search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக இளம்பெண்ணின் தாய் கைது
    X

    காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக இளம்பெண்ணின் தாய் கைது

    • கிரீஷ்மாவை போலீசார் நெடுமங்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
    • கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்துவிட்டு சென்ற கிரீஷ்மா, அங்கிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23).

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

    கிரீஷ்மாவும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இத்தகவல் அறிந்த ஷாரோன் ராஜ், நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டிற்கு சென்றார்.

    அங்கு காதலியை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே நண்பர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது பற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் விஷமருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜின் காதலி கிரீஷ்மாவே அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதை அறிந்த ஷாரோன் ராஜின் பெற்றோர், ஷாரோன் ராஜை அவரது காதலியும், அவரது குடும்பத்தாரும் திட்டமிட்டு கொன்று விட்டதாக புகார் கூறினர்.

    அதில் கிரீஷ்மாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், அவருக்கு திருமணமானால் முதல் கணவர் இறந்து விடுவார் என கூறியதாகவும், அதன் காரணமாகவே அவர் ஷாரோன் ராஜை ரகசிய திருமணம் செய்துவிட்டு அவரை கொன்று விட்டதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீஷ்மாவை கைது செய்தனர். முதலில் கொலையை ஒப்புக்கொள்ள மறுத்த கிரீஷ்மா, அவர் கூகுளில் கொலை செய்வது எப்படி? என்ற தகவலை தேடிய விபரத்தை காட்டினர். அதனை பார்த்ததும் கிரீஷ்மா, காதலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் நெடுமங்காடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்துவிட்டு சென்ற கிரீஷ்மா, அங்கிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா விசாரணை நடத்தினார்.

    இதில் போலீஸ் நிலைய விதிகளுக்கு முரணாக கிரீஷ்மாவை கழிவறைக்கு அழைத்து சென்ற பெண் போலீசார் காயத்திரி மற்றும் சுமா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ஷாரோன் ராஜ் கொலை விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஷாரோன் ராஜ், காதலி வீட்டுக்கு சென்ற போது அதனை கிரீஷ்மாவின் தாயார் பார்த்துள்ளார். ஆனால் அவர் உடனடியாக வீட்டுக்கு செல்லவில்லை.

    இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஷாரோன் ராஜூக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் தாயார் அழித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மாவின் தாயார் மற்றும் மாமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களையும், கிரீஷ்மாவுடன் சேர்த்து வைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×