என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும் பலியானார்கள்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதேவேளையில் மீனவர்கள் பலியான சம்பவத்தில் விசாரணை நடத்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்ததையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து 4 பேரின் உடல்களும் நேற்று இரவே இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த உடல்களையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 4 பேரின் உடல்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு இன்று காலை 7.20 மணிக்கு சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டனர். அவர்களின் உடல்களை பெறுவதற்காக கோட்டைப்பட்டினத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் 4 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்கள் கோட் டைப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் 4 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் ராமேசுவரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் “மாலை மலர்” நிருபரிடம் கூறியதாவது:-

    ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் உடல்கள் காங் கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு இன்று இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 18 மைல் தூரம் மணமேல்குடிக்கும், 40 மைல் தூரம் ராமேசுவரத்திற்கும் இடையே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படும்.

    அதன் பிறகு மீனவர்களின் உடல்கள் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுமியை கடத்தியதாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பனையப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகன் அடைக்கலம் (வயது 26) என்பவர் சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் திருமயம் அழைத்து வந்தனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தினார்.

    அப்போது சிறுமியை கடத்திச் செல்ல அடைக்கலத்தின் அண்ணன் லட்சுமணன் (39), தங்கை பழனியாயி (23) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், சிறுமியை கடத்தியதாக அடைக்கலம், லட்சுமணன், பழனியாயி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
    இலங்கை ரோந்து கப்பல்லி படகு மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி யைச்சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் (15 கி.மீ.) மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து வேகமாக புறப்பட்டபோது, மீனவர்களின் விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியதாக கூறப்பட்டது.

    இதில் படகுடன் சேர்ந்து மீனவர்கள் 4 பேரும் மூழ்கினர். அவர்களை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நடந்த சம்பவம் பற்றி கூறினர். உடனே 3 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    அத்துடன் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர் படகு மூழ்கிய இடத்தில் தேடுதலை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே நேற்று நெடுந்தீவு அருகே விசைப்படகுடன் மூழ்கிய 4 பேரில் 2 மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள் பாம்பனை சேர்ந்த சாம்சன் டார்வின் மற்றும் செந்தில் குமார் என்று தெரியவந்தது. அவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் அவர்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது. 

    இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, தகுதியின் அடிப்படையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

    முன்னதாக, இலங்கை கடற்படை தான் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் படகு மீது மோதியதாகவும், அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    அறந்தாங்கி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நாகுடி களக்குடிதோப்பை சேர்ந்தவர் சேகர். சமையல் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனையடுத்து அந்த பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து நந்தினியின் உடல் கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவரது உடலை அடக்கம் செய்ய நாகுடியில் உள்ள மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

    அப்போது நந்தினியின் உறவினர்கள் எங்களிடம் சொல்லாமல் உடலை எப்படி மயானத்திற்க்கு கொண்டு செல்லலாம் என கோரி நந்தினி சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நந்தினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் மாயமானார்கள். இதனிடையே தேடும் பணியை துரிதப்படுத்த கோரி அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ர ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மெசியா (வயது 30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படகின் பின்புறம் சேதம் அடைந்து தண்ணீர் புகுந்தது.

    இதனை அறிந்த மீனவர்கள் இது குறித்து வாக்கி டாக்கி மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இலங்கை கடற்படையினர் இருந்ததால் அப்பகுதிக்குள் மற்ற மீனவர்கள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே அந்த மீனவர்களையும், விசைப்படகையும் காணவில்லை. அந்த படகு கடலில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் சென்ற மீனவர்களின் கதி என்ன? என்ற விவரம் தெரியவில்லை. மற்ற மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் 3 விசைப்படகில் 12 மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    எனவே மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லமாட்டார்கள் என்று மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
    ஆலங்குடி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் திருவரங்குளம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் திருவரங்குளம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னவாசலில் நடந்தஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நல்லையா தலைமை தாங்கினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    இதேபோல் அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதேபோல் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கறம்பக்குடி அருகே மது விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், அன்பழகன் ஆகியோர் கறம்பக்குடி சாந்தம்பட்டி, குழந்திரான்பட்டு, பல்லவராயன் பத்தை, கண்டியன் தெரு, மஞ்சு விடுதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நாடிமுத்து (வயது 40), அண்ணாதுரை (48), ஜீவானந்தம் ( 48), பார்த்திபன் (28), முத்துக்குமார் (45), ராமன் (45), குமார் (35), இளமுருகு (45), வைத்தியலிங்கம் (50), செல்வம் (60), சிதம்பரம் (50) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பரசன் (வயது 52). இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஞானசேகரன் (50). கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரை அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் நேற்று நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு அளித்தார். இதில் ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், வன்கொடுமையை வெளியில் சொல்லாமல் இருக்க மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இதனை ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்கவும் தீர்ப்பு கூறினார்.

    மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகளும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை தொடர்ச்சியாக தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டுகள் மற்றும் 42 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 49 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
    கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உள் கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக தேவராஜ் (வயது36), தங்கவேல் (53) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,550 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    அன்னவாசல் அருகே மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). சலவை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு காட்டுப்பட்டியில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக முக்கண்ணாமலைப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டனர். தை மாதத்தில் அறுவடை செய்துவிடலாம் என்று எண்ணிய நேரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் நெல் வயல்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் வயலில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வயலில் மூழ்கிய நெற்பயிர்களை விவசாயிகள் சிலர் தாங்களாகவே அறுத்து, அதனை காய வைத்து மாட்டு தீவனத்திற்காக பயன்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை அருகே தென்திரைப்பட்டி பகுதியில் வயலில் மூழ்கிய நெற்கதிர்களை குடும்பத்தோடு விவசாயி ஒருவர் நேற்று அறுத்துக்கொண்டிருந்தார். இதில்அவரது பேரக்குழந்தைகளும் ஈடுபட்டிருந்தனர். நெல்லாக மாற வேண்டிய நெற்கதிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி வீணாகிய நிலையில் அதனை அறுத்து வெயிலில் காய வைத்த பின் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்தால் இதுவும் வீணாகி போகிவிடும். நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்த நெற்பயிர்கள் கண்முன்னே வீணாகி கிடப்பதை கண்டு வேதனையாக இருக்கிறது. செய்த செலவுகள் எல்லாம் வீணாகி போனது. ஒரு வைக்கோல் கூட கிடைக்கவில்லையே என்று வருத்தத்துடன் கூறினார்.

    மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். முதல் கட்ட ஆய்வில் 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அரசு தரப்பில் இருந்து நிவாரணம் பெற்று தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி கூறுகையில், 'இந்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். நெல், நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் மழையால் சேதமடைந்துள்ளன. நெல்லுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அவை வடிந்த பின்பும் விவசாயிகளுக்கு செலவு உள்ளது. இந்த கதிர்களை அப்புறப்படுத்த வேண்டும், நிலத்தை மீண்டும் சரி செய்ய வேண்டும். எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'என்றார்.
    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவர் சம்பவத்தன்று கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் முருகனை தேடி கடலுக்கு சென்றனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீனவர் முருகனின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் நவீன் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், முருகன் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென இறந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×