என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புத்தாஸ் வீரகலைகள் கழகம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியில் பங்கேற்ற 140 மாணவர்களுக்கு பேரூராட்சி சேர்மன் சான்றிதழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புத்தாஸ் வீரகலைகள் கழகம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது. வீர கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பயிற்சியில் பங்கேற்ற 140 மாணவர்களுக்கு பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக துணை சேர்மன் கான் முகமது, நகர காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி. கண்ணனின் தாயார் காலமானார்.
    • அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப்பையா அம்பலத்தின் மனைவியும், காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி.கண்ணனின் தாயாரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி இணைச் செயலாளர்- காரைக்குடி நகர் மன்ற உறுப்பினருமான கே.ஆர்.எஸ்.பி.கே.தேவன் மற்றும் கே.ஆர்.எஸ்.பி.கே.ஞானேஸ்வரன் ஆகியோரின் அப்பத்தாவுமான சோலச்சி அம்மாள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் காலமானார். அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று பகல் நியூடவுனில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெற்குதெருவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • நெற்குப்பை பேரூராட்சியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் தீவிர தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் தெளிவுபடுத்தியதோடு, நாள்தோறும் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை முழுமையாக முறையாக தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படியும் சேர்மன் கேட்டுக்கொண்டார். இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வரி தண்டலர் துரைராஜ், கவுன்சிலர் கண்ணன், சேக்கப்பன், மாணவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், 10-வது வார்டு செயலாளர் ரியாஸ் அகமது, 2-வது வார்டு துணை செயலாளர் சேவுகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • காரைக்குடி அருகே சிகரெட் நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ. 11 லட்சம் பறித்த கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி செக்காலை சாலையில் சிகரெட் மொத்த விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 30), மாதவன் நகரைச் சேர்ந்த தமிழரசன் (27) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று விக்னேஷ் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் வினியோகம் செய்யவும், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட கடைகளில் பணம் வசூல் செய்வதற்காகவும் வேனில் புறப்பட்டார். வேனை தமிழரசன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர். கோட்டையூர் அருகே வந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் இவர்கள் சென்ற வேனை வழிமறித்து டிரைவர் தமிழரசனை தாக்கியது. மேலும் விக்னேஷை அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 11 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த விக்னேஷ், தமிழரசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த நபர்களை தேடி வந்தனர்.

    3 பேர் கைது

    இதில் இந்த கொள்ளை யில் ஈடுபட்டவர்கள் கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25), கிஷோர்குமார் (22), காரைக்குடியைச் சேர்ந்த அன்வர்சலாம் (24) உள்பட 9 பேர் என்று தெரியவந்தது. இதில் தனிப்படை போலீ சார் முனீஸ்வரன், கிஷோர் குமார், அன்வர்சலாம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 6 பேரை தேடி வருகின்றனர். கைதான அன்வர்சலாம் அதே சிகரெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் ஆவார்.

    • காரைக்குடியில் நடந்த பசுமை திருவிழாவில் மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் காரைக்குடி கிளை சார்பில் பசுமை திருவிழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி விழாவை தொடங்கி வைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், "பசுமை தமிழ்நாடு" இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.அதனடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொது மக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து அரசுடன் இணைந்து ஒருவார காலத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதே போன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமாித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பசுமை திருவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த வா்களை கலெக்டர் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவா்கள் சந்திர மோகன், குமரேசன், பாலாஜி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், கேசவன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • திருப்பத்தூர் தர்மசாலாவில் வள்ளலார் பிறந்த தினவிழா நடந்தது.
    • வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருட்பெருஞ்ஜோதி தர்மசாலாவில் வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையடுத்து திருப்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். 1500 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‌தர்மசாலா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முதுநிலை படிப்புக்கு தேர்வுக்காக ஜப்பான் நாட்டிற்கு இளையான்குடி மாணவர் செல்கிறார்.
    • தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்து வந்தவர் தங்க செல்வம். இவர் தற்போது ஜப்பான் நாட்டின் சிசுகோ பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கான வேதியியல் முதுநிலை பட்டம் கல்வி உதவித்தொகையுடன் படிக்க தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை, வியட்நாம் வழியாக ஜப்பான் சென்றடைந்தார்.

    அவருக்கு அக்டோபர் முதல் 2 ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை எளிய வேலை செய்து வருபவர். இவர் கவிஞர் ஹிதாயத்துல்லாவின் (சண்முகம்) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் சென்றுள்ள மாணவர் தங்க செல்வத்தை கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.

