search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடையடைப்பு-உண்ணாவிரத போராட்டம்
    X

    இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடையடைப்பு-உண்ணாவிரத போராட்டம்

    • தேவகோட்டையில் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் கனகம்(வயது60), அவரது மகள் வேலுமதி (35), பேரன் மூவரசு(12) ஆகியோரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி 60 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே வேலுமதி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கனகம் இறந்தார். பேரன் மூவரசுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    கனகத்தின் மகன் வெளிநாட்டில் இருந்த நிலையில் இறந்தவரின் உடல்களை 4 நாட்களாக உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் நாட்டார்கள் சட்ட ஒழுங்கு தலைவர் கே.ஆர். ராமசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் காவல்துறைக்கு கோரிக்கைகளை வைத்தனர்.

    இந்த இரட்டை கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை பிப்ரவரி 1-ந்தேதிக்குள் கைது செய்யவில்லையென்றால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் எங்களது நிகழ்வுகள் நடக்கும் என தெரிவித்தனர்.

    மேலும் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடு போனதால் குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்த நகைகளை நாட்டார்கள் வழங்கி குறிப்பிட்ட தேதியில் திருமணமும் நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி சுபமுகூர்த்த தினங்கள் இருந்ததால் நாட்டார்கள் உண்ணாவிரதத்தை 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவித்தனர்.

    அதன்படி இன்று தேவகோட்டையில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு தேவகோட்டை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மருந்து கடைகள், தினசரி காய்கறி கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற உண்ணாவிரதமும் நடந்தது. திரளானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதால் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    Next Story
    ×