என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது மக்கள் குறைகள் தீர்க்க நிர்வாகம் தயாராக உள்ளது-கலெக்டர் கற்பகம் தகவல்
- பொது மக்கள் குறைகள் தீர்க்க நிர்வாகம் தயாராக உள்ளது என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்
- பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 988 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள அயிலூர் குடிக்காடு கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். முகாமில் அரசுத்துறைகளின் சார்பில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதனை பெற எந்த அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கமாக பேசினர்,
முகாமில் கலெக்டர் பேசும் போது, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் குளிரூட்டும் மையம் மற்றும் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் வகையில் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தாட்கோ மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் கறவை மாடுகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகிறது.
அரசு, மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் படிப்பை தொடரவும், உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களாகிய நீங்கள் உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்த்துக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் உங்களுடைய குறைகளை தீர்க்க எந்த நேரமும் தயாராக உள்ளது. என இவ்வாறு பேசினார்.
முகாமில் பல்வேறு துறைகள் மூலமாக 170 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 988 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அயிலூர் குடிக்காடு ஏரிக்கரை பகுதியில் வேம்பு மற்றும் புங்க மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நட்டனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீனா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.






