என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.

    அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

    அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.

    அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

    பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு நிழற்குடை-கழிவறை வசதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

    தொல்லியல் ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வு பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் பார்வையாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பல அரியவகை பொருட்களை அங்கேயே மக்கள் பார்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம், அருங்காட்சியக பொருட்கள் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

    தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றுவரும் பகுதிகள், அருங்காட்சியகம் போன்றவற்றை காண மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது. பண்டைய தமிழரின் வைகைகரை நாகரிகமாக, அப்போதைய மக்கள் வாழ்வியலுக்கு பயன்படுத்திய அரிய பொருட்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் கிடைத்து வருகிறது.

    அகழ்வாராய்ச்சி பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் இங்கு போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிபடுகின்றனர். குறிப்பாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அகழ்வாராய்ச்சி நடை பெறும் பகுதிக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, கழிவறை வசதி செய்ய வேண்டும்.

    கீழடி பஸ்நிறுத்தத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் எளிதாக செல்ல மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்நிலையம் மற்றும் விரகனூர் சுற்றுசாலையில் இருந்து நேரடி பஸ்கள் விடவேண்டும். அரசுமினி பஸ்கள் இயக்க வேண்டும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வைப்பகம் பற்றிய தகவல் பலகைகள் அமைக்கவேண்டும். கீழடிபகுதிக்கு செல்ல நான்கு வழிசாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.

    ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் அருகே உள்ள ரெயில் நிலையமான சிலைமான் ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுகவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    பசுமை தமிழக இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து மாவட்டத்தினை பசுமையானதாக ஆக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 20 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடும்விழா மாவட்டம் முழுவதும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமையிலும், காளாப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜு தலைமையிலும், செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் நடந்தது.

    இதில் வேம்பு, புளி, பூவரசு, மா, நெல்லி, புங்கை, மகோகனி, நீர்மருது போன்ற நாட்டுவகை மரக்கன்றுகள் 10 நிமிடத்திற்குள் 400 மரக்கன்கள் நடவு செய்து சாதனை புரிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜு, தலைமை ஆசிரியர்கள் சுபா, முனியாண்டி, ரமேஷ் மற்றும் ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தம்மாள், அகிலா கண்ணன், ரமேஷ், மகேஷ் கிராம நிர்வாக அலுவலர் அருண், உதவியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • பெரியாறு நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கா் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கா் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கா் நிலங்களுக்கு, வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் கடந்த 7.9.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

    தற்போது, தண்ணீர் திறக்கப்பட்ட ஒருமாத காலத்தில் கட்டாணிப்பட்டி முதல் கால்வாயில் 33 கண்மாய்களுக்கும், கட்டாணிப்பட்டி 2-ம் கால்வாயில் 3 கண்மாய்களுக்கும், 48-வது மடை கால்வாயில் 10 கண்மாய்களுக்கும், சீல்டு கால்வாயில் 6 கண்மாய்களுக்கும் மற்றும் லெஸ்ஸீஸ் கால்வாயில் 14 கண்மாய்க்கும் மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 66 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று (15-ந் தேதி) முதல் 20 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 க.அடி, விநாடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 91 விற்பனையா ளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 12 கட்டுநர்கள் (பேக்கர்) பணி யிடங்க ளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbsvg.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யூ-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக்கட்ட ணங்கள் செலுத்த தேவையான சலான்களை மேற்கண்ட இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbsvg22@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய அலைபேசி எண் 70942 55260 வாயிலாகவும் சிவகங்கை மாவட்ட ஆன்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இதில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.
    • தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, செட்டிநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.138.95 லட்சம் மதிப்பீட்டில் செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உபகரணங்களான மரம் அறுக்கும் எந்திரம், சவுக்குக்கட்டை, சாரக்கயிறு, தயார் நிலையில் உள்ள மணல் மூட்டைகள் உள்ளிட்டவைகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ரெயின்கோட்டுகள், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, பிளாஸ்டிக் தார்பாய் போன்ற உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பள்ளித்தம்மம் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், விஜயபுரம் சமத்துவபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ள சமுதாயக்கூடம், மணவயல் ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளம் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோன்று திருமணவயல் ஊராட்சி, தேவகோட்டை நகராட்சி, செட்டிநாடு ஊராட்சி பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்ேவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    • மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வின் பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசை அகற்றிவிட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சியை எதிர்த்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், பல திட்டங்களை வகுக்கவும் ஒரு வலுவான தலைவராக அவர் திகழ்கிறார். அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

    மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் வழியிலே அவரின் மேலான ஆலோசனையை கேட்டு நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமர செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர் ராஜா, மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, சேவியர், ஸ்ரீதர், செல்வ மணி, பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்்ப்பதி வேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, 9-ம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார்் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

    தொடா்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாராரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.

    எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ள வேண்டும்.

    மேலும், இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு கிராவல் மண் திருடுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
    • மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ். நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை14-வது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ரூ.33 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண்ணை ஒப்பந்ததாரர் குவாரிகளில் வாங்கா மல் கே.கே.நகரில் கட்டப்பட்டு ள்ள குடிநீர்தொட்டி பணியில் மிஞ்சிய மண்ணை இரவு நேரங்களில திருட்டுத்தனமாக அள்ளி வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி கவுன்சிலர் கணபதி மற்றும் அந்தப்பகுதி மக்கள் சாலைப்பணியை நடக்க விடாமல் நிறுத்தினர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மருங்கிப்பட்டி ரமேஷ் என்பவர் கூறுகையில், அரசுக்கு சொந்தமான கிராவல் மண்ணை திருடுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் எந்திரங்களால் மண்ணை வெட்டி ஓரங்கள் அமைக்கின்றனர்.

    33 அடி சாலையில் 3 மீட்டர் மட்டுமே சாலை போடப்படுகிறது.ஓரங்களில் பள்ளமாக மண்ணை வெட்டி பயன்படுத்துவதால் சாலை குறுகிய சாலையாக மாறிவிடுகிறது.

    மேலும் வீடுகளுக்கும், பிளாட்டுகளுக்கும் முன்புறம் கால்வாய் போல் ஆகிவிடுகிறது. சாலை பணிக்கு தேவையான மண்ணை ஒப்பந்ததாரர் விலைக்கு வாங்கி அதனை பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தலையிட்டு கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், பொதுமக்கள் தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் எச்ச ரிக்கை விடுத்துள்ளோம்.சாலையின் இருபுறமும் தோண்டிய மண்ணை பரப்பிவிட்டு சரிசெய்ய உத்தரவிட்டுள்ளேன். மீண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் உறுதியளித்துள்ளார்.
    • காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    குணசேகரன் (துணைத்தலைவர்) :- சூடாமணிபுரம், தேவஸ்தான பகுதி, அண்ணாநகர், சேர்வார் ஊரணி பகுதிக ளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு வரி போட வேண்டும்.

    அன்னை மைக்கேல் (தி.மு.க. கவுன்சிலர்) :- காரைக்குடியில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்குவதில் புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாலையோர மீன் கடைகளால் சுகா தாரக்கேடு நிலவுகிறது. நல்லதண்ணீர் ஊரணி அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    குருபாலு (அ.தி.மு.க. கவுன்சிலர்) :- அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் இறுதியாக தலைவர் முத்துதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ. 10 கோடியும், தெருவிளக்கு அமைக்க ரூ. 3 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

    கடந்த ஆட்சியில் நகராட்சியின் இழந்த சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதே முதல் கடமை.

    ஊரகத்துறையில் சாதனை புரிந்து ஜனாதிபதி விருது பெற்ற அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் பொறியாளர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

    ×