search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி: ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் உத்தரவு

    இலங்கை ரோந்து கப்பல்லி படகு மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி யைச்சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் (15 கி.மீ.) மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து வேகமாக புறப்பட்டபோது, மீனவர்களின் விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியதாக கூறப்பட்டது.

    இதில் படகுடன் சேர்ந்து மீனவர்கள் 4 பேரும் மூழ்கினர். அவர்களை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நடந்த சம்பவம் பற்றி கூறினர். உடனே 3 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    அத்துடன் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர் படகு மூழ்கிய இடத்தில் தேடுதலை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே நேற்று நெடுந்தீவு அருகே விசைப்படகுடன் மூழ்கிய 4 பேரில் 2 மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள் பாம்பனை சேர்ந்த சாம்சன் டார்வின் மற்றும் செந்தில் குமார் என்று தெரியவந்தது. அவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் அவர்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது. 

    இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, தகுதியின் அடிப்படையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

    முன்னதாக, இலங்கை கடற்படை தான் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் படகு மீது மோதியதாகவும், அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×