என் மலர்
சேலம்
- அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
- சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
இவரது கணக்கில் இருந்த 60 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கணக்கை சரிபார்த்தபோது கடந்த 28-ந் தேதி மற்றும் இந்த மாதம் 16-ந் தேதி தலா 30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை நான் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக அவரது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அவரது கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்கம்பட்டி தபால் அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சக்திவேல் என்பவர் போலியாக கையெழுத்திட்டு அண்ணாமலை கணக்கில் இருந்த ரூ.60 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் அஞ்சலக கிழக்கு கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சு, வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் 70 அடியாக இருந்த கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதாவது, கபினியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றிலும் பாய்ந்தோடி, டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு சங்கமாவில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.
தமிழகம்-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதியில் இந்த தண்ணீர் வந்து சேர்ந்து அங்கிருந்து ஒகேனக்கல்லுக்கு செல்கிறது. பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 3-வது நாளாக தடை விதித்துள்ளது. இதனால் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று மாலையில் 10 ஆயிரத்து 232 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 12 ஆயிரத்து 444 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசன தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் காலையில் 65.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 64.80 அடியாக சரிந்தது.
தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று 64.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 64.90 அடியாக உயர்ந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெள்ளை அத்திமரத்தில் விளையும், ஆலம் பழங்களைப் போல தோற்றமுள்ள பழங்கள், மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்ததல்ல.
- மரத்தடியில் சிமெண்ட் திட்டு இருக்கைகள் அமைத்து கிராம மக்கள் ஓய்வெடுப்பதோடு, கால்நடைகளையும் கட்டி பராமரித்து வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்டது கண்கட்டி ஆலா கிராமம். அருநூற்றுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இச்சிறிய கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாரியம்மன் கோவில் எதிரே ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான பார்ப்பதற்கு ஆலமரத்தை போல் தோற்றமுடைய வெள்ளை அத்திமரம் படர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இந்த மரத்தின் தாவரவியல் பெயர் ஸ்பைஸஸ் வைரன்ஸ் என்பதாகும்.
இந்த கிராம மக்கள் விசிறி ஆலமரம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். இந்த வெள்ளை அத்திமரத்தில் விளையும், ஆலம் பழங்களைப் போல தோற்றமுள்ள பழங்கள், மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்ததல்ல. ஆனால் இந்த பழங்களை பறவைகள் விரும்பி உண்கின்றன.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் இலை உதிரும் இந்த மரம் ஒரு வாரத்திற்குள் துளிர்த்து பச்சைப் பசேலென தழைத்தோங்கி வளர்ந்து நிழல் கொடுத்து வருகிறது. எப்போதும் பசுமையாக காணப்படும் இந்த மரத்தடியில் சிமெண்ட் திட்டு இருக்கைகள் அமைத்து கிராம மக்கள் ஓய்வெடுப்பதோடு, கால்நடைகளையும் கட்டி பராமரித்து வருகின்றனர்.
கண்கட்டி வித்தை காட்டுவதைப்போல, இலை உதிரும்சில தினங்களிலேயே சட்டென துளிர்த்து தழைத்தோங்கிய நிழல் தரும். இந்த மரத்தை காரணமாகக் கொண்டே, இந்த கிராமத்திற்கு கண்கட்டி ஆலா பெயர் ஏற்பட்டதாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
இதனால் இந்த மரத்திற்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக கருதும் இந்த கிராம மக்கள் தொடர்ந்து 5 தலைமுறைகளுக்கு மேலாக மரத்தை பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்த மரத்திற்கு அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருவதால் இந்த மரத்து நிழல் பள்ளி குழந்தைளுக்கு விளையாட்டு மையமாக பயன்பட்டு வருகிறது.
இந்த பாரம்பரிய வெள்ளை அத்தி மரம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, இந்த வெள்ளை அத்தி மரம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் முதிர்ந்ததாக இருக்கலாம். கல்வராயன்மலை, அருநூற்றுமலை, சந்துமலை உள்பட சேலம் கிழக்கு மாவட்டத்தில் வேறெங்கும் இந்த சிற்றினத்தில் முதிர்ந்த மரங்கள் காணப்படவில்லை. இந்த மரத்தின் பழங்கள் ஆலமரத்தின் பழத்தை போல காணப்படுவதால், விசிறி ஆலமரம் என்ற பெயரிலேயே கிராம மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரே வாரத்திற்குள் துளிர்க்கும் தன்மை கொண்டதென தெரியவந்ததால், இதன் விதைகளை சேகரித்து மரக்கன்றுகளை உருவாக்கி வனப்பகுதியில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
- சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.
- வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.
எதிர்முனையில் இருந்த நபர், குறிப்பிட்ட லீங்கில் பணம் செலுத்திப்பூர்த்தி செய்தால், வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.
ஆனால் அந்த நபர் கூறியபடி பணமும் வேலையும் கிடைக்கவிலலை. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர்.
- திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 1982-ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 24 சென்ட் நிலம் வழங்கப் பட்டது. இதனை அந்த பகுதியில் பள்ளி நடத்தி வரும் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பான வழக்கிலும் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது. 30 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி யும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அந்த நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை
இதனால் வீட்டுமனை இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக இந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
சேலம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
பூ வியாபாரி
இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
- சேலம் சுப்பிரமணி நகர் கம்பர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது.
- இதையொட்டி பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சேலம் சுப்பிரமணி நகர் கம்பர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது.
இதையொட்டி பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த கோவிலில் வருகிற 30-ந் தேதி திருவிளக்கு பூஜையும், அடுத்த மாதம் 1-ந் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 2-ந் தேதி அலங்கார பல்லக்கில் கரகாட்டத்துடன் ஊர்வலம், பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜையும், 3-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சேலம் சித்தர் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சேலம் வடக்கு, மேற்கு,தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடந்தது.
- சேலம் வடக்கு தொகுதியில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
சேலம்:
மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமையை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சேலம் வடக்கு, மேற்கு,தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடந்தது.
ஆர்ப்பாட்டம்
சேலம் வடக்கு தொகுதியில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதியில் மாநகரப் பொருளாளர் தாரை ராஜ கணபதி தலைமையிலும் ,தெற்கு தொகுதியில் வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம் தலைமை யிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் ஷானவாஸ், பச்சப்பட்டி பழனி, மெடிக்கல் பிரபு, ஷேக் இமாம், ரகுராஜ், எம்.ஆர்.சுரேஷ், கவுன்சிலர் கிரிஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஷ்ரப் அலி, முன்னாள் மாநகர தலைவர் மேகநாதன், மாநகரத் துணைத் தலைவர் மொட்டையாண்டி, மாநகர பொதுச் செயலாளர்கள் குமரேசன், வக்கீல்கார்த்தி, கோபிகுமரன், ராஜ்குமார், சீனிவாசன், உடையாப்பட்டி பிரகாஷ், விவசாயபிரிவு சிவகுமார், மண்டல தலை வர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது, ராமன், நாகராஜ், நடராஜ், கந்தசாமி, மோகன், கோவிந்தன், ஓ.பி. சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் பர்வேஸ், பாஸ்கர் ரவி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் யாக்கோப், ஆர்.டி.ஐ. பிரிவு மாநகர தலைவர் தாஜூம், இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ், பிரபுராஜ், பாலாஜி கோவிந்தன், ரத்தினவேல், பாண்டியன் மகிளா காங்கிரஸ் மாநகர தலைவி புஷ்பா பாண்டியன், டிவிஷன் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
- வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனைக்குழு, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. மேலும் மஞ்சள், நிலகடலை ஆகிய விளைப்பொருளுக்கும் மறைமுக ஏலம் நடத்தப்பட உள்ளது.உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வதால், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை தரம் பிரித்து, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்தால் தரத்திற்குரிய விலை கிடைக்கும்.ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் எந்தவித கமிஷன் (தரகு) பிடித்தமும் செய்வதில்லை. விற்பனை செய்த முழுத்தொகையும் பெறலாம். எனவே, விவசாயிகள் மேற்படி மறைமுக ஏலத்திற்கு விளைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
- விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
சேலம்:
விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்லராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
போராட்டம்
கள் விற்பனைக்கு அனு மதி அளிக்க கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கள் இறக்கி விற்க அனுமதிக்கும் கட்சிக்கு விவசாயிகள் ஆதர வளிப்பார்கள். மேகதாது அணை கட்டுவதை தடுக்கா விட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாகிவிடும்.
கொப்பரை தேங்காயை மத்திய அரசு வருடம் முழுவதும் கொள்முதல் செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.150 வழங்க வேண்டும். தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.
சத்துணவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாரத்தில் 2 முறை இளநீர் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கள் நல்லுசாமி, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.
- அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் ரெயில்வே டி.எஸ்.பி பெரியசாமி மற்றும் ேபாலீ சார் ரோந்து சென்றனர். அப்போது பிளாட்பார்ம் 4-ல் ஐ லேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிழக்கு தெருவை சேர்ந்தத ராம்குமார் 19 என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் மது பாட்டில்களும் பறி முதல் செய்து போலீஸ் நிலையத்த்தில் ஒப்படைத்த னர். இதன் மதிப்பு 3 ஆயி ரத்து 840 ஆகும் . தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் தோட்டக்கலை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
காய்கறி சாகுபடி குறைந்தது
ஆனால் கடந்த ஓராண்டாக ஓமலூர் வட்டார விவசாயிகள் பணப் பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதனால் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து, விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயிற்சி
இந்த நிலையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்வதற்கான பயிற்சி முகாமை ஓமலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை நடத்தியது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது வீடுகளில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கையான முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லாத காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிடலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்க தேவையான பைகள், விதைகள், நார் கழிவுகள், செடிகளின் நாற்றுகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மாடி தோட்ட தொகுப்புகளை வாங்கி சென்று வீடுகளில் காய்கறிகள் சாகுபடி செய்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயனடையலாம். மேலும் அதிகளவில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவிகள்
மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






