என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பொது மக்கள் குறைகள் தீர்க்க நிர்வாகம் தயாராக உள்ளது என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்
    • பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 988 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள அயிலூர் குடிக்காடு கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். முகாமில் அரசுத்துறைகளின் சார்பில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதனை பெற எந்த அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கமாக பேசினர்,

    முகாமில் கலெக்டர் பேசும் போது, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் குளிரூட்டும் மையம் மற்றும் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் வகையில் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தாட்கோ மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் கறவை மாடுகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகிறது.

    அரசு, மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் படிப்பை தொடரவும், உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களாகிய நீங்கள் உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்த்துக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் உங்களுடைய குறைகளை தீர்க்க எந்த நேரமும் தயாராக உள்ளது. என இவ்வாறு பேசினார்.

    முகாமில் பல்வேறு துறைகள் மூலமாக 170 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 988 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அயிலூர் குடிக்காடு ஏரிக்கரை பகுதியில் வேம்பு மற்றும் புங்க மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நட்டனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீனா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

    • பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது.
    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு பொது செயலாளர் தங்கராசு, மாநில பொது செயலாளர் விமனேஸ்வரன் ஆகியோர் பேசினர். இதில் தமிழக அனைத்து சமுதாய மக்கள் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் சங்கத்தை, பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் இச்சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், பாரதீய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அனைத்து சமுதாய மக்கள் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் மணிவேல், 'பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட கன்வீனராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அமுதா, செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில சட்ட ஆலோசகர் மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    • பெரம்பலூரில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்
    • மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை, இரூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது, கூடுதலாக ரூ. 10 வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு உரிய அபராதம் விதித்து, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருமாறனுக்கு உத்தரவிட்டார்.

    இதன்பேரில் பெரம்பலூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த சூப்பர்வைசர் முருகேசன், இரூர் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ராஜா, மேலும் பாடாலூர் டாஸ்மாக் கடையிலிருந்து நிர்வாக அனுமதியின்றி இரூர் கடையில் பணிபுரிந்த பாடாலூர் சூப்பர்வைசரான மற்றொரு முருகேசன் மற்றும் அரியலூர் பழைய பஸ்டாண்டு இருசக்குட்டை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விலைப் பட்டியல் வைக்காமலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சேல்ஸ்மேன் குறித்து கண்டு கொள்ளாதிருந்த சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 4 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    • பெரம்பலூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது
    • கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, தமிழக வரலாறு தெரியாமல், காமராஜர் பிரதமராக வரவிடாமல் தடுத்தது தி.மு.க. என வேலூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பது அமித்ஷாவிற்கு தெரியாது. எமர்ஜென்சி காலத்தில் காமராஜர் கைது செய்யப்பட்டால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியவர் கருணாநிதி. காமராஜர் மறைந்தபோது அவருக்கு தி.மு.க. அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்து, கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைத்தது தி.மு.க. என்பது அமித்ஷாவிற்கு தெரியாது. 1974-ல் அப்போதைய மத்திய அரசிற்கு எதிராக பாட்னாவில் இருந்து புறப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களால் அப்போதைய ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதேபோல் வரும் 23-ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியாவின் நெம்பர் 1 முதலமைச்சராக செயல்பட்டு வரும் முக ஸ்டாலின், 2024-ல் பிரதமராக வருவார் என்றார். கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் நடராஜன். மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, சோமுமதியழகன், ராஜேந்திரன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர் வரவேற்றார். அரும்பாவூர் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • தபால் துறையில் மகளிர் மதிப்பு திட்ட பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

    பெரம்பலூர்,

    சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைத்து அஞ்சலகங்களிலும் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் மற்றும் 50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்த வாடிக்கையாளர்களில் 15 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி, பூலாம்பாடியை சேர்ந்த சீதாலட்சுமி, நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என கலெக்டர் கற்பகம் அறிவித்தார்
    • மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூ மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையங்கள் அமைக்க உரிமம் வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டிடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ் அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் பணியின்போது விஜயபாபு என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாஹீர் உசேன், செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர் :

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக குழந்தை தொழிலாளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.

    பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவறும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும், என்றார். மேலும் பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலும், மாவட்ட போலீசார் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    • மாநில அளவிலான கணினி திறனறி தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • இந்த தேர்வில் கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

    பெரம்பலூர்:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 600 பள்ளிகளில் 599 பள்ளிகள் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாகும். மீதம் உள்ள ஒரு பள்ளி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொத்தவாசலில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாகும். இந்நிலையில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 4 கணினி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் இதில் இப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி துவாரகா கம்ப்யூட்டிங் ஸ்கில் பாடத்தில் 300-க்கு 295 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி வசுமதி ஆபீஸ் ஆட்டோமேசன் பாடத்தில் 300-க்கு 290 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், 7-ம் வகுப்பு மாணவி ரம்யா கிராபிக் டிசைன் பாடத்தில் 300-க்கு 287 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 8-ம் வகுப்பு மாணவர் விஷால் வெப் டிசைன் பாடத்தில் 300-க்கு 299 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளின் சாதனையால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • சாத்தனவாடி கிராம மக்கள் சார்பில் சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.

    பெரம்பலூர் :

    வேப்பந்தட்டை தாலுகா, சாத்தனவாடி கிராம மக்கள் சார்பில் சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், எங்கள் கிராமத்தில் பொது குடிநீர் கிணற்றை இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு மீண்டும் குடிநீர் கிணறு வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டு மீண்டும் குடிநீர் கிணறு வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன்(வயது 45). விவசாயி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கொளக்காநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கண்ணையன் நேற்று காலை இறந்து கிடந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கண்ணையன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலையும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமியும் கலந்து கொண்டு விசாரணை நடத்தினர் .

    சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

    ×