search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் கொலை"

    • தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது.
    • இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).

    கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந்தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாறசாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந்தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்ததும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக்கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா கொலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.

    • குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்றம் நடந்த இடத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • வழக்கில் குற்றம் நடந்த இடம் கிரீஷ்மா வீடு தான். எனவே தமிழக போலீசார் (பளுகல் போலீசார்) தான் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.

    மாணவர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் கேரள குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிக்க வேண்டுமா? கேரள போலீசார் தான் விசாரிக்க வேண்டுமா? என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஓரு குழப்பம் இருந்து வருகிறது.

    இதற்கு காரணம் கிரீஷ்மா வீடு இருப்பது, குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்தில். ஆனால் ஷாரோன்ராஜ் இறந்தது கேரள மாநிலம் பாறசாலை ஆஸ்பத்திரியில். அவரது பெற்றோர் தமிழக போலீசார் விசாரிப்பதை விரும்பவில்லை. அவர்கள் புகார் கொடுத்ததும் பாறசாலை போலீஸ் நிலையத்தில் தான்.

    அதன் அடிப்படையிலேயே கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுடன் தமிழக போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த வழக்கு கேரள போலீசார் வசமே உள்ளது. ஆனால் தொடர்ந்து வழக்கை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

    குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்றம் நடந்த இடத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி பார்த்தால், இந்த வழக்கில் குற்றம் நடந்த இடம் கிரீஷ்மா வீடு தான். எனவே தமிழக போலீசார் (பளுகல் போலீசார்) தான் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.

    இல்லாவிட்டால் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வழக்கு அமைந்து விடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    இதனால் வழக்கை கேரள போலீசாரே நடத்தலாமா? அல்லது தமிழக போலீசுக்கு மாற்றலாமா? என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

    இது தொடர்பாக கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி., மாநில அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கு தமிழக போலீசாருக்கு மாற்றப்படுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

    • ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், தனது மகன் கிரீஷ்மாவுடன் வெளியிடங்களுக்கு சென்று வந்த நாள் எல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
    • காதலனுடன் சுற்றுலா தலங்களில் கிரீஷ்மா இருக்கும் போட்டோக்களில் அவர் 2 குளிர்பான பாட்டில்கள் கையில் வைத்துள்ளார்.

    களியக்காவிளை:

    கேரள மாநிலம் பாறசாலை போலீஸ் சரகத்திற்குட்பட்ட முறியன் கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார். கேரளாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ், சிகிச்சை பலனின்றி 25-ந்தேதி இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், பாறசாலை போலீசில் புகார் கொடுத்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது ஷாரோன்ராஜ், குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவரது வீட்டுக்குச் சென்று வந்த பிறகு தான் தனது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையில் கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததில் தான் ஷாரோன்ராஜ் இறந்திருப்பது தெரிய வந்தது. இந்தக் கொலை தொடர்பாக கிரீஷ்மா, அவருக்கு உடந்தையாக தடயங்களை அழித்ததாக அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார். அவரை சம்பவம் நடந்த அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்ட நிலையில், கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால் அது நடக்கவில்லை.

    இதனால் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை, ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மறைக்கப்பட்ட விஷ பாட்டில் கைப்பற்றப்பட்டது.

    அதன்பிறகு கிரீஷ்மா வீட்டுக்கு போலீசார் 'சீல்' வைத்து சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணையை தொடங்கினர்.

    அவரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டபோது, வீட்டிற்கு போலீசார் வைத்த 'சீல்' உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தடயங்களை அழிக்க யாரோ முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி கிரீஷ்மாவை நேற்று அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது காதலன் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது எப்படி? என கிரீஷ்மா நடித்துக் காண்பித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த குளிர்பானம் மற்றும் ஷாரோன்ராஜ் அங்கு உணவு சாப்பிட்ட தட்டு போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன்ராஜை கொலை செய்ய கிரீஷ்மா கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்திருக்கும் தகவலும் கிடைத்தது.

    ஏற்கனவே ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், தனது மகன் கிரீஷ்மாவுடன் வெளியிடங்களுக்கு சென்று வந்த நாள் எல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது 'ஜூஸ் சேலஞ்ச்' விவகாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    2 குளிர்பான பாட்டில்களை வாங்கி ஒன்றை தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை காதலன் ஷாரோன்ராஜிடம் கிரீஷ்மா கொடுத்து விடுவாராம். பின்னர் 2 பேரும் முதலில் யார் குடிப்பது என 'ஜூஸ் சேலஞ்ச்' நடத்தி உள்ளனர். இதில் ஷாரோன்ராஜிக்கு கொடுத்த குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், காதலனுடன் சுற்றுலா தலங்களில் கிரீஷ்மா இருக்கும் போட்டோக்களில் அவர் 2 குளிர்பான பாட்டில்கள் கையில் வைத்துள்ளார்.

