என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வாகனம் மோதி மூதாட்டி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரில் இருந்து எதுமலை செல்லும் சாலையில் ஒரு வயல் அருகே நேற்று முன்தினம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த மூதாட்டி சிகப்பு, வாடாமல்லி நிற சேலை அணிந்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் இறந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
    • விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

    பெரம்பலூர்,

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5-ந்தேதி அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் சென்ற வேன், முன்னால் சென்ற டிராக்டரை முந்தியபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அரணாரையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45), காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ், ஆம்புலன்ஸ் மீது மோதியதில் டிரைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் இந்த விபத்தில் புதுப்பெண், முதியவர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை நேற்று கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கினார்.

    • தேசிய மூங்கில் இயக்க திட்டத்தின் கீழ் பயனடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

    பெரம்பலூர்:

    தேசிய மூங்கில் இயக்க திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் பொது நிலம் கொண்ட ஊராட்சி (அல்லது) பஞ்சாயத்து வாரியம், அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மாணவ-மாணவியர் விடுதிகள் போன்ற இடங்களில் மூங்கில் கன்றுகளை நடவு செய்வதற்காக பொருள் இலக்கீடு 12 எக்டரும் மற்றும் நிதி இலக்கீடு ரூ.6 லட்சமும் பெறப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபர் நடவு செய்வதற்காக பொருள் இலக்கீடு 5 எக்டரும் மற்றும் நிதி இலக்கீடு ரூ.1¼ லட்சமும் பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயனடைந்து பலன்பெறுமாறு அனைத்து விவசாயிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 23-ந்தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டது
    • 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 10 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 2 உறுப்பினர்களும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேட்பு மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்று கொள்ளப்படும். கடந்த 7-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 12-ந்தேதி காலை 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 14-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 23-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். 28-ந்தேதி முதல் கூட்டம் நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது
    • பணி்யை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விழுப்புரம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு சாலைகளின் ஓரங்களில் 5 ஆயிரம் எண்ணிக்கைகள் கொண்ட பலவகை மரக்கன்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் புறவழிச்சாலையில் ஆலம்பாடி பகுதியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டங்களின் பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது பிறந்த நாள் மற்றும் திருமண விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலின் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடினார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் நேற்று முன்தினம் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டு தெருவை சேர்ந்த மனோகரனின் மகன் அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, வடமலை சந்துவை சேர்ந்த சேகரின் மகன் நவீன் (20), நவல்பட்டு பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), அவரது மனைவி ரமணி (34), பெரம்பலூர் அருகே செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலின் மகன் நவீன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி தரப்புக்கும், கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்கில் கைதாகி அழகிரி தற்போது சிறையில் உள்ளதால், அப்துல்ரகுமான் கட்ட பஞ்சாயத்தில் அதிகளவில் ஈடுபட்டதால் அழகிரி தரப்புக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் அழகிரிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வாக்கு குறைந்து வந்ததாம்.

    இதனால் சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கூட்டாளிகளை வைத்து அப்துல் ரகுமானை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ரமணி அழகிரியின் தங்கை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைதான 6 பேரையும் போலீசார் பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் அபினாஷ் நவீன், மற்றொரு நவீன், பிரேம் ஆனந்த் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், ரமணியை திருச்சி மகளிர் சிறையிலும், சிறுவனை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சங்கீதாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமான் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஏற்கனவே ஒரு வாலிபர் சரண் அடைந்திருந்தார். இந்தநிலையில், பெரம்பலூர் வரகுபாடியை சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (31) நேற்று காலை திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அகரம்சீகூரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்ற வருகிறது
    • சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குன்னம் தாலுகா, அகரம்சீகூர் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் மது பாட்டில்களை விற்பனை செய்த அத்தியூர் வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 47) என்பவர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அங்கிருந்த 94 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய உற்சவ சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மதியம் 12 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் சுவாமி குடிவிடுதலுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
    • மாணவ-மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    2023-2024-ம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவம் மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10 சதவீதம்) பிற வகுப்பினர்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் விடுதிகளில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணை சீருடைகளும், 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் இலவசமாக வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை 2023-2024-ம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சிமெண்டு சாலைகள் இல்லாத தெருக்களில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கவும், ஏற்கனவே சாலைகள் இருக்கும் பகுதிகளில் புதிய கழிவுநீர் வாய்க்கால்களை அமைக்கவும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், அப்பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, எறையூர் பகுதியில் சிப்காட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர் அதனை சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • மங்களமேடு அருகே புள்ளிமான் இறந்தது
    • மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஒகலூர் கிழக்கு கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    • திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யபட்டார்
    • நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×