என் மலர்
புதுக்கோட்டை
- ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது21). இவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஷா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.
அதேபோல் கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஐயப்பன் சேலத்திலிருந்து அவ்வப்போது சென்னை சென்று ஆஷாவை சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் ஆஷா கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த 9 மாத கர்ப்பிணியான ஆஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து திருமயம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு விசாரணை நடத்தினார்.
அப்போது ஐயப்பன் ஆஷாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷாவை திருமணம் செய்தால் வீட்டிற்கு அவர்கள் வரக்கூடாது என்றனர்.
இதையடுத்து பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
- தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
- மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இதில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.
இதற்கிடையே மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் தொடர்ந்து தலைமுடியை வெட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் வழக்கம்போல் பள்ளியில் நடைபெறும் தேர்வுக்கு சென்றார்.
பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமுடியை ஏன் வெட்டவில்லை. தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்குள் வா என்று கூறி வருகை பதிவேட்டில் மாணவன் பள்ளிக்கு வந்துள்ளான் என்று குறித்து விட்டு மாதேஸ்வரனை காலை 11 மணிக்கு பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.
மேலும் மாணவனை பள்ளியை விட்டு அனுப்பி விட்டு மாணவனின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை வரை மாணவன் மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவர் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் காலை 11 மணிக்கு முடியையும் தாடியையும் எடுத்துவிட்டு தேர்வு எழுத பகல் ஒரு மணிக்கு பள்ளிக்கு வா என்று கூறி அவரை அனுப்பி விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர் பின்னர் இரவில் மாதேஸ்வரன் தான் படிக்கும் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்த மாதேஸ்வரனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது உடலை மரத்திலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு மாணவனின் உடலை கட்டி அணைத்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ் நகர் காவல்துறையினர் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் தான் காரணம். தேர்வு நேரத்தில் மாணவன் முடி மற்றும் தாடியை வெட்டாததால் பள்ளி நேரத்தில் மாணவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
மேலும் மாணவனின் பெற்றோருக்கு எந்தவித தகவலையும் ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை, இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளான் என்றும் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை அங்கிருந்து எடுக்கவிடமாட்டோம் என்று கூறியதோடு மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை தூக்கி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
அப்போது தடுத்து நிறுத்திய நகரத் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி தலைமையிலான போலீசார் மாணவன் மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரேத பரிசோதனை செய்து முடிவு வந்ததற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மாணவனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அரசு அமரர் ஊர்தி மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.
மேலும் நள்ளிரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை காவல்துறையினரை எடுக்க விடாமல் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
- கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது
- 2டிரைவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுக்கோட்டை,
அரிமளம் அருகே ஆனைவாரி கிராம கண்மாய் பகுதிகளில் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுத்துச் செல்வதாக அரிமளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 டிப்பர் லாரிகளிலும் சுமார் 11 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர்கள் குளத்துப்பட்டி செங்கமளத்தை சேர்ந்த சங்கர் (43), பீர்க்கலைகாடு அரண்மனையை சேர்ந்த ரகுபதி (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருமயம் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்
- புதுக்கோட்டை வர்த்தக கழகம் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழக பொதுக்குழு கூட்டம் சில்வர் ஹாலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவரிமுத்து ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் கதிரேசன் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேக்கரி மஹராஜ் உரிமையாளர்அருண்ராஜ் சின்னப்பா, கே.எல்.கே.ஏ.ராஜாமுகமது, அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் காமராஜ், பொன்னமராவதி தலைவர் பழனியப்பன், சாக்குகடை காளிமுத்து ஆகியோர்பாராட்டப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாநில பேரவை கூடுதல் செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர் சேவியர், அஷ்ரப்அலி, உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வர்த்தகர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் திருமயம் வழியாக செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வந்து பேருந்து நிலையம் வழியாக செல்ல மாவட்ட கலெக்டர், போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிடவேண்டும், திருமயம் வழியாக செல்லும் பல்லவன் விரைவு ரெயில் திருமயத்தில் நின்று செல்ல தென்னக ரெயில்வே கோட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, கீரனூரில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராத போக்குவரத்து சிக்னலை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், கீரனூரில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்படவேண்டும், மருத்துவமனை தரத்தை உயர்த்த வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படவேண்டும், ஆலங்குடிக்கு நள்ளிரவு 1.00 மணியளவில் ஒரு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சமுதாய கூடம் அல்லது திருமண மண்டபம் கட்டி தர நடவடிக்கையை பேரூராட்சி எடுக்க வேண்டும், புதுக்கோட்டையி;ல் திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்து சிறப்பான முறையில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோரிக்கையான ஷேர் ஆட்டோவை கொண்டு வரவேண்டும், மினி பஸ் சர்வீஸ் நகரின் பல பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும், பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதிலோ, கொடுப்பதிலோ மறுப்பு தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவை மாவட்ட கலெக்டர் உத்திரவாக வெளியிட வேண்டும், நகர் சுற்றி 16 வீதிகளில் கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட வேண்டும், ரயில் வழியாக சரக்குகள் போக்குவரத்து செய்யும் வசதியை ஏற்படுத்தி மேம்படுத்தி தரவேண்டும என்ற 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதுக்கோட்டை அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- 41 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 41 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
- முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்
அறந்தாங்கி,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றனர். 3 நாட்கள் 3 சுற்றுகளாக நடைபெற்று வந்த போட்டியின் இறுதி நாளில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளருமான தயாநிதிமாறன் கலந்து கொண்டு இறுதி சுற்றை தொடங்கி வைத்தார்.