    இந்த தகவல்களின் அடிப்படையில், கிரீஷ்மாவை அவர் ஷாரோன்ராஜுடன் சென்ற சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காளிகேசம் அழைத்து வந்து அங்கு அறை எடுத்து தங்கியது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கேரளா மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பாறசாலை போலீசார் மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
    • போலீசாரின் விசாரணை திருப்தியில்லை என ஜெயராஜன் கூறியதையடுத்து, வழக்கு விசாரணை திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவருக்கும் குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்ததும், ஷாரோன்ராஜ் தனது நண்பருடன் காதலி வீட்டுக்குச் சென்றார். நண்பரை வெளியில் விட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று திரும்பியதும் உடல் நலம் பாதிப்புக்குள்ளானார்.

    காதலி குளிர்பானம் கொடுத்ததாக ஷாரோன் ராஜ் நண்பரிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கவே, தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மூறியன் கரைக்குச் சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    தனது மகன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக பாறசாலை போலீசில் ஷாரோன்ராஜ் தந்தை ஜெயராஜன் புகார் செய்தார்.

    கேரளா மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாறசாலை போலீசார் மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவர்களது விசாரணை திருப்தியில்லை என ஜெயராஜன் கூறியதையடுத்து, வழக்கு விசாரணை திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, பல்வேறு தடயங்களை சேகரித்தனர். காதலி கிரீஷ்மா தான், ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியானது. அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். முதலில் தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய கிரீஷ்மா, பின்னர் ஒப்புக்கொண்டார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தடயத்தை அழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார், விஷ பாட்டிலையும் கைப்பற்றினர்.

    இதற்கிடையில், போலீஸ் விசாரணையின் போது, கழிவறை செல்வதாக கூறிச்சென்ற கிரீஷ்மா, கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் நேற்று மாலை நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவரிடம் விசாரணை நடத்த இருப்பதால், 7 நாள் காவல் வழங்க கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கிரீஷ்மாவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இது ஒரு தவறான வழக்கு. ஷாரோன்ராஜ் ஏதோ ஒரு விஷம் அருந்தியுள்ளார் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அதை யார் கொடுத்தார்? என்ன விஷம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கிரீஷ்மாவின் வீட்டுக்கு ஏன் ஷாரோன்ராஜ் விஷம் கொண்டு சென்று இருக்கக் கூடாது? இந்த வழக்கில் தற்போது எந்த ஆதாரமும் போலீசாரிடம் இல்லாததால் ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே கிரீஷ்மாவை காவலில் எடுக்கிறார்கள் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரீஷ்மாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதே நேரம் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்து, கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையில் சிந்து, நிர்மல்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களும், நெய்யாற்றின் கரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்த கோர்ட்டு, 2 பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது, கிரீஷ்மாவை, அவரது வீட்டுக்கு அழைத்து வந்து, ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது. தற்போது அந்த வீடு பூட்டப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே சிந்து மற்றும் நிர்மல்குமாரை இங்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் விஷ பாட்டிலை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஷாரோன்ராஜ் இறந்தது கேரள மாநிலத்தில் என்றாலும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, காதலி கிரீஷ்மா வீடு இருப்பது எல்லாம் தமிழக போலீஸ் எல்லையில் தான் உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிப்பார்கள் என பரவலான கருத்து நிலவி வந்தது. மேலும் இரு மாநில போலீசாரும் இணைந்து வழக்கை கையாள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வழக்கை தமிழகத்திற்கு மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரே விசாரணை நடத்துவார்கள் என கேரள மாநில முதல்-மந்திரியின் தனி செயலாளர் ராஜேஷ் உறுதி அளித்துள்ளதாக ஷாரோன் ராஜின் தந்தை ஜெயராஜன் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையில், நெய்யாற்றின் கரை கோர்ட்டு, இரு மாநில போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தலாம் என கூறியுள்ளது. எனவே, குமரி மாவட்ட போலீசார் உதவியுடன், கேரள போலீசார் கிரீஷ்மா வீட்டுக்கு வந்து விசாரணை தொடங்குவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
    • வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை, நீல நிற ஆசிட் பாட்டில்கள், குளக்கரையில் வீசப்பட்ட விஷ பாட்டில்கள் ஆகியவற்றை மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23). கல்லூரி மாணவர்.

    இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. கிரீஷ்மா தனியார் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

    ஷாரோன் ராஜ்-கிரீஷ்மா இருவரும் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள். இதனால் கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை பேசி முடிவு செய்தனர்.

    பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புக்கொண்டார். இதனை காதலன் ஷாரோன் ராஜிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதனால் மனம் உடைந்த கிரீஷ்மா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஷாரோன் ராஜை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு குளிர்பானம் மற்றும் கஷாயம் கொடுத்தார். அதனை குடித்த ஷாரோன் ராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக ஷாரோன் ராஜ் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷாரோன் ராஜ் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். முதலில் காதலனுக்கு விஷம் கொடுக்கவில்லை என மறுத்த கிரீஷ்மா, பின்னர் போலீசார் அதற்கான ஆதாரங்களை காட்டிய போது ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கும் முயன்றார்.

