என் மலர்
பெரம்பலூர்
- வாலிபால் அசோசியேஷன் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சங்க அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் அதியமான், பொருளாளர் செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14,17,19 வயது அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடத்துவது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வயது அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடத்துவது, கிராமப்புறங்களில் அதிகளவில் வாலிபால் போட்டி நடத்தி வீரர்களை தேர்ந்தெடுப்பது, மாநில வாலிபல் போட்டிக்கு நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு பாராட்டு தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர்கள் வக்கீல் செந்தில்நாதன், ஹரிபாஸ்கர், துணை செயலாளர் துரைகாமராஜ். சன்சம்பத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குன்னம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13.40 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
- வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 13 கோடி 40 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். காரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் பூங்காவைச் சுற்றி ரூ. 7 கோடியே 89 லட்சம் செலவில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம், நாரணமங்கலம் முதல் சிறுகன்பூர் வரை ரூ.1கோடியே 51 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியையும், மருதையான் கோவில் முதல் கீழமாத்தூர் வரை ரூ.76 லட்சத்து 15 ஆயிரம் செலவிலும், கொளத்துார் முதல் அருணகிரிமங்கலம் வரை ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிலும், மேலமாத்தூர் முதல் இலந்தங்குழி வரை ரூ.1 கோடி 62 லட்சம் செலவிலும், மொத்தம் ரூ.5 கோடி50 லட்சம் செவில சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் அறிவித்ததன் பேரில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தில் தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றி முள்வேலி அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம், மேல்நிலைத் தொட்டி கட்டுதல் பணி உள்ளிட்ட பணிகள் ரூ.7.89 கோடியில் ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் 436 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாவலர் அறை மற்றும் கண்காணிப்பு கோபுரம் 269 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாப்பு முள் வேலி 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கடல் கொண்ட பூமியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் தற்போது தொல்லுயிர் எச்சங்களின் பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது. தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் புவியியல் ரீதியாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த பணி பெரிய முன்னெடுப்பாக அமையும்.
அருகிலுள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா தற்போது சுற்றுலா தளமாக மாறி வருவதை போல எதிர்காலத்தில் இந்த காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவும் சுற்றுலா தளமாக அமையும். எதிர்காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு ஆய்வு செய்யும் வகையில் பயன்படுவதோடு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேப்பூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டி வழங்கப்பட்டது
- நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு பேட்டரி வண்டிகளை வழங்கினார்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரை அடுத்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 ஊராட்சிகளில் 24 ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு பேட்டரி வண்டிகளை வழங்கினார்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட திட்ட இயக்குனர் லலிதா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அகரம்சீகூர் முத்தமிழ்செல்வன், பெருமத்தூர் சுரேஷ், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், வேட்டக்குடி செல்வி தர்மலிங்கம், வடக்கலூர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது
- பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில் குடும்ப விழா, சாசன தினவிழா, முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். சங்க சாசன தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஷேக் தாவுத், மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலதிட்டங்களை வழங்கினார்கள். பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். . நிகழ்ச்சில் பெரம்பலூர் அரிமா சங்கம், பெரம்பலூர் சென்டினியல், பெரம்பலூர் ராயல் சென்டினியல், வாலிகண்டபுரம் சென்டினியல், பெரம்பலூர் சுப்ரீம், ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் , வைரிச்செட்டிபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள் உள்பட பல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- இந்த அரிசியில் உள்ள போலிக் அமிலம், கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் ரேஷன் கடையில் கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், அந்த ரேஷன் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் வாங்க வந்திருந்த மக்களிடம், அரிசியில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசிகளை எடுத்துக்காட்டி, இது என்ன அரிசி என்று தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்த பெண்கள், அரிசியினை கழுவும்போது இது போன்ற அரிசிகள் சில மிதக்கும். அவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ள அரிசியினை சமைத்து உண்போம் என்று தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கலெக்டர், அந்த அரிசிகள் தான் செறிவூட்டப்பட்ட சத்தான அரிசிகள். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியினை சாப்பிடுவதால் ரத்த சோகை தடுக்கப்படுகின்றது. இந்த அரிசியில் உள்ள போலிக் அமிலம், கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக அரசால் இந்த அரிசி வழங்கப்படுகிறது.
சத்து மிகுந்த அரிசி தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கிறது என்ற காரணத்தால் தூக்கி எறிந்து விடாதீர்கள், என்று தெரிவித்தார். மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டியிருந்தபோதும், இது குறித்து பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் கடை விற்பனையாளர் இது குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்றும், கிராமங்கள் தோறும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலையும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமியும் கலந்து கொண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.
- கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
- கிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). விவசாயி. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று இவர் மாடு மேய்க்க ஓட்டி சென்றபோது கிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள கிணற்றில் அந்த மாடு தவறி விழுந்தது. இது பற்றி உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
- லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரியில் இருந்து நெடுவாசலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை கடந்து, கல்பாடி கிராமத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிரஷருக்கு கற்களை உடைப்பதற்காக சுமார் 15-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், தினமும் 50-க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன. இந்த டிப்பர் லாரிகளில் அளவிற்கு அதிகமாக கற்கள் ஏற்றி செல்லப்படுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளில் வரும்போது கற்கள் கீழே கொட்டி சாலையில் கிடப்பதாகவும், இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி விடுவதாகவும், கால்நடைகளின் கால்களில் கூர்மையான கற்கள் குத்தி காயம் ஏற்படுவதாகவும், பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், கிரஷர் உரிமையாளர்களுக்கும் முறையாக தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நெடுவாசல் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று அந்த வழியாக வந்த சுமார் 10 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இது பற்றி தகவல் அறிந்த கிரஷர் மேற்பார்வையாளர்கள், அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இனி லாரிகளில் கற்கள் கீழே கொட்டாத அளவிற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அகரம்சீகூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது செய்யபட்டனர்
- மேலும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகரம்சீகூர் அடுத்து ஒகளூர் கிராமத்தில் மணல் திருடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் ஒகளூர் கிராமத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது ஒகளூர் பஸ் நிலையம் அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற ஒகளூர் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (49), வடக்கு தெருவை சேர்ந்த ரவி (53) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
- ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தனக்கு சொந்தமான இருவகையான சொத்துக்களையும் தனது மனைவி சத்யா பெயருக்கு உயில் சாசன கிரையம் செய்வதற்காக செங்கமலை வேப்பூர் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் செங்கமலை(வயது 65). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் பெரம்பலூர் தாலுகா எசனை கிராமத்திலும், குன்னம் தாலுகா ஓலைப்பாடியிலும் உள்ளது. இந்நிலையில் அவர், தனக்கு சொந்தமான இருவகையான சொத்துக்களையும் தனது மனைவி சத்யா பெயருக்கு உயில் சாசன கிரையம் செய்வதற்காக செங்கமலை வேப்பூர் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு சார்பதிவாளரிடம் உயில் பத்திரப்பதிவு செய்வதற்காக மனு அளித்து, அதற்குரிய கட்டணத்தையும் பத்திரப்பதிவு துறைக்கு செலுத்தியிருந்தார். ஆனால் சார் பதிவாளர் அவரது உயில் பத்திரத்தை பதிவு செய்யாமல், பாகப்பிரிவினை மூலம் செங்கமலை பெற்ற சொத்தின் பத்திரத்தில் உள்ள நில அளவிற்கும், தற்போது உயில் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவிற்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.
மேலும் 1999-ம் ஆண்டு ஓலைப்பாடியில் கிரையம் பெற்றுள்ள நிலத்தின் ஒரு பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, உயில் பத்திரத்தை பதிவு செய்யாமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செங்கமலை தனது சொத்தின் மீது அதற்கு முன்பு இருந்த வில்லங்கத்தையும், பதிவு செய்யாமல் விடுபட்டிருந்த ஒரு பகுதியையும் திருத்தம் செய்து பதிவு மூலம் சரி செய்த பின்னர், செங்கமலை வேப்பூர் சார் பதிவாளரிடம் மீண்டும் முறையிட்டார்.
ஆனால் வேப்பூர் சார்பதிவாளர் உயில் பத்திரப்பதிவிற்கான ஆவணத்தை முறைப்படி பதிவு செய்யாமல் செங்கமலையை அலையவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த செங்கமலை, தனது வக்கீல் கே.ஆர்.சிவம் மூலம் வேப்பூர் சார்பதிவாளர் மற்றும் அரியலூர் மாவட்ட பதிவாளர் ஆகியோர் மீது 2018-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.
இதில் செங்கமலையின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.30 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வேப்பூர் சார் பதிவாளர் செங்கமலைக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டம் மற்றும் பதிவு சட்டத்திற்கு உட்பட்டு மனுதாரரின் உயிலை பதிவு செய்திடவும் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் 2-வது எதிர்மனுதாரரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டனர்.
- தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பசுமைக்குடில், நடமாடும் காய்கறி வண்டி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது
- விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம்
பெரம்பலூர்:
தேசிய தோட்டக்கலை இயக்க திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 7,268 எண்ணிக்கையிலும், எக்டேர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.796 லட்சமும் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக்குடில், நிலப்போர்வை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தேனீ பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வயலில் விளையும் விளை பொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியத்தில் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25 மெட்ரிக் டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில், பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
காய்கறி மற்றும் மலர்களை இருப்பு வைத்து வினியோகிக்க 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன அறை அமைப்பதற்காக மானியம் வழங்கப்பட உள்ளது. ஏழை மற்றும் நிலமற்ற பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி வண்டி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- நிலங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் :
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காண வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது திருச்சியில் எண் 89, ராஜாராம் சாலை, கே.கே.நகர் என்ற முகவரியில் உள்ள வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் ஏதேனும் கருத்து, கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பினால், அலுவலக வேலை நாட்களில் இந்த பெட்டியில் தங்கள் மனுக்களை வருகிற 30-ந்தேதி வரை அளிக்கலாம். கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு விளக்கம் அளிக்கப்படும் என்று வீட்டு வசதி வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.






