search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

    பெரம்பலூர்,

    ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து, தகுதியானவர்களை ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

    முகாம் நடைபெற உள்ள மைதானத்தில், ஆயத்த பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    முகாமில் போதிய இடங்களில் இரண்டடுக்கு தடுப்புகள், இணையதளத்துடன் கூடிய கணினி வசதிகள், இரவு நேரத்தில் மைதானம் முழுவதும் மின் விளக்குகள் அமைத்தல், சாமியானா பந்தல்கள் அமைத்தல், போதிய குடிநீர் வசதி செய்தல், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×