    இதற்கிடையே கிரீஷ்மா, அவரது காதலனை கொலை செய்ய அவரது தாயார் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் ஆகியோரும் உதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர்கள் ஷாரோன் ராஜூக்கு கொடுத்த விஷ பாட்டிலை வீட்டின் அருகில் உள்ள குளக்கரையில் வீசியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர்.

    வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை, நீல நிற ஆசிட் பாட்டில்கள், குளக்கரையில் வீசப்பட்ட விஷ பாட்டில்கள் ஆகியவற்றை மீட்டனர்.

    தடயங்கள் அனைத்தையும் கைப்பற்றிய பின்பு இருவரையும் மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த வழக்கை குமரி மாவட்ட போலீசார் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கொலையுண்ட ஷாரோன் ராஜின் வீடு கேரள பகுதியில் உள்ளது. காதலனை கொலை செய்ததாக கைதான கிரீஷ்மாவின் வீடு குமரி மாவட்ட எல்லையான பளுகல் பகுதியில் அமைந்துள்ளது.

    இதனால் வழக்கு விசாரணைக்கும், தடயங்களை சேகரிக்கவும், ஆதாரங்களை திரட்டவும் கேரள போலீசார் குமரி மாவட்டத்திற்கு வரவேண்டியதாக உள்ளது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றலாமா? என்று கேரள போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    • கிரீஷ்மாவை போலீசார் நெடுமங்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
    • கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்துவிட்டு சென்ற கிரீஷ்மா, அங்கிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23).

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

    கிரீஷ்மாவும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இத்தகவல் அறிந்த ஷாரோன் ராஜ், நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டிற்கு சென்றார்.

    அங்கு காதலியை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே நண்பர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது பற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் விஷமருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜின் காதலி கிரீஷ்மாவே அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதை அறிந்த ஷாரோன் ராஜின் பெற்றோர், ஷாரோன் ராஜை அவரது காதலியும், அவரது குடும்பத்தாரும் திட்டமிட்டு கொன்று விட்டதாக புகார் கூறினர்.

    அதில் கிரீஷ்மாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், அவருக்கு திருமணமானால் முதல் கணவர் இறந்து விடுவார் என கூறியதாகவும், அதன் காரணமாகவே அவர் ஷாரோன் ராஜை ரகசிய திருமணம் செய்துவிட்டு அவரை கொன்று விட்டதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீஷ்மாவை கைது செய்தனர். முதலில் கொலையை ஒப்புக்கொள்ள மறுத்த கிரீஷ்மா, அவர் கூகுளில் கொலை செய்வது எப்படி? என்ற தகவலை தேடிய விபரத்தை காட்டினர். அதனை பார்த்ததும் கிரீஷ்மா, காதலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் நெடுமங்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்துவிட்டு சென்ற கிரீஷ்மா, அங்கிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா விசாரணை நடத்தினார்.

    இதில் போலீஸ் நிலைய விதிகளுக்கு முரணாக கிரீஷ்மாவை கழிவறைக்கு அழைத்து சென்ற பெண் போலீசார் காயத்திரி மற்றும் சுமா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ஷாரோன் ராஜ் கொலை விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஷாரோன் ராஜ், காதலி வீட்டுக்கு சென்ற போது அதனை கிரீஷ்மாவின் தாயார் பார்த்துள்ளார். ஆனால் அவர் உடனடியாக வீட்டுக்கு செல்லவில்லை.

    இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஷாரோன் ராஜூக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் தாயார் அழித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மாவின் தாயார் மற்றும் மாமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களையும், கிரீஷ்மாவுடன் சேர்த்து வைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்
    • ஷாரோன்ராஜ் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஷாரோன்ராஜ், நண்பர் ஒருவருடன் காதலி வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து திரும்பி வந்தவர், வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். உடனே அவர் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன்ராஜை அவரது காதலி குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக கூறியிருந்தனர்.

    மேலும் ஷாரோ ன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டு கொன்றுவிட்டு, கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் கூறினார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏடிஜிபி அஜித் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் ஷாரோன்ராஜின் காதலி கிரீஸ்மாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் காதலன் ஷாரோன்ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். காதலனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    ஷாரோன் ராஜூம் நானும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அடிக்கடி இருவரும் வெளியூர்களுக்கு சென்று வந்தோம். ஷாரோன் ராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை நான் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கிடையே பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை நான் ஷாரோன் ராஜிடம் தெரிவித்தேன். மேலும் என்னை மறந்து விடும்படியும் கூறினேன்.

    ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்தார். இதனால் நான் அவரை வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி போலீஸ் ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் கூறும்போது, ஷாரோன் ராஜின் தந்தை மூடநம்பிக்கை காரணமாக தனது மகனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

    அதாவது கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறியிருப்பதாகவும், அதற்காக அவருக்கு இன்னொருவருடன் திருமண ஏற்பாடு செய்து விட்டு தனது மகனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

    கேரளாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இப்போது மூடநம்பிக்கை காரணமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×