    • சிவகங்கை மாவட்டத்தில், முதல் கட்டமாக 89 கிராம ஊராட்சிகளில் ரூ.32.42 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பிரவலூர் ஊராட்சியை அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் தன்னிறைவு அடையச் செய்வது குறித்தும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாகவும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளா்ச்சியில் தனிகவனம் செலுத்தி அனைத்து கிராமப்புற பகுதிகளையும், நகா்ப்புறப்பகுதிகளுக்கு இணையாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் பிற துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதல் கட்டமாக மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 89 கிராம ஊராட்சிகளில் நீர்நிலை புனரமைத்தல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 118 பணிகள் ரூ.958.44 லட்சம் மதிப்பீட்டிலும், குக்கிராமங்களில் தெருக்கள், வீடுகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 192 பணிகள் ரூ.752.93 லட்சம் மதிப்பீட்டிலும், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 21 பணிகள் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப்பயன்பாட்டு கட்டமைப்புக்களை உருவாக்குதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 105 பணிகள் ரூ.749.21 லட்சம் மதிப்பீட்டிலும், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.3242.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் தொடக்கமாக பிரவலூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் பிரவலூர் ஊராட்சியைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இந்த பகுதியில் கிடைக்கப்பெறும் கால்நடைச்சாணம், தென்னை, வாழை ஆகியக்கழிவுகளைக் கொண்டு எரிவாயு கலன் அமைப்பது குறித்தும், சுகாதார நாப்கின், பனைஓலைக்கூடை முடைதல், தையற்கூடம் போன்ற வைகள் தொடா்பாக பயிற்சி பெறுவது குறித்தும் மற்றும் பொதுமக்கள் எடுத்துரைத்துள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு பிரவலூர் ஊராட்சியை தன்னிறைவு அடைய செய்வதற்கான முன் மாதிரியான ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட அலுவலா்கள் விசாலாட்சி (வீடு, சுகாதாரம்), செல்வி (உட்கட்டமைப்பு), சிவகங்கை வட்டாட்சியா் தங்கமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், ரத்தினவேல், பிரவலூர் ஊராட்சி மன்றத்தலைவா் கவிதா மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

    • மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி டோல்கேட்டில் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுபஸ் வந்தது.
    • பணம் இல்லை என்றால் டோல்கேட்டை எந்த வாகனமும் கடக்க முடியாது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி டோல்கேட்டில் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுபஸ் வந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். தற்போது நாடு முழுவதும் சுங்ககட்டணம் செலுத்த மின்னனு முறை பாஸ்டேக் மூலம் பணம் செலுத்தப்பட்டுவருகிறது.

    இதில் பணம் இல்லை என்றால் டோல்கேட்டை எந்த வாகனமும் கடக்க முடியாது. பாஸ்டேக் கட்டணம் முடிந்த நிலையில்பரமக்குடியில் இருந்து வந்த அரசுபஸ் டோல்கேட்டில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் பணம் கட்டினால் தான் கேட்திறக்கும் என்று கூறிவிட்டனர்.

    பாஸ்டேக் உள்ள வேறொரு பஸ்சுக்கு பதிலாக இந்த பஸ் விடப்பட்டுள்ளது. இதில் பாஸ்டேக் கட்டணம் முடிந்துள்ளது பற்றி தெரியாது. இதன் காரணமாக பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே கேட்டை திறக்க வேண்டும் என்று பஸ்டிரைவர் தெரிவித்தார். ஆனாலும் டோல்கேட் ஊழியர்கள் பணம் செலுத்தினால் தான் செல்ல முடியும் எனகூறிவிட்டனர்.

    இதையடுத்து பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் டெப்போ மேலாளரிடம் பேசி போன்மூலம் டோல்கேட்கட்டணம் செலுத்திய பிறகு பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    வழிதடங்களில் மாற்று பஸ்களை இயக்கும் போது பாஸ்டேக்குகள் காலாவதி ஆகிவிட்டதா? என்பதை சோதனை செய்யாமல் பஸ்களை ஓட்டிவரும் போது இதுபோன்ற நிலைஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு பெரும்பாலும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்தனர்.
    • நிதி இழப்பீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் 7 கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கான ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் டெண்டர் எடுக்க 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.

