என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்குணம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
- செங்குணம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
- இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருத்தேர்விழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதையடுத்து கடந்த 14-ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமி குடி அழைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து குதிரை, மயில், சிம்ம வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அங்கபிரளாயம் செய்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தி கோவில் வளாகத்தில் அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இதையடுத்து பொங்கல் பூஜையுடன் பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை நிலைநின்றது. இதில் செங்குணம், பாலம்பாடி, அருமடல் உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று (21-ந்தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