பின்னர் இறுதிச் சுற்றில் வெற்றி அடைந்த அணியினருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நினைவுக் கோப்பைகளை வழங்கினார். மேலும் அடுத்த 2 இடங்களை பிடித்த அணியினருக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் உடனிருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் பொன்துரை, பொன்கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திவேல், நகர்மன்ற துணை தலைவர் முத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் ஷாஜகான், சதீஸ்குமார், வேணுகோபால், சாமிநாதன், அடைக்கலராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது
- முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தின் கீழ் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா வழங்கினார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா முன்னிலையில், தலைமை மருத்துவர் சாரதா வழங்கினார்.
மேலும் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவி மாதம் ஒரு முறை வழங்கப்படுகிறது என்றும், காது கேட்கும் கருவி தேவைப்படும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இலவசமாக காது கேட்கும் கருவி பெற்று பயன்பெறுமாறு தலைமை மருத்துவர் சாரதா கேட்டுக் கொண்டார்
- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிகளில் கலெக்டர் மெர்சி ரம்யா திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி, திருமங்கலப்பட்டினம் கிராமத்தில், ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகள், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில், ரூ.28.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடப் பணி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வருவாய்த்துறையின் சார்பில், கடலோர பேரிடர் தணிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) (பொ) ரம்யாலட்சுமி, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, உதவிப் பொறியாளர் தமிழ்மணி, உதவி கோட்டப் பொறியாளர் ஹெலன்மேரி, மீன்வள ஆய்வாளர் ஆதீஸ்வரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- புதுக்கோட்டை அன்னவாசலில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
- கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது
புதுக்கோட்டை,
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவ அலுவலர் மணியன் தலைமை தாங்கினார். இதில் மகப்பேறு டாக்டர் வித்யாலட்சுமி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கே.ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது
- இயற்கை இடர்பாடுகளின் போது செயல்பட வேண்டியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், இயற்கை இடர்பாடுகளின் போது செயல்பட வேண்டியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
- கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
- கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியில் தொடக்கம்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியில் வளவம்பட்டி ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா, அரவம் பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் கட்டிட பூமி பூஜை, கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கான ரூ.10 லட்சம் மதிப்பிலான நிழற்குடை பூமி பூஜை,கந்தர்வகோட்டை பணிமனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தரைத்தளம் அமைத்தல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.விழாவில் புதுக்கோட்டை தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாமா பாலமுருகன், தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், துணைத்தலைவர் அருண் பிரசாத்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், தாமரை. பழனிவேலு,சித்திரை வேல், ராமையன், இளையராஜா அரசு ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
- ஆலங்குடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- கலெக்டர் மெர்சி ரம்யா உதவி உபகரணங்களை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, இம்முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இம்முகாமில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், சுகாதாரப்பணிகள் அறந்தாங்கி துணை இயக்குநர் நமச்சிவாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராம்சந்தர், பேரூராட்சி உறுப்பினர் காஞ்சனா செல்வராஜ், ஆசிரியர் ஞானபிரகாசம், முடநீக்கு வல்லுநர் எஸ்.ஜெகன்முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