    ஒக்கூர் சிறுகுளம், கரையகுடி, திருமலை ஊராட்சி திருமலை கண்மாய், அண்டகுடி பீதாம்பரனேந்தல் கண்மாய், செய்களத்துார் நத்தபுரக்கி கண்மாய், திருப்பத்தூர் அருகே உள்ள ஏ.தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் காணிக் கண்மாய் போன்ற 7 கண்மாய் ஏலத்தில் 3 கண்மாய்கள் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்து வெளியேறினார்.

    4 கண்மாய் ஏலம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அரசு ஒதுக்கி உள்ளதாகவும், எஞ்சியுள்ள தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் தாணிக்கண்மாய், திருமலை கண்மாய் ஆகிய 3 கண்மாய்களுக்கு மட்டும் ஏலம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

    மீதமுள்ள 4 கண்மாய்கள் மரங்களை அகற்றிக் கொள்ள அந்த உரிமையை ஊராட்சிக்கே வழங்கப் பட்டுள்ளது. இதனால் எஞ்சிய 3 கண்மாயை ஏலம் கேட்கலாம் என தெரிவித்தார். ஆனால் ஏலதாரர்கள் அனைத்து கண்மாய்களையும் ஏலம் விடாவிட்டால் ஏலத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர்.

    இதுகுறித்து ஒப்பந்ததாரர் துபாய் காந்தி கூறுகையில், வன அலுவலகத்தில் பொது ஏலம் நடந்தால் அதிக தொகைக்கு போகும். ஊராட்சி மன்றங்களில் ஏலம் விடுவதால் முறைகேடுகள் நடப்பதுடன், அரசுக்கும் நிதி இழப்பு ஏற்படும்.

    குத்தகை வருவாயில் 65 சதவீத தொகையை ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டும். அதற்காக அந்த கண்மாய்களை சொற்ப தொகைக்கு வழங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துகின்றனர்.

    அனைத்து கண்மாய்க ளையும் பொது ஏலம் விட்டால் அதிக தொகைக்கு ஏலம் போகும். அதன்மூலம் ஊராட்சிக்குதான் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதை கண்டித்து தான் ஏலத்தை புறக்கணித்தோம் என்றார்.

    • சிவகங்கை அருகே விரைவில் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி, பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட உள்ள அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அந்தவகையில், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் வகையில் உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளிகளை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் தொடங்க அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப்பள்ளியை தற்காலிகமாக தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பள்ளியில் அக்டோபர் மாதத்திற்குள் 12-ம் வகுப்பு உயிரியல், கணிதம் படிக்கும் 80 மாணவ, மாணவிகள் கல்வி கற்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் உயிரியல் பாடப்பிரிவு மற்றும் கணினி–கணிதம் பாடப்பிரிவு வகுப்புகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

    மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் விடுதி போன்றவை தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. அரசின் அறிவுரையின்படி, விரைவில் மாதிரிப்பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் போஸ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • முதலில் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்த விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருக்கிறார்.
    • சிவகங்கையில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டி வந்துள்ளார்.

    சிவகங்கை:

    தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிவகங்கையில் கார் டிரைவர் ஒருவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சிவகங்கையை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் (வயது27). கார் டிரைவரான இவர் மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    வாலிபர் விக்னேஷ் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். விடுதலை புலிகள் ஆதரவாளரான அவர் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றதாகவும், அந்த அமைப்பினருக்கு பேட்டரி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விக்னேசின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் இன்று அதிகாலை சிவகங்கைக்கு வந்தனர்.

    அவர்கள் அதிகாலை 5 மணியளவில் விக்னேசின் வீட்டிற்கு அதிரடியாக சென்றனர். அப்போது அங்கு விக்னேஷ் இல்லை. அவரது தாய் மட்டுமே வீட்டில் இருந்தார். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விக்னேசின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    விடுதலைபுலிகள் இயக்கத்தில் விக்னேஷ் பயிற்சி பெற்றது மற்றும் மின்சாதன பொருட்களை சப்ளை செய்தது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களது சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை காலை 8 மணிக்கு முடிந்தது. 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் விக்னேசின் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர் விசாரணைக்காக அவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    முதலில் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்த விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்திருக்கிறார். பின்பு இங்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டி வந்துள்ளார்.

    அவர் சில காரணங்களுக்காக விக்னேசை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விக்னேஷ் மீண்டும் சென்னைக்கு சென்று விட்டார். தற்போது அங்கு தான் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தான் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×