என் மலர்
பெரம்பலூர்
- போலீசாரை கண்டித்து சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்
- தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி போக்குவரத்து பாதிப்பு
பாடாலூர்.
பேரீச்சம் பழம் ஏற்றிச்சென்ற லாரி ஆந்திர மாநிலம், நாயுடு பேட்டையில் இருந்து பேரீச்சம் பழங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி பால் பண்ணைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை, அதன் உரிமையாளர் திருவண்ணாமலை மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் பாலாஜி (வயது 34) என்பவர் ஓட்டினார். நேற்று காலை 10.15 மணியளவில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அந்த லாரி இயக்கப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்பெக்டரிடம் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டு லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த லாரியும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையே சுமார் ½ மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
- பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில விவசாயி பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பரவாய் கிராமத்தில் வேப்பூர் செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தார். அதேநேரத்தில் குன்னம் அருகே உள்ள கல்லம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(38) என்பவர், வேப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரவாய் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற முருகேசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் விழுந்த முருகேசனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முருகேசனின் தம்பி சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியாயினி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து முருகேசனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த முருகேசனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
- பெரம்பலூர் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- கலெக்டர் கற்பகம் வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், குரும்பலூரில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள இருளர் இன மக்கள் குடிநீர், கழிவறை வசதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இங்குள்ள மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுவிட்டதா, எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தயாராக இருந்த 23 பேரின் இ பட்டாக்களை 20 பேருக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
பெரம்பலூர் :
பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை அபராதரட்சகர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் அலுவலர்கள்-விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக புஜங்கராயநல்லூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்ததால் விவசாயிகள் அங்கு சென்றனர்.
ஆனால் அங்கு விவசாயிகள் அமருவதற்கு போதிய அளவு இடவசதி, இருக்கை வசதி இல்லை. கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டம் தொடங்கப்படாததால் விவசாயிகளுக்கும், ஆர்.டி.ஓ. அலுவலக அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தாமதமாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புஜங்கராயநல்லூர் கிராம விவசாயிகள் எங்கள் கிராமத்தில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டாம். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலையில் பாளையம் கிராமத்திலுள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையறிந்த கிராம மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் முத்துசாமி (60) என்பவர் சாலையோரம் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் தாசில்தார் நூர்ஜஹானிடம் மனு அளித்தனர்.
- பெரம்பலூரில் சன்மார்க்க சங்க போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி சன்மார்க்க சங்கம் சார்பில் நாளை (16ம்தேதி) நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சன்மார்க்க சங்க மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூரில் வரும் 18ம்தேதி தேதி நடைபெற உள்ள வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் , மாணவியர்களுக்கான சன்மார்க்க பேச்சுப்போட்டி, திருவருட்பா ஒப்புவித்தல் போட்டி, திருவருட்பா இசை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மரகதவல்லி தாயார் திருமண மண்டபத்தில் நாளை (16ம் தேதி) காலை 10 மணியளவில் தொடர்ந்து நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- வாலிகண்டபுரத்தில் பா.ஜ.க. கொடிக்கம்ப கல்வெட்டு சேதமடைந்துள்ளது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மஙகமேடு அருகேயள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பா.ஜனதா கட்சியின் 30 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மர்ம ஆசாமிகள் கழட்டி சென்றதுடன், டிஜிட்டல் பேனர் மற்றும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- வேப்பந்தட்டை அருகே கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
- ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பெண்ணை தாக்கிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஓராண்டு சிறை விதித்து கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- நிலப்பிரச்சினையில் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கை.களத்தூர் போலீஸ் நிலையத்தில் வசந்தி புகார் கொடுத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் மனைவி வசந்தி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு நிலப்பிரச்சினையில் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கை.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கருப்பையா (வயது 70), அவரது மனைவி சின்னப்பிள்ளை (63), மகன்கள் செல்லையா (45), முத்துசாமி (40), செல்லையாவின் மனைவி வனிதா (38) மற்றும் சிறுவன் ஒருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கானது பெரம்பலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடித்து குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி குற்றவாளிகள் கருப்பையா, சின்னபிள்ளை, செல்லையா, முத்துசாமி, வனிதா ஆகிய 5 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி (பொறுப்பு) சங்கீதா தீர்ப்பு அளித்தார். மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கை.களத்தூர் போலீசார் மற்றும் நீதிமன்ற போலீசாரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
- வேப்பந்தட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தில் ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். நேற்று காலை அந்த வழியாக வயலுக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 63 பேர் தேர்ச்சி பெற்றனர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும்
பெரம்பலூர்,
நடப்பு ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் கற்பகத்தின் நேரிடையான மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்த 95 பேர் நீட் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மேலும் அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 3 மாணவர்களுக்கும், 4 மாணவிகளுக்கும் என மொத்தம் 7 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வு எழுதிய 95 பேரில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 8 மாணவர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் என மொத்தம் 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும். அந்த மதிப்பெண்ணை புகழேந்தி என்ற மாணவர் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 5 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 13 பேர் கூடுதலாக மொத்தம் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவா்களில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020-ம் கல்வியாண்டில் 6 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.






