என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • அகரம்சீகூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கினர்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கருப்ட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பழனிவேல் (வயது 36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று 2 இரு சக்கர வாகனத்தில் 3 நபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த பழனிவேல் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே 3 நபர்களும் சேர்ந்து பழனிவேலை தாக்கியுள்ளனர்.அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் என்ன நடப்பது என்று தெரியாமலும், கேள்வி கேட்காமலும் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிவேலை கொடூரமாக தாக்கி உள்ளனர்.

    இதையடுத்து காயமடைந்த பழனிவேலை பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் மது போதையில் தாக்கிய 5 வாலிபர்களும் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வினோத் (30), பென்ஸ் மகன் சிவராஜ் (16), ராமதாஸ் மகன் அஜித் (23), ராசாங்கம் மகன் ஐயப்பன் என்ற பூவரசன் (27), திருவள்ளுவன் மகன் முத்துக்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசு பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி இலக்கிய மன்றங்களை தொடங்கி வைத்து மன்ற செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களின் பன்முகத் திறன்கள், நுண்ணறிவு, ஆளுமைப்பண்புகள் மற்றும் களைத்திறன்கள் வளர்வதை குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் உயர்நிலை உதவி ஆசிரியர் பைரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கமலாசாந்தி நன்றி கூறினார்.

    • ஏ.சி. மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், புதுக்காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டின் முதல் தளத்தில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 38) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ராஜாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றதாக தெரிகிறது.

    இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீடு கடந்த 2 நாட்களாக உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இது பற்றி நேற்று அப்பகுதி மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜா தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

    அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான ராஜா மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

    • மாயமான மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 63). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். முத்துசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கொளத்தூரில் உள்ள வீட்டில் மாரியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வாலிபர் ஒருவர், மாரியம்மாளிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார்.

    அப்போது, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. சம்பவத்தன்று மாரியம்மாளின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய, அவரை ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியம்மாளை காணவில்லை. இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாளின் மகன் ராஜ்குமார் கடந்த 18-ந் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று கொளக்காநத்தம் கிராமம் அய்யனாபுரம் பஸ் நிறுத்தம் அருகே காரை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்பதும், ஓடையில் உள்ள மறைவான பகுதியில் அந்த பெண்ணின் உடல் மீது மரக்கட்டைகளை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு, கரிக்கட்டையான நிலையில் கிடந்ததும் தெரியவந்தது.

    அந்த பெண் மாரியம்மாளாக இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாரியம்மாளின் உறவினரை வரவழைத்து, அடையாளம் காண செய்தனர். இதில் கருகிய நிலையில் இறந்து கிடந்தது மாரியம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, பெரம்பலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருச்சியில் இருந்து தடயவியல் போலீசார் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து மருவத்தூர் போலீசார், மாரியம்மாளின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாரியம்மாளை கொலை செய்த நபரை கைது செய்யும்வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரியம்மாளின் உறவினரான வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

    பெரம்பலூர்,

    ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து, தகுதியானவர்களை ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

    முகாம் நடைபெற உள்ள மைதானத்தில், ஆயத்த பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    முகாமில் போதிய இடங்களில் இரண்டடுக்கு தடுப்புகள், இணையதளத்துடன் கூடிய கணினி வசதிகள், இரவு நேரத்தில் மைதானம் முழுவதும் மின் விளக்குகள் அமைத்தல், சாமியானா பந்தல்கள் அமைத்தல், போதிய குடிநீர் வசதி செய்தல், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்குணம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருத்தேர்விழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதையடுத்து கடந்த 14-ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமி குடி அழைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து குதிரை, மயில், சிம்ம வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அங்கபிரளாயம் செய்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தி கோவில் வளாகத்தில் அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதையடுத்து பொங்கல் பூஜையுடன் பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை நிலைநின்றது. இதில் செங்குணம், பாலம்பாடி, அருமடல் உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று (21-ந்தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த நிதி ஊழியர்களின் இ.பி.எப். கணக்கில் செலுத்தப்படுவதில்லை. இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டு உள்ளோம். ஒரு வார காலத்திற்குள் கணக்கீடு செய்து, வங்கி கணக்கில் அந்த தொகை செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இதுவரையில் பிடித்தம் செய்த தொகை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த மே மாதத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முன்னாள் மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ம் வழங்கப்படவில்லை. மே மாதத்திற்கு முழு ஊதியமும் வழங்கப்படவில்லை.எனவே ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப். தொகையை கணக்கீடு செய்து செலுத்தாத தொகையை (இரண்டு ஒப்பந்த காலங்களில்) வழங்கிடவும், கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ஐ வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • பிளாஸ்டிக்-போதை பொருட்களை ஒழிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து பிளாஸ்டிக்-போதை பொருள் ஒழிப்பு குறித்த மனுவினை அளித்தனர்.

    • பெரம்பலூர் கலெக்டர் மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினார்
    • தன்னார்வ அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு 130 ஹெக்டர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதிய பயணம் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் கொய்யா மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் துணி பைகளும் வழங்கப்பட்டது.

    • மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது
    • முன்னதாக கோவிலில் மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக பருவத்தேர்வு முடிந்து இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும செயலாளர் விவேகானந்தன், முதல்வர் சுபலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும தாளாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,இறைவன் இப்புவியில் பெண்களுக்கு இயற்கையிலே ஞானத்தை தந்துள்ளார். அஞ்ஞானத்தை நன்முறையில் பயன்படுத்திக் கல்வியால் முன்னேற வேண்டும். பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும். இறையருளால் கல்விச் செல்வம் மட்டும் அல்லாது அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் மேம்பட வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூரில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது
    • சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு திருவிழா ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது.விழாவிற்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமை வகித்தார். ரோவர் வேளாண்மை கல்லூரி முதல்வர் (பொ) வஹாப் முன்னிலை வகித்தார். மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான நேதாஜி மாரியப்பன் சிறுதானிய கண்காட்சியை திறந்துவைத்து பேசினார். மைய நிர்வாக அலுவலர் ஜெயசீலன், மைய தொழில் நுட்ப வல்லுனர் கோகிலவாணி உட்பட பலர் பேசினர்.நிகழ்ச்சியில் சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களும், சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, அதன் பயன்பாடு, அதனால் எற்படும் நன்மைகள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நேருயுவகேந்திரா கணக்காளர் தமிழரசன் வரவேற்றார். முடிவில் தன்னார்வ தொண்டர் வீரமணி நன்றி கூறினார்.

    • குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடு, திருவீதியுலா, ஊர்வலம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 8 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவின் சிரக நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு செட்டி ஏரியில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, வைத்தியநாதபுரம், மண்டபம், கிழுமத்தூர், சாத்தநத்தம், வடக்களூர், பரவாய், பெருமத்தூர், மிளகாய்நத்தம் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு, அம்மன் வழி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    ×