search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலி கிரீஷ்மா, தாயார், மாமாவுக்கு போலீஸ் காவல்- 3 பேரையும் தனி இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை
    X

    கிரீஷ்மா - ஷாரோன்ராஜ்

    காதலி கிரீஷ்மா, தாயார், மாமாவுக்கு போலீஸ் காவல்- 3 பேரையும் தனி இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை

    • கேரளா மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பாறசாலை போலீசார் மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
    • போலீசாரின் விசாரணை திருப்தியில்லை என ஜெயராஜன் கூறியதையடுத்து, வழக்கு விசாரணை திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவருக்கும் குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்ததும், ஷாரோன்ராஜ் தனது நண்பருடன் காதலி வீட்டுக்குச் சென்றார். நண்பரை வெளியில் விட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று திரும்பியதும் உடல் நலம் பாதிப்புக்குள்ளானார்.

    காதலி குளிர்பானம் கொடுத்ததாக ஷாரோன் ராஜ் நண்பரிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கவே, தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மூறியன் கரைக்குச் சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    தனது மகன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக பாறசாலை போலீசில் ஷாரோன்ராஜ் தந்தை ஜெயராஜன் புகார் செய்தார்.

    கேரளா மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாறசாலை போலீசார் மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவர்களது விசாரணை திருப்தியில்லை என ஜெயராஜன் கூறியதையடுத்து, வழக்கு விசாரணை திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, பல்வேறு தடயங்களை சேகரித்தனர். காதலி கிரீஷ்மா தான், ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியானது. அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். முதலில் தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய கிரீஷ்மா, பின்னர் ஒப்புக்கொண்டார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தடயத்தை அழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார், விஷ பாட்டிலையும் கைப்பற்றினர்.

    இதற்கிடையில், போலீஸ் விசாரணையின் போது, கழிவறை செல்வதாக கூறிச்சென்ற கிரீஷ்மா, கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் நேற்று மாலை நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவரிடம் விசாரணை நடத்த இருப்பதால், 7 நாள் காவல் வழங்க கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கிரீஷ்மாவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இது ஒரு தவறான வழக்கு. ஷாரோன்ராஜ் ஏதோ ஒரு விஷம் அருந்தியுள்ளார் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அதை யார் கொடுத்தார்? என்ன விஷம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கிரீஷ்மாவின் வீட்டுக்கு ஏன் ஷாரோன்ராஜ் விஷம் கொண்டு சென்று இருக்கக் கூடாது? இந்த வழக்கில் தற்போது எந்த ஆதாரமும் போலீசாரிடம் இல்லாததால் ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே கிரீஷ்மாவை காவலில் எடுக்கிறார்கள் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரீஷ்மாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதே நேரம் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்து, கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையில் சிந்து, நிர்மல்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களும், நெய்யாற்றின் கரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்த கோர்ட்டு, 2 பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது, கிரீஷ்மாவை, அவரது வீட்டுக்கு அழைத்து வந்து, ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது. தற்போது அந்த வீடு பூட்டப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே சிந்து மற்றும் நிர்மல்குமாரை இங்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் விஷ பாட்டிலை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஷாரோன்ராஜ் இறந்தது கேரள மாநிலத்தில் என்றாலும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, காதலி கிரீஷ்மா வீடு இருப்பது எல்லாம் தமிழக போலீஸ் எல்லையில் தான் உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிப்பார்கள் என பரவலான கருத்து நிலவி வந்தது. மேலும் இரு மாநில போலீசாரும் இணைந்து வழக்கை கையாள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வழக்கை தமிழகத்திற்கு மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரே விசாரணை நடத்துவார்கள் என கேரள மாநில முதல்-மந்திரியின் தனி செயலாளர் ராஜேஷ் உறுதி அளித்துள்ளதாக ஷாரோன் ராஜின் தந்தை ஜெயராஜன் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையில், நெய்யாற்றின் கரை கோர்ட்டு, இரு மாநில போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தலாம் என கூறியுள்ளது. எனவே, குமரி மாவட்ட போலீசார் உதவியுடன், கேரள போலீசார் கிரீஷ்மா வீட்டுக்கு வந்து விசாரணை தொடங்குவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×