என் மலர்
ராணிப்பேட்டை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நகரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது30) மற்றும் பொன்வேல் (35). இவர்களுக்கு சொந்தமான பசுக்கள் நேற்று அருகில் இருந்த விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.
பலத்த மழை பெய்ததால் பசுக்களை அழைத்து வருவதற்காக பஞ்சாட்சரமும், பொன்வேலும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கோலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன்கள் தங்க செல்வன், சேட்டு (வயது28).
இவர்கள் சத்திரம்புதூரிலிருந்து சிலோன் காலனிக்கு செல்லும் சாலையோரம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
தங்க செல்வன், சேட்டு அவர்களது மனைவிகளும் வயலுக்கு சென்று விட்டனர். அங்கிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர்.
முன்பக்க கதவை திறந்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பார்த்த போது 4 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் நகை பணத்தை திருடிவிட்டு தடயங்களை மறைக்க பீரோவில் இருந்து பின் வாசல் வரை மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சேட்டு சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் ஏரியில் ஆண் பிணம் மிதந்த இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (40) கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதியன்று ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களுக்கும் 9-ம் தேதி அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய நான்கு ஒன்றியங்களும் என 7 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இதில் 13 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர்.
இதில் அரக்கோணம் ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 17 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், அதிமுக, அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆற்காடு ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் சுயச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளில் திமுக 5 இடத்திலும், அதிமுக, பாமக, காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 8 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், அதிமுக 4 இடத்திலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக10 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். திமிரி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளுக்கு திமுக 13 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வாலாஜா ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக, காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆக மொத்தம் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 80 இடத்திலும் அதிமுக 16 இடங்களிலும் பாமக 17 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும், அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களிலும் சுயட்சை 8 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த இளவழகன் மகள் தீபிகா (வயது 21) பி.சி.ஏ. படித்துள்ளார்.
பட்டதாரியான இவர் தி.மு.க.வில் ஆற்காடு ஒன்றிய 2-வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டது.
இதில் இளம் வேட்பாளர் தீபா 2,344 வாக்குபெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளர் லதா 1144 வாக்குகள் பெற்றார். 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தீபிகா வெற்றிபெற்றார். அ.தி.மு.க. பின்னுக்குத்தள்ளப்பட்டது.
ஒன்றிய பகுதிகளில் 21 வயதில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தீபிகாவை கட்சியினர் பாராட்டினர்.






