுகோல் மாயாண்டி சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குறிச்சிகாசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.






