என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சிமெண்டு சாலைகள் இல்லாத தெருக்களில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கவும், ஏற்கனவே சாலைகள் இருக்கும் பகுதிகளில் புதிய கழிவுநீர் வாய்க்கால்களை அமைக்கவும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, எறையூர் பகுதியில் சிப்காட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர் அதனை சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
- மங்களமேடு அருகே புள்ளிமான் இறந்தது
- மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஒகலூர் கிழக்கு கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
- திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யபட்டார்
- நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் யானை, சிம்மம், ரிஷப வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அக்னி மிதித்தல், பொங்கல் வழிபாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பிரதான நான்கு வீதிகளின் வழியே இழுத்து வரப்பட்டு நேற்று மாலை நிலையை அடைந்தது. அதனைத்தொடர்ந்து பிராய்சித்த வழிபாடு நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் கிராம கரைக்காரர்கள் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராடுதல், விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
- தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர்
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்லூரை சேர்ந்தவர் அருள் (வயது 36). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டு கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவன வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அருள், தனது மனைவி கீர்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெட்ரோலுடன் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மங்களமேடு உட்கோட்டத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
- மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) சங்கர் உடனிருந்தார். பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்), பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் :
பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் தாலுகா வடக்குமாதவி கிராமத்தில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகா பரவாய் (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
- சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர்-பெரம்பலூர் சாலையின் மத்தியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு தினமும் மாலை எரியூட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதோடு இதனை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டி எரிப்பதனால் மக்கும் குப்பைகளும் வீணாகிறது. நிலமும், காற்றும் மாசடைகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை முறையாக பெற்று மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதோடு மக்காத குப்பைகளை முறையாக கையாள குன்னம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
- 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
பெரம்பலூர்,
திரைப்பட இயக்குனர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து தமிழ் தேசம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று அப்துல் ரஹ்மான் தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள மதுபான பாரில், தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.
அப்போது பாருக்கு மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் பட்டப்பகலில் தனியார் மதுபான பாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூரில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கூட்டமைப்பு தலைவரை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டு உள்ளார்
- 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அங்கேயே தரையில் கொட்டி அழித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 59) தனது வயலில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அதனை அதே இடத்தில் தரையில் ஊற்றி அழித்தனர்.
- பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தினர், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத பெரம்பலூரை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகள்-பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் அமையும் வகையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார்.இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்விக்குழும செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர், கல்வியியல் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு மூலிகை தாவரம்-மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா வரை நடந்தது.






