என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கண்டனூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது.
    • கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    காரைக்குடி

    பேரூராட்சிகளின் இயக்குநரின் ஆணையின் படியும், சிவகங்கை கலெக்டரின் உத்தரவின் படியும், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், சிவகங்கை மண்டலத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில், கண்டனூர் பேரூராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்துவரி, நூலக வரி, திடக்கழிவு சேவைக் கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    கண்டனூர் பேரூ ராட்சியில் 2022-23-ம் ஆண்டில் சொத்துவரி சீராய்வு பணிகள் முடிக்கப்பட்டும், அதன் விவரங்களை என்.ஐ.சி. -ல் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டும், 27.10.2022 முதல் 11.1.2023 வரையுள்ள 77 நாட்களில், குறுகிய காலத்திற்குள் 100 சதவீதம் வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரூராட்சியில் 2022-23- ம் ஆண்டு வரி மற்றும் வரியில்லா இனங்களை வரித்தண்டலர் நாவுக்கரசு, இளநிலை உதவியாளர்கள் ரவி, யோகா, குடிநீர் மோட்டார் இயக்குபவர் ராகுல்ராஜா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வசூல் செய்து முடித்துள்ளனர்.

    மேலும் தமிழ்நாட்டில் கண்டனூரை முன்மாதிரி பேரூராட்சியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பி னர்கள் ஆகியோர் 100 சதவீத வரி வசூல் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

    வரும் காலங்களில், தமிழக அரசால் தெரிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளையும் கண்டனூர் பேரூராட்சி மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பெலிக்ஸ் தெரிவித்தார்.

    • பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக பானை, அடுப்புகளை வழங்க வேண்டும் என மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • டோக்கன் முறையில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டால் பொதுமக்களும் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சி அடை வார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார பகுதியில் மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    இங்கு ஆண்டு முழு வதும் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக கரும்பு மற்றும் பொருட்கள் வழங்கப் படுகிறது.

    இதேபோல் பாரம்பரிய மிக்க மண்பானைகளை விலையில்லாமல் வழங்க வேண்டும். டோக்கன் முறையில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டால் பொதுமக்களும் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சி அடை வார்கள். இப்போது இல்லாவிட்டாலும் இனி வரும் காலங்களில் விலை யில்லாமல் குடும்ப அட்டை தாரர்களுக்கு மண்பாண்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று மானாமதுரை வட்டார மண்பாண்ட தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், குழந்தைகள் சாலைபாதுகாப்பு விதிகளை நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு தொடர்பாக இங்கு விளக்கப்பட்ட காணொலியில் சாலைப்பாதுகாப்பு விதிமிறல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தவிர்கும் வழிமுறைகள் பற்றியும், பள்ளி குழந்தைகள் சாலைவிதிகளை பின்பற்றினால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இதில் துணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் குலசேகரமந்திர செல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சுமார் 750 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்றார்.
    • இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    மத்திய பிரதேசம் இண்டூரில் நடந்த 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கயானா நாட்டு ஜனாதிபதி இப்ரான் அலி, சுரினாம் நாட்டு ஜனாதிபதி சான் சந்தோகி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக இந்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    • சட்ட பாதுகாப்பு அமைப்புக்கு வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • இதனை பொதுமக்களும், வழக்காடிகளும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா அறிவுறுத்தலின்படி இணையதள வழியில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் முற்றிலும் ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட பாதுகாப்பு மற்றும் வழக்கு நடத்தி கொடுக்க தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு திட்டத்தின்படியும், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் சட்ட பாதுகாப்பு அமைப்பு ெதாடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர்கள் அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவில் பொறுப்பேற்றனர்.

    இந்த விழாவில் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி(பொ) கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதனை பொதுமக்களும், வழக்காடிகளும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    • தேவகோட்டையில் நகராட்சி கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம் நடந்தது.
    • ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் ரமேஷ்:-தற்போது ஆக்கிர மிப்பு அகற்றியதில் பூ கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் விரிவாக்கத்தில் பூக்கடைகளுக்கு இடம் வழங்க வேண்டும். ஆணை யாளர் போல் போலி கையெழுத்து போட்டு மின் இணைப்பு வாங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

    தலைவர்:- ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் (தி.மு.க.):- பஸ் நிலையம் உட்புறம் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. தற்போது அவை செயல்படவில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    தலைவர்:- உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்து பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகர்மன்றத் உறுப்பினர் கமலக்கண்ணன் (அ.ம.மு.க):- ஆக்கிரமிப்பு அகற்றியது நகராட்சியா? அல்லது காவல்துறையா? இதில் காவல்துறை ஏன் தனியாக செயல்படுகிறது?

    தலைவர்:-இது குறித்து காவல்துறையில் கேட்ட போது அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. 

    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் நிலங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம் நடத்தினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் ஊராட்சி கோட்டூர் நயினார் வயல் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு சுமார் 200 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் கோட்டூர் நைனார் கோவில் கிராமத்தில் உள்ளன. இந்த விளை நிலங்களை 6 தலைமுறைகளாக இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை ஏக்கருக்கு சுமார் ரூ.350 வீதம் வரியை அறநிலையத்துறை வசூலித்து வந்தது. இந்த நிலையில் தேவகோட்டை சிலம்பணி விநாயகர் கோவிலில் செயல்படும் அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து இந்த விவசாயிகளுக்கு தற்போது விவசாயம் செய்யும் நபர்களின் மீது ரசீது போடப்படும் என தகவல் தெரிவித்தது.

    ஏற்கனவே இறந்தவர்கள் பெயரில் ரசீது உள்ள நிலையில் அவரது வாரிசுதாரர்கள் பெயரில் ரசீது போடப்படும் என்ற தகவலால் அனைத்து விவசாயிகளும் அறநிலையத்்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அறநிலையத்துறை அதி காரிகள் கடந்த ஆண்டுகளை விட இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 12 மடங்கு அதிக வரி விதித்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயி காமராஜ் கூறுகையில், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்று இருக்க 6 தலைமுறைகளாக விவசாயம் செய்த நிலத் திற்கு நாங்கள் பட்டா கேட்கவில்லை. நிலங்களை தரிசாக போடவில்லை. இதற்கு பலனாக தற்பொழுது 12 மடங்கு வரி விதித்திருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் அதை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகையை அறநிலையத்துறை பெற்று வருவது வேதனை அளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்து வரும் நிலையில் அவற்றிலும் குறைந்த அளவே விளைச்சலும் உள்ளது. விவசாயம் இல்லை என்றால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
    • இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்தி வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு பன்னீர் முழுக்கரும்பு, 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற கடந்த 3-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை ராமநாதபுரம் வசந்த நகர், ஏ.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில் உள்ள கே.கே.சாலை ரேசன் கடையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட பொது மேலாளர் சக்தி சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், தாசில்தார் தமீம்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 776 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 403 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.

    குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான பச்சரிசி மற்றும் சர்க்கரையை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்லலாம்.

    பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
    • தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர்- சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில், அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்து உள்ளது.

    அகழாய்வின் போது கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மதுரை கோட்ட பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, கீழடி கட்டிட மைய செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×