என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிகளில் கலெக்டர் மெர்சி ரம்யா திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி, திருமங்கலப்பட்டினம் கிராமத்தில், ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகள், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில், ரூ.28.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடப் பணி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வருவாய்த்துறையின் சார்பில், கடலோர பேரிடர் தணிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) (பொ) ரம்யாலட்சுமி, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, உதவிப் பொறியாளர் தமிழ்மணி, உதவி கோட்டப் பொறியாளர் ஹெலன்மேரி, மீன்வள ஆய்வாளர் ஆதீஸ்வரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






