என் மலர்
சேலம்
- தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
- சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
சேலம்:
சேலத்தை சேர்ந்த சாய்பாபா பக்தர் கனகசபாபதி (வயது 82). இவர் மலையேறும் பயிற்சி கிளப் தலைவராகவும் உள்ளார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் தினந்தோறும் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர மாவட்டங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் அவர் சேலத்திலிருந்து சீரடிக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சேலத்தில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாநிலங்களை கடந்து 22-ந் தேதி சீரடியை அடைந்தார்.
மொத்தம் 1,207 கிலோமீட்டர் தொலைதூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தனது பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்பிய கனகசபாபதிக்கு கிளப் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்து டன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பல வருடங்களாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இளைஞரிடையே சைக்கிள் பயணம் குறித்து விழிப்பு ஏற்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் இளைய சமுதாயத்தினர் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. உற்சாகமான வாழ்விற்கு சைக்கிள் பயணம் அவசியம் என்றார்.
- மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
- வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாழப்பாடி:
இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.
இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- இனிவரும் நாட்களில் நீர்வரத்து குறையும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 1,259 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 1,098 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 102.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.90 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து குறையும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
- குகை சாமுண்டி தெருவை சேர்ந்தவர் கோகிலாவாணி (வயது 46).
- 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பை எந்த முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி ஊழியர் துண்டித்தனர்.
சேலம்:
சேலம் குகை சாமுண்டி தெருவை சேர்ந்தவர் கோகிலாவாணி (வயது 46). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பை எந்த முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி ஊழியர் துண்டித்தனர்.
இது குறித்து கோகிலாவாணி மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து ஊழியர்கள் குடிநீர் இணைப்பு வழங்கினர்.
- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நடந்தது.
இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் கூறும் போது, தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா மல் உள்ளது. தேர்தல் வாக்குறு திகளாக அறிவித்துவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை . எனவே உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி சென்னையில் அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்று திரண்டு பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார் .
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வருவாய் அலுவலக சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்க ளின் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் நாகரிகமும், பழம்பெருமைகளும் இன்றும் போற்றப்படுகிறது.
- தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், ‘மல்லர் கம்பம்’ விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர்.
உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் நாகரிகமும், பழம்பெருமைகளும் இன்றும் போற்றப்படுகிறது. களரி, வர்மக்கலை, மல்யுத்தம்... வரிசையில் வீர விளையாட்டான மல்லர் கம்பமும் உடலுக்கும், மனதுக்கும் வலுசேர்க்கும் விளையாட்டாகும். தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், 'மல்லர் கம்பம்' விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். தங்களின் பராக்கிரமச் செயலுக்கு வலுவேற்ற இந்த 'மல்லர் கம்பம்' அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந் திருந்தது.
சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல் லவன் 'மாமல்லன்' என பெருமையோடு அழைக்கப்பட்டான்.
உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தும் மல்லர் கம்பமானது தமிழகத்தை கடந்து தற்போது வடமாநிலங்களிலும் சிறப்புற்று திகழ்கிறது. அங்கு மல்லர் கம்பத்தை 'மால்காம்' என்ற பெயரில் அழைக்கின்றனர். இது தேசிய உடல் விளையாட்டு போட்டியாகவும் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன.
மகாராஷ்டிராவில் எந்தவிழா தொடங்கப்பட்டாலும் இறை வணக்கத் துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. நம் மண்ணில் பிறந்த மல்லர் கம்பம், இன்று வடமாநிலங்களில் அதிகமாய் கற்பிக்கப்படும் வேளையில், தமிழகத்தில் இக்கலை தற்போது எழுச்சி பெறுகிறது.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல அந்தரத்தில் ஒரு பறவையை போல தொங்கி, உடலை ரப்பர் போல வளைத்து சாகசம் செய்யும் வீரமும் தைரியமும் நிறைந்து, பார்வையாளர்கள் கண் சிமிட்டக் கூட யோசிக்கும் அளவிற்கு சவாலான, அற்புதமான கலை மல்லர் கம்பம். அன்றைய சோழ ,பல்லவ மன்னர் காலத்தில் அதிகமாக விளையாடப்பட்ட விளையாட்டுகளில் மல்லர் கம்பம் முக்கியமானது ஆகும். "மல்" என்னும் சொல் "வளத்தை" குறிக்கும். மல்லன் என்றால் "வீரன்" என்று பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலை மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர்கம்பம் என்று மூன்று வகையான மல்லர் கம்பம் உள்ளது. மாணவர்கள் மல்லர்கம்பம் பயில்வதால் உடல் வளைவு திறன் மேம்படுகிறது. பெண்கள் பயிற்சி பெறுவதால் அவர்களின் உடல் வலு பெறுவதோடு கர்ப்பகாலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். சேலம் சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவிகள் மல்லர் கம்பம் மற்றும் யோகாசனம் செய்து அசத்தினர். அசுரவேகத்தில் மாணவிகள் நிகழ்த்திய இந்த சாதனை பலரையும் வியக்க வைத்தது.
- சேலம் மாவட்டம், சங்ககிரி யில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சங்ககிரி ஆர்.டி.ஓ சவுமியா மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி யில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவுமியா மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில், தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாக னத்தில் ஊர்வலமாக சென்ற னர்.
சங்ககிரி ஆர்.டி.ஓ அலு வல கத்தில் தொடங்கிய பேரணி புதிய எடப்பாடி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்று கோட்டாட்சி யர் அலுவல கத்தில் முடி வுற்றது. இதில், கல்லுாரி மாணவிகள், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்கு வரத்து), மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா, செந்தில், வருவாய் துறை ஆய்வாளர் கீதா, வி.ஏ.ஓ. சதீஷ் பிரபு மற்றும் அமுதசுடர் அறக்கட்டளை மாணிக்கம், சத்திய பிரகாஷ், தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை சண்முகம், ரோட்டரி கிளப் திவாகர், பி.எஸ்.சி கல்லூரி முதல்வர் ரேவதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்த வாறு ஊர்வலமாக சென்றனர்.
- ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
- ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 20 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பழனி யப்பன் மகன் சரவணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று தாரமங்கலம் வரு வாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி உட்பட வருவாய் துறையினர் அங்கு சென்றனர். உரிய அளவீடு கள் செய்து ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
- ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி பெருமாபாளையத்தில், ஒட்டங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முனியப்பன், முன்னடியான், சப்த கன்னிமார் தேவிகள், பைரவர் மற்றும் குதிரை காவலர் சுவாமிகளுக்கு பாலா சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி பெரியசாமி நகர் பழனிமுத்து,– சித்ரா மற்றும் குல தெய்வ பங்காளி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,259 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,259 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 102.99 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.9 அடியாக சரிந்தது.
- ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
- கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், முக்கிய விவசாயமாக காபி கருதப்படுகிறது. ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
இந்தாண்டு காபி எஸ்டேட்டுகளில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. வெள்ளை நிறத்தில் மல்லிகை மலர் போல தோட்டங்களில் பூத்துள்ள காபி மலர்களை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த மலர்களில் இருந்து ஒரு வித நறுமணமும் வீசுகிறது.
வருடத்தில் 2 முறை காபி சீசன் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதுதவிர உரிய விலை கிடைக்காததாலும் காபி எஸ்டேட் அதிபர்கள் மற்றும் காபி தோட்ட சிறு வியாபாரிகளும் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் காபி செடிகளில் பூக்கள் அதிகம் பூக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரிக்கும் என்று காபி எஸ்டேட் அதிபர்கள், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்.
- மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






