என் மலர்
செய்திகள்

வயலில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாட்டு தீவனத்திற்காக விவசாயியின் குடும்பத்தினர் அறுத்ததை படத்தில் காணலாம்.
தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் - ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டனர். தை மாதத்தில் அறுவடை செய்துவிடலாம் என்று எண்ணிய நேரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் நெல் வயல்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் வயலில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வயலில் மூழ்கிய நெற்பயிர்களை விவசாயிகள் சிலர் தாங்களாகவே அறுத்து, அதனை காய வைத்து மாட்டு தீவனத்திற்காக பயன்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகே தென்திரைப்பட்டி பகுதியில் வயலில் மூழ்கிய நெற்கதிர்களை குடும்பத்தோடு விவசாயி ஒருவர் நேற்று அறுத்துக்கொண்டிருந்தார். இதில்அவரது பேரக்குழந்தைகளும் ஈடுபட்டிருந்தனர். நெல்லாக மாற வேண்டிய நெற்கதிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி வீணாகிய நிலையில் அதனை அறுத்து வெயிலில் காய வைத்த பின் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்தால் இதுவும் வீணாகி போகிவிடும். நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்த நெற்பயிர்கள் கண்முன்னே வீணாகி கிடப்பதை கண்டு வேதனையாக இருக்கிறது. செய்த செலவுகள் எல்லாம் வீணாகி போனது. ஒரு வைக்கோல் கூட கிடைக்கவில்லையே என்று வருத்தத்துடன் கூறினார்.
மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். முதல் கட்ட ஆய்வில் 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அரசு தரப்பில் இருந்து நிவாரணம் பெற்று தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி கூறுகையில், 'இந்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். நெல், நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் மழையால் சேதமடைந்துள்ளன. நெல்லுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அவை வடிந்த பின்பும் விவசாயிகளுக்கு செலவு உள்ளது. இந்த கதிர்களை அப்புறப்படுத்த வேண்டும், நிலத்தை மீண்டும் சரி செய்ய வேண்டும். எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'என்றார்.
Next Story






