என் மலர்
சிவகங்கை
- இடைக்காட்டூர் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு கடந்தாண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடை களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.
இந்தாண்டு மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிறுகுடி, பெரிய கோட்டை, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம், செட்டி குளம், தெக்கூர், காளிபட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டு நெல் அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்கா ங்கே விவசாயிகள் இறக்கி அடுக்கி வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நெல் மூடைகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனி வரும் நெல்லை பாதுகாக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் விவசாயிகள் இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் உடனடியாக இடைகாட்டூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து உடனடியாக நேற்று இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ப.சிதம்பரம் வாழ்த்தினார்.
- திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி- தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம். மதுமிதாவிற்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழி லதிபர் சத்குரு தேவனின் மைத்துனருமாகிய பொறி யாளர் கே.மெய்யப்பனிற்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி பேலஸில் விமரிசையாக நடந்தது.
முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
திருமணவிழாவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசின் முதன்மை செயலர்கள், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை.
- அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது.
சிவகங்கை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.
இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்கள் படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.
இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், அவர்கள் படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி -தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம்.மதுமிதா.
இவருக்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்-ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழிலதிபர் சத்குரு தேவனின் மைத்துன ருமாகிய பொறியாளர் கே.மெய்யப்பனிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி. பேலஸில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு துறைக ளின் அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்கள், அரசுத்துறை செயலா ளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், தொழிபதிபர்கள், காங்கி ரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- திருப்பத்தூரில் கியாஸ் கசிவால் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
- இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு மகளிர் போலீஸ் நிலையம் பின்புற பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.
நேற்று வேலை முடிந்து வந்த தொழிலாளர்கள் வீட்டின் ஒரு அறையில் இரவு நேர சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ வேகமாக அருகே இருந்த சிமெண்ட் மூடையிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலா ளர்கள் தீ விபத்து நடந்த சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கொள்முதல் மையத்தில் 400 மூடை நெல் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
- சிங்கம்புணரி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு நீர்நிலைகள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை கையொடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு நடவு பணிகளை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்தன. 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் இங்கு நெல் நடவு செய்யப்பட்டது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் நெற்கதிர்கள் முளைத்து மகசூல் கிடைத்தது. தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.
சிங்கம்புணரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை மூடை மூடையாக விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இதில் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மூடைக்கு ரூ.50 கமிஷன் கொடுத்தால் தான்நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்ப டுகிறது. இதில் பணம் கொடுத்த விவசாயிகள் நெல் மூடைகள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கொள்முதல் செய்வதாகவும், பணம் கொடுக்காதவர்களை அலைக்கழிப்பதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வரை எஸ்.எஸ்.கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் பெய்த மழை கரணமாக நல்ல மகசூல் கிடைத்தது. விளைந்த நெல்களை அரசிடம் விற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் வந்தால், அதனை வாங்காமல் அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். மேலும் கமிஷனும் கேட்கிறார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிபடிக்கும் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மேல்நிலை கல்வி படிப்பது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்து ரைக்க ப்படும் கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்கி தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேசுவரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய், மகளை கொலை செய்து 60 நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.
இரட்டை கொலை நடந்து 27 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு இரவுசேரி நாடு, தென்னிலைநாடு உட்பட 14 நாட்டார்கள் முன்னிலையில் நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.
இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், த.மா.கா மாநில செயலாளர் இருமதி துரைகருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரத்தை முடித்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதலாக ஒரு மாதத்திற்குள் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் அடுத்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறும்.
ஒரு மாத காலத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.
- தேவகோட்டையில் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் கனகம்(வயது60), அவரது மகள் வேலுமதி (35), பேரன் மூவரசு(12) ஆகியோரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி 60 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பினர்.
இதில் சம்பவ இடத்திலேயே வேலுமதி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கனகம் இறந்தார். பேரன் மூவரசுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
கனகத்தின் மகன் வெளிநாட்டில் இருந்த நிலையில் இறந்தவரின் உடல்களை 4 நாட்களாக உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் நாட்டார்கள் சட்ட ஒழுங்கு தலைவர் கே.ஆர். ராமசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் காவல்துறைக்கு கோரிக்கைகளை வைத்தனர்.
இந்த இரட்டை கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை பிப்ரவரி 1-ந்தேதிக்குள் கைது செய்யவில்லையென்றால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் எங்களது நிகழ்வுகள் நடக்கும் என தெரிவித்தனர்.
மேலும் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடு போனதால் குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்த நகைகளை நாட்டார்கள் வழங்கி குறிப்பிட்ட தேதியில் திருமணமும் நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி சுபமுகூர்த்த தினங்கள் இருந்ததால் நாட்டார்கள் உண்ணாவிரதத்தை 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று தேவகோட்டையில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மருந்து கடைகள், தினசரி காய்கறி கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற உண்ணாவிரதமும் நடந்தது. திரளானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதால் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.






