என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு மற்றும் கை.களத்தூர் போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.



    • தடுப்பு சுவரில் இருந்து கீழே விழுந்த கூலித்தொழிலாளி இறந்தார்
    • இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணியளவில் நாட்டார்மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் இருந்து பெரியசாமி கீழே தவறி ஓடையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49), விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் அடைக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் இருந்து பாலசுப்பிரமணியன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எசனை-வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின்தடை செய்யபடுகிறது
    • நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது,

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது, என்று பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள் மகன் ஜெயசூர்யா (வயது 26) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று சர்க்கரை தயாரிக்கும் பாய்லரின் மேல் பகுதியில் வெல்டிங் பணியில் ஜெயசூர்யா ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்க்கபட்டார்
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 84). இவர் கடந்த 15-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர்களால் கலியமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் வேலாயுதம் என்பவர் விவசாய கிணற்றில் கலியமூர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்டவர்கள் இதுகுறித்து கலியமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கலியமூர்த்தியின் குடும்பத்தினரும், போலீசாரும் வந்தனர். பின்னர் போலீசார் கிணற்றில் இருந்து கலியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

    மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி ஆகும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளதால், அதற்கான மாதிரி தேர்வுகள் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு 9499055913 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன், மாவட்ட அவைதலைவர் குணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 21ம்தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வரும் 25ம்தேதிக்குள் ஒப்படைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி, லெட்சுமி, ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், டாக்டர் நவாப்ஜான், வக்கீல் ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.

    • பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது
    • கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியவடகரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் உதவி ஆணையர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் சர்வேயர் கண்ணதாசன், வக்கீல், விஏஒ மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
    • ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.

    ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.

    அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

    பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
    • விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 - 23 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டரிங், டிசைனிங்) பட்டப் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் மேனேஜ்மெண்ட் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்புக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத் திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரையிலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    • ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×