என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் சீகம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). பல்காரரான இவர், சைக்கிளில் வீட்டில் இருந்து அப்பகுதியில் பால் ஊற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவதற்தாக புதுக்கோட்டை-கொடுபாலூர் சாலையில் சீகம்பட்டி விளக்கு அருகே வந்து திரும்பியபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆறுமுகம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கன்னியாப்பட்டி நாகராஜன் (34) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாதுராப்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் மாதுராப்பட்டி நெடுங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார், முருகேசன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகேசன் உறவினர்கள், நாங்கள் வருவதற்குள் உடலை எப்படி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
    பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் ராஜேந்திரன் காலில் கடித்தது. பாம்பு கடித்து விட்டதை பார்த்த ராஜேந்திரன் உடனடியாக வீட்டிற்கு வந்து தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது உறவினர்கள் ராஜேந்திரனை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி அருகே உள்ள திருவாப்பாடி கடைவீதியில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாப்பாடி டாஸ்மாக் அருகே கரகத்திக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வடகாடு அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள நெடுவாசல் மேல்பாதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக, நெடுவாசலில் இருந்து பேராவூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவணம் கைகாட்டி அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக திருக்கோர்ணம் அருகே உள்ள குன்னவயலை சேர்ந்த தேவதாஸ் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. மேலும் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

    கடந்த 22-ந்தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை முதற்கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 23-ந்தேதி 2- ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
    அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பத்மா தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அன்னவாசல் அருகே கூலி தொழிலாளி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே கிளிக்குடி விளாம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 67). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு வேலை இல்லாததால் ஊருக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று பழனிச்சாமி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் நள்ளிரவில் வீடு தேடி வந்த தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் நல்லையா (வயது 23). இவர் பிளஸ்-2 படித்து விட்டு கோவையில் உள்ள ஒரு பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சத்தால் தனது சொந்த ஊருக்கு வந்த வர் இங்கேயே தங்கி விட்டார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டிற்கும் தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் ஜான்சியும், நல்லையாவும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஜான்சியின் பெற்றோர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இதற்கிடையே பெங்ளூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜான்சியின் அண்ணன் பிரபு கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார்.

    அவரிடம் பெற்றோர்கள் தங்கையின் காதலைப் பற்றி கூறியுள்ளனர். இதனைக் கேட்ட பிரபு, நல்லையாவை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் நல்லையா பிரபுவின் மிரட்டலுக்கு அஞ்சால் ஜான்சியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.

    நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக ஜான்சியை தவிர வீட்டில் இருந்த அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த நல்லையா ஜான்சி வீட்டிற்கு வந்துள்ளார்.

    இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்துள்ளனர். கோவிலுக்கு சென்றவர்கள் திருவிழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர்.

    மாடியில் சிரிப்பு சத்தம் கேட்டதால் பிரபு அங்கு பார்த்தபோது, தங்கை ஜான்சியுடன் நல்லையா பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளார். பலமுறை கண்டித்தும் நீ என் தங்கையுடன் பழகுவதை நிறுத்த மாட்டாயா என்று ஆவேசமாக பிரபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரபு அருகில் கிடந்த கட்டையை எடுத்து நல்லையா தலையில் அடித்தார். இதில் நல்லையா படுகாயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த ஜான்சி கதறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து நல்லையா வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    நல்லையாவின் பெற்றோர்கள் தங்கள் மகனை தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வேண்டுதல்களை செலுத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

     முத்துமாரியம்மன் கோவில்


    அதேபோன்று இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டு களை ஏந்தி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் எடுத்து வந்த பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

    கோயில் முன்பாக பொதுமக்கள் மாவிளக்கு போட்டு விளக்குகள் ஏற்றியும், தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இதுபோன்று காமராஜபுரம் தொகுதியிலிருந்து யானை ஊர்வலத்துடன் செண்டை மேளம் முழங்க பூத் தட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன

    இதேபோன்று நகரின் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகளை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
    காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார்.
    விராலிமலை:

    காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட எல்லையான நாகமங்கலம் மற்றும் குன்னத்தூர் விலக்கு ஆகிய இடங்களில் திரளானோர் வரவேற்பு கொடுத்தனர். வழியெங்கும் வாழை மரம் மற்றும் கரும்புகளை கொண்டு தோரணங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமி வந்ததும் டிராக்டரில் ஏற்றினர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாக கோ‌ஷம் எழுப்பினர்.

    காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    விராலிமலை:

    தமிழத்தில் நீர்வள ஆதாரங்களை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் அனைத்து குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு அதன் மூலம் நிலத்தடி நீர்வள ஆதாரம் உறுதி செய்யப்படுகிறது.

    அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவாகவும் இது இருந்து வருகிறது.

    மழை வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் அதிக அளவிலான தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையும் வெளியிட்டது.

    காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

    ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக்கால் வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

    இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாயை உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாயை வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

    ரூ.14,400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

    காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.

    மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

    விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்றார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 8.27 மணிக்கு திருச்சி வருகை தந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஐ.ஜி. ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் முதல்வர் வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பினர். அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் குன்னத்தூர் சென்றனர்.

    திருச்சியில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். மேலும் 1 லட்சம் விவசாயிகள் திரண்டு நின்று காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
    ×