என் மலர்
புதுக்கோட்டை
- நூற்பாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
- அதிகாரிகளின் பேச்சுவார்தையில் சமரசம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இவ்வாலையில் நிரந்தர பணியாளர்கள் 72 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 300க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர். ஆலையிலிருந்து மாதந்தோறும் சுமார் 200 டன் நூல் நூற்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் ஆலை நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிர்வாகத்தினர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாள் ஊதியம் ரூ 420 ஐ பாதியாக குறைத்து வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் நாள் ஊதியம் போன்று அல்லாமல் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று வேலையை நிறுத்திவிட்டு ஆலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஏற்கனவே பழைய முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,ஆலை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் தொழிலாளர்க ளோடு பேச்சுவார்த்தை நடத்தி உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் வரை மீண்டும் பழைய முறையே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
- விலை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வெள்ளாள விடுதி அருகே உள்ள துணை மின் நிலையத்திற்கு தூத்துக்குடியில் இருந்து உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் மின் கோபுர பணிகள் நடைபெற்று வருகிறது.
விளை நிலங்களில் அமைக்கப்படும் மின் கோபுரங்களுக்கான இழப்பீடுகளை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்காமலும், மேலும் கடந்த ஆறு மாத காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படாத இழப்பீடு தொகையை உடனே வழங்க கோரியும் விவசாயிகள் புதிய மின் கோபுரம் அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கந்தர்வகோட்டை தாலுக்கா அலுவலகம் அருகே புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து கந்தர்வகோட்டை தி.மு.க. நகர செயலாளர் ராஜா, மின்சாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விளை நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் மின்சார துறை உயர் அதிகாரிகள் வழங்கினார்கள். இதனால் விவசாயிகள் மின் கோபுரம்அமைப்பதற்கான எதிர்ப்பை கைவிட்டனர்.
- கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது
- மாற்றுத்திறனாளிகளுக்கான
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் அடைக்கப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மருத.பவுன்ராஜ் முன்னிலை வகித்தார்.பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, ஊக்குவித்தல், கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் லீலா ராணி, அறிவழகன், ராதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து, நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
- கண்மாய் நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்
- மகனுடன் குளிக்க சென்ற போது சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், தனது தாயார் மற்றும் 5 வயது மகனுடன் நேற்று மாலை செம்பூதி கிராமத்தில் உள்ள செங்கண்மாய் கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.
சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பி இருந்த நிலையில் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இருவரும் நீரில் தத்தளித்த நிலையில், தாயார் ஐந்து வயது மகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் ராஜாவை காப்பாற்ற முயன்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான குழுவினர் நீரில் மூழ்கிய ராஜாவை நேற்று இரவில் இருந்தே தீவிரமாக தேடி அவரது உடலை இன்று காலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ராஜாவின் உடன் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- ஆலங்குடி மாணவன் முதல் இடம் பிடித்துள்ளார்
- மாநில அளவில் கலை பண்பாட்டு போட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பானவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் முருகானந்தம். இவர் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலை பண்பாட்டு கலாச்சார திருவிழா போட்டியில் முருகானந்தம் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவனை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமத்து மக்கள் பாராட்டினர்.
- நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது
- ஆலங்குடி தாலுகாவில் நாளை நடக்கிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் பாசன பகுதிகளான அக்கினி ஆறு, அம்புலி ஆறு தெற்கு வெள்ளாறு என மொத்தம் 2812 ஹெக்டர் நீர் பாசன வசதி உள்ளது. பாசன குளங்கள் மற்றும் ஏரிகளில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் 34 சங்கங்கள் உள்ளது. பாசன குளங்களை இணைத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சங்கங்களுக்கு தலா ஒரு தலைவர் என 34 தலைவர் மற்றும் 91 ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகள் மொத்தம் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனு வாபஸ், தள்ளுபடி, போட்டியின்றி தேர்வு போக மீதம் 9 இடங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பொது தேர்தலை மிஞ்சும் வகையில் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இந் த தேர்தலில் விவசாயிகள் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி 9 இடங் களில் நடக்கும் தேர்தலை யொட்டி பள்ளிகளில்அனைத்து வசதிகளும் இருக்கிறதா என மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா- புஷ்பராஜ் முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
- சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
புதுக்கோட்டை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை நடத்திய உலகத்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஆறு மாத கால சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
மிக இளம் வயதிலேயே திறனாய்வாளர்களைக் கண்டறிவது விளையாட்டு திறமையினை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடைப்பந்து விளையாட்டில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து, அதில் தேர்வு செய்யப்படும் 10 மாணவியர் மற்றும் 10 மாணவர் களுக்கு 6 மாத காலத்திற்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய உலக உடற்திறனாய்வு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள். 2020-2021 மற்றும் 2021-2022 மற்றும் 2022-2023 (தேர்வு நாள் வரை) ஆகிய கல்வியாண்டுகளில் அரசு, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவ,மாணவியா; இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளுக்கு அவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.
சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 14 வயதிற்குட்பட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் இணைய தள முகவரியில் வரும் 25தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான சேர்க்கை வரும் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் முள்ளுர் தரிசு நிலத் தொகுப்பு திட்டப் பணிகளின்கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் மற்றும் உயிர் உரங்களை வழங்கினார்.
- கந்தர்வகோட்டையில் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டது
- ஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுக்கோட்டை சாலையில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையம் என்ற குழந்தைகள் காப்பகம் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நடைமுறையை எதிர்த்து குழந்தைகள் காப்பக நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. அலுவலகத்தில் பெறப்பட்ட ஆவணங்களையும், சீல் வைக்கப்பட்ட நிர்வாகத்தின் அலுவலகத்தை திறக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி புதுக்கோட்டை சமூக நலத்துறை அலுவலர்கள், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
- மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- கூடுதல் பேருந்து சேவை கோரி நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையிலிருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி கேட்டு கடந்த ஆறு மாதமாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரி மற்றும் அரசு விடுதி மாணவ, மாணவிகள் , காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை பணிமனை மேலாளர் தாமோதரன் கந்தர்வகோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள் இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது
- மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில்
புதுக்கோட்டை,
மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில், முதல்வர் ஜலஜாகுமாரி முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.
இணைத்தலைவர் பேசும் போது, மாணவர்கள் தெளிந்த சிந்தனையோடு , கற்பதை ஆழமாக கற்று , சாதனை ஒன்றை நோக்கமாக கொண்டு, இலக்கு நோக்கி நேர்கொண்ட பாதையில் பயணிக்க வேண்டும். நன்மை தீமை என்ற இரண்டு பக்கங்கள் கொண்ட வாழ்க்கையில் நன்மையை பற்றிக் கொண்டு , தீமையில் இருந்து விலகி நடக்க வேண்டும் என்றார்.
ஆசிரிய ஆசிரியைகளின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்வாக இருந்தது என்று கூறி, பள்ளியின் முதல்வர் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
- கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தமிழக அரசை கண்டித்து நடந்தது
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் பா.ஜ.க. சார்பில் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தவமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் பழ செல்வம் கலந்து கொண்டார் ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் தங்கவேல், கார்த்திகேயன், அருண், கமலக்கண்ணன், பவுன்ராஜ், சந்திரன், முத்துமணி, ராம்குமார், முத்துக்குமார், கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






