search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலனை கொல்ல 3 மாதங்களாக ஜூஸ் சேலஞ்ச் நடத்திய கிரீஷ்மா- வீட்டில் நடித்துக் காட்டியதை கண்டு போலீசார் அதிர்ச்சி
    X

    ஜூஸ் பாட்டிலுடன் கிரீஷ்மா - ஷாரோன் ராஜ்.

    காதலனை கொல்ல 3 மாதங்களாக 'ஜூஸ் சேலஞ்ச்' நடத்திய கிரீஷ்மா- வீட்டில் நடித்துக் காட்டியதை கண்டு போலீசார் அதிர்ச்சி

    • ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், தனது மகன் கிரீஷ்மாவுடன் வெளியிடங்களுக்கு சென்று வந்த நாள் எல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
    • காதலனுடன் சுற்றுலா தலங்களில் கிரீஷ்மா இருக்கும் போட்டோக்களில் அவர் 2 குளிர்பான பாட்டில்கள் கையில் வைத்துள்ளார்.

    களியக்காவிளை:

    கேரள மாநிலம் பாறசாலை போலீஸ் சரகத்திற்குட்பட்ட முறியன் கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார். கேரளாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ், சிகிச்சை பலனின்றி 25-ந்தேதி இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், பாறசாலை போலீசில் புகார் கொடுத்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது ஷாரோன்ராஜ், குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவரது வீட்டுக்குச் சென்று வந்த பிறகு தான் தனது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையில் கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததில் தான் ஷாரோன்ராஜ் இறந்திருப்பது தெரிய வந்தது. இந்தக் கொலை தொடர்பாக கிரீஷ்மா, அவருக்கு உடந்தையாக தடயங்களை அழித்ததாக அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார். அவரை சம்பவம் நடந்த அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்ட நிலையில், கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால் அது நடக்கவில்லை.

    இதனால் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை, ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மறைக்கப்பட்ட விஷ பாட்டில் கைப்பற்றப்பட்டது.

    அதன்பிறகு கிரீஷ்மா வீட்டுக்கு போலீசார் 'சீல்' வைத்து சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணையை தொடங்கினர்.

    அவரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டபோது, வீட்டிற்கு போலீசார் வைத்த 'சீல்' உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தடயங்களை அழிக்க யாரோ முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி கிரீஷ்மாவை நேற்று அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது காதலன் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது எப்படி? என கிரீஷ்மா நடித்துக் காண்பித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த குளிர்பானம் மற்றும் ஷாரோன்ராஜ் அங்கு உணவு சாப்பிட்ட தட்டு போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன்ராஜை கொலை செய்ய கிரீஷ்மா கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்திருக்கும் தகவலும் கிடைத்தது.

    ஏற்கனவே ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராமன், தனது மகன் கிரீஷ்மாவுடன் வெளியிடங்களுக்கு சென்று வந்த நாள் எல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது 'ஜூஸ் சேலஞ்ச்' விவகாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    2 குளிர்பான பாட்டில்களை வாங்கி ஒன்றை தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை காதலன் ஷாரோன்ராஜிடம் கிரீஷ்மா கொடுத்து விடுவாராம். பின்னர் 2 பேரும் முதலில் யார் குடிப்பது என 'ஜூஸ் சேலஞ்ச்' நடத்தி உள்ளனர். இதில் ஷாரோன்ராஜிக்கு கொடுத்த குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், காதலனுடன் சுற்றுலா தலங்களில் கிரீஷ்மா இருக்கும் போட்டோக்களில் அவர் 2 குளிர்பான பாட்டில்கள் கையில் வைத்துள்ளார்.

    இந்த தகவல்களின் அடிப்படையில், கிரீஷ்மாவை அவர் ஷாரோன்ராஜுடன் சென்ற சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காளிகேசம் அழைத்து வந்து அங்கு அறை எடுத்து தங்கியது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×