என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் போலீஸ் சரகம் சேந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பாப்பா (வயது57). இவர்களது மகன் தேவேந்திரபாண்டியன்(31). இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மது குடிக்க தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் தேவேந்திர பாண்டியன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
    • கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • 9 மையங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வு நடந்தது.
    • கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3 ஆண்டுகளுக்குட்பட்ட காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 7.11.2022 வரை இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது அந்த பதவிக்கான எழுத்து திறனறித்தேர்வு இன்று நடந்தது.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி, ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாடானை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, ராஜசிங்கமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

    மையங்களுக்குள் தேர்வர்கள் பலத்த சோத னைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

    • மக்கள் சேவையாற்றி மாற்றுத்திறனாளி ஒருவர் முத்திரை பதித்து வருகிறார்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு ‘சல்யூட்’ செய்வோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகராஜன் - அழகம்மாள் மூத்த மகன் ஹரிகரசுதன். இவர் பிறந்து 18 மாதங்களில் இளம் பிள்ளைவாதம் பாதிப்பு ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முழுமையாக செயலிழந்து விட்டது. இதன் பின் அவரது தாய், ஹரிகரசுதனை மருத்துவமனைக்கு நடையாய் நடந்து அழைத்து சென்றும் குணப்படுத்த முடியவில்லை. 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டது. மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வேதனையுற்றனர். ஆனால் மனம் தளரவில்லை. மகன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

    இது குறித்து ஹரிகரசுதன் கூறியதாவது:-

    உன்னால் எல்லோரையும் போல வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனது தாய் ஏற்படுத்தி வளர்த்தார். கிராம மக்களின் ஆதரவினால் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

    மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத நான் உள்ளாட்சி பிரதிநிதியாக வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொடுத்துள்ளேன். என்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து, என்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சிறு தொழில் தொடங்க ஊக்கமளித்தார். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் முதலீட்டில் காரசேவு, மிக்சர் பாக்கெட் போன்ற நொறுக்கு தீனிகளை எடுத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் நீண்ட தூரம் வரை சென்று விற்பனை செய்து வருகிறேன். உழைப்பே நம்பிக்கை என்று தாரக மந்திரத்தில் வாழ்ந்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கத்தில் மாவட்ட பொரு ளாளராக இருந்து வருவதுடன் மாற்றுத் திறனாளிகள் அடிப்படை உரிமைகளுக்காக டெல்லி, சென்னை என 70க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். பாடல் பாட தெரியும் என்பதால் தனியார் தொலைக் காட்சியில் நடைபெற்ற போட்டி யிலும் பங்கேற்றுள்ளேன்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊனம் என்று நினைத்து ஒதுங்கி முடங்கி விடாமல், தன்னம்பிக்கையை தளர விடாமல் மக்கள் சேவையாற்றி பல்வேறு முத்திரைகளை பதித்து வரும் இவரை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு 'சல்யூட்' செய்வோம்.

    • மாடுகள் 2-வது முறையாக பூட்டை உடைத்து விடுவிக்கப்பட்டன.
    • நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்த முன்வராத அதிகாரிகளால் இப்பிரச்சினைகள் தொடர்கிறது.

    தடையற்ற போக்கு வரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளன. அதன்படி ரோட்டில் கால்நடைகள் திரியவிடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டகை களில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என்று ஒதுக்க ப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர்.

    பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின் ரோட்டில் விட்டு விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை, இரவில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    மாடுகள் ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹாரன்' சத்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. இதனால் டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள்விபத்துக்குள்ளாகின்றனர்.

    ஒரு சில மாடுகள் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடை யூறினை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சில மாடுகள் நிரந்தர தங்கும் இடமாக மாற்றியுள்ளது. இவை திடீரென குறுக்கே கடந்து உயிர்பலியை ஏற்ப டுத்துவதுடன் அவற்றிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து கீழக்கரை நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் சேக் உசேன் கூறியதாவது:-

    சட்டவிதிகளை பின்பற்றாமல் கால்நடைகளை ரோடுகளில் விடும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கீழக்கரை நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர். கேட்டின் பூட்டை உடை த்து அடைக்கப்பட்ட மாடுகளை 2 முறை விடுவித்துள்ளனர்.

    இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ''நம் நலம் நம் செல்வம்'' என்ற தலைப்பில் செல்வ சுருதி கலைக்குழுவினரின் எய்ட்ஸ் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    சமூக ஆர்வலர் ரஹ்மத் ஜவஹர் அலிகான், சுகாதார அமைப்பை சேர்ந்த ராஜா, கோட்டையம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம், பாட்டு, கரகாட்டம், மேளக்கச்சேரி ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமானாங்கரை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அகத்தியன், சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் இளமதி, கால்நடை உதவியாளர்கள் அன்னலட்சுமி, தங்கராசு ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    193 மாடுகளும், 486 வெள்ளாடுகளுக்கும், 235 செம்மறியாடுகளுக்கும், 38 நாய்களுக்கும், 415 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • கடல் அட்டை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • 20 ஆண்டுகளுக்கு பின் கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ராமநாதபுரம்:

    நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப் போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கடல் அட்டை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது மீராசா மகன் ஜாகீர் உசேன். இவர் கடல் அட்டை கடல் வெள்ளரி உள்பட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பிடித்து வந்தார். தொடர் வன உயிரின குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். வனக் குழுவினரின் தீவிர நடவடிக்கையினால் கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளரான பகான் ஜெகதீஸ் சுதாகர் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்க்கு பரிந்துரை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளரின் பரிந்துரையினை ஏற்று கலெக்டர் உத்தரவுப்படி ஜாகிர் உசேனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    20 ஆண்டுகளுக்கு பின் கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இச்செய்தியை அறிந்த கடல் அட்டை கடத்தல்காரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றது.

    • சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
    • சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மண்டபம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனிடையே மண்டபம் பகுதியில் நேற்று பகல் முழுவதுமே விட்டுவிட்டு மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்தபோது தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியான மனோலி தீவையொட்டிய கடல் பகுதியில், மேகம் கடல் நீரை உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த காட்சியை அந்த வழியாக அரசு பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் ராமேசுவரம், பாம்பன் பகுதியிலும் நேற்று பகல் முழுவதுமே விட்டுவிட்டு மழை பெய்தது.

    • அதி வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டப்படுகிறது.
    • அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

    பாம்பன்:

    ராமேஸ்வரம் தீவு பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 105 ஆண்டுகள் பழமையான ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து, புதிய ரெயில் பாலம் அமைக்க, ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கடந்த 11.8.2019 அன்று பூமி பூஜையுடன் பால கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது 84%  கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 333 அடித்தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.


    அனைத்து 99 அணுகு பால கண்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கார்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அதி வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டப்படுகிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரெயில்வே கடல் பாலமாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கோட்டைமேடு இணைப்பில்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    • பள்ளி செயல்பாடுகளை இணை இயக்குநர் பாராட்டினார்.


    ஊராட்சி மன்ற தலைவர் வேலுமயில்.

    --------------------------------

    கமுதி

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிக ளில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களில் 3 பள்ளிகள் சிறந்த பள்ளி களாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோட்டை மேடு இணைப்பில்லம் ஊராட்சியில் செயல்படும் ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    2-வது சிறந்த பள்ளி ராமநாதபுரம் மாவட்டம் வைரவன் கோவில் நடுநி லைப்பள்ளியம், 3-வது சிறந்த பள்ளியாக மண்டபம் ஒன்றியம் காந்திநகர் நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது

    ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சிறந்த பள்ளியாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள கோட்டை மேடு இணைப்பில்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் மாநில கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உஷாராணி, யோசிதா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல், ஒழுக்கம், பண்பு ஆகியவை குறித்து தெரிவித்தனர். பள்ளி செயல்பாடுகளை இணை இயக்குநர் பாராட்டினார்.

    சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதற்கு நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேவி, துணை தலைவி முனீஸ்வரி ஆகியோர் தலைமை ஆசிரி யரை பாராட்டினர். ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் கூறுகையில், தொடக்கப்பள்ளி முதலிடம் பிடித்து சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அளவிலும் சிறந்த பள்ளியாக நிச்சயமாக மாறும் என்றார்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
    • 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா போட்டிகள், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கடந்த 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பள்ளி அளவில் இப்போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த 3 நாள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கமுதி வட்டாரத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 30 வகையான கலைபோட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெனிட்டாமேரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜெகநாதன், கந்தசாமி, ராஜரஹீக், சந்தனகுமார், கவுசல்யா, நித்யா, நூருல்குதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் டேவிட், ராமச்சந்திரன், நாகராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×