என் மலர்
பெரம்பலூர்
- கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெரு சாலையில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் அந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கோவிலில் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அலாரம் ஒலித்ததால், சத்தம் கேட்டு கோவிலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் எழுந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வேன் மீது கார் மோதியதில் வாலிபர் காயமடைந்தார்.
- இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திம்மயம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 24). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு காரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள தம்பை பகுதியில் அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வேன் மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி வேனின் பின்புற சக்கரம் உள்ள பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேஷ்குமார் காயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
- முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராமசாமி கடந்த வாரம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒகளூர் பேருந்து நிலையம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு மறியல் நடைபெற்றது
- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உறவினர்கள் செல்லம்மாளின் உடலை வாங்க மறுத்து ஒகளூர் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது செல்லம்மாளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு சென்ற மங்களமேடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
- போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 27 மனுக்கள் பெறப்பட்டன.
- போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
பெரம்பலூர்:
போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
- பெரம்பலூர் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 9-வது வருடாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மகாகணபதி ஹோமம், சாய்பாபா சிலைக்கு புனிதநீர் அபிஷேகம், வண்ணமலர் அலங்காரம் மற்றும் மகாதீப ஆரத்தி நடந்தது. மாலையில் பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, பால்குடம் மற்றும் பாபா திருவுருவ ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபா திருவுருவத்தையும், துவாரகாமயி பாதுகைகளையும் வழிபட்டனர். காலையில் தொடங்கி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- பேக்கரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் அரணாரையில் வடக்கு தாஜ் நகரில் ஸ்நாக்ஸ், இனிப்பு ஆகிய உணவுபொருட்கள் தயாரிக்கும் ேபக்காி உள்ளது. இதன் உரிமையாளர் ராமஜெயம் (வயது 48). இவர் தனது காருக்கு பெரம்பலூர் பள்ளிவாசல் தெருவில் இயங்கிவரும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். காப்பீட்டை புதுப்பித்து தருவதற்காக பிரீமியத்தொகை ரூ.29 ஆயிரத்து 772-ஐ காசோலையாக செலுத்தியிருந்தார்.காப்பீடு 19.7.2022 முதல் 18.7.2023 வரை அமலில் உள்ளதாக தெரிவித்து காப்பீட்டு பாலிசி ராமஜெயத்திற்கு வழங்கப்பட்டது.
இதனிடையே ராமஜெயம் கொடுத்திருந்த காசோலை மிகவும் தாமதமாக வங்கி கலெக்சனுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் வங்கி கணக்கில் போதியளவு பணம் இருந்தும், ராமஜெயம் காப்பீட்டு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு எண்ணால் எழுத்தால் எழுதியிருந்ததற்கு வித்தியாசம் இருப்பதாக கூறி, காசோலை திருப்பி வந்துவிட்டதாக தெரிவித்து காப்பீட்டு கிளை மேலாளர் ராமஜெயத்திற்கு 55 நாட்களுக்கு பிறகு, இதுகுறித்து நோட்டீசு அனுப்பினர்.
மேலும் அவருக்கு அளித்திருந்த காப்பீட்டு பாலிசியை ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் கடிதமும் அனுப்பி உள்ளார். ராமஜெயம் தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எடுத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவன கிளை மேலாளரிடம் முறையிட்டுள்ளார். காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ராமஜெயத்தை அவமரியாதை செய்து, திட்டி, அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த ராமஜெயம், தனது வக்கீல் வீரமுத்து மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை பொதுமேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் கிளை மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 20.10.2022 அன்று மனுசெய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.
இதில் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக, புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை மனுதாரருக்கு உடனே வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.
- குன்னத்தில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
- நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பெரம்பலூர் :
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. எனவே குன்னம் தாலுகாவை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6 மற்றும் தேசிய அடையாள அட்டையை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர்
- கையெழுத்து இயக்கத்தினை ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்
பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வு.மான சின்னப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த தொடக்க விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்
- புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி செல்லம்மாள். கட்டிட தொழிலாளியான இவர் ஒகளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக அங்கனூர் கிராமத்தை சேர்ந்த மணவழகன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்லம்மாள் மீது மோதியது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்
- விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறாமல் பதாகைகள் வைக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், விளம்பர பதாகை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.
2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன் படியும், திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 17-0-ன்படி அகற்றப்பட வேண்டும். அதேபோல் உரிமக்காலம் முடிந்த பின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-பி-ன்படி அகற்றப்பட வேண்டும்.
மேற்படி பிரிவுகள் 117-0, 117-பி ஆகியவற்றின்படி, விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்ற தவறினால் அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றிவிடும். பின்பு அதற்கான செலவினம் பிரிவுகள் 117-0, 117-பி மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.
- பெரம்பலூர் கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டப்பட்டது
- . இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த சர்வதேச யோகா தின விழாவிற்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தியானம் , விரிச்சாசனம், திரிக்கோனாசனம், பத்மாசனம், பத்மா பர்வதாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், வீராசனம், மகா முத்ராயோகா போன்ற யோகா கலையை செய்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தார். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி பொங்கியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் யோகா மையம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி குழுமத்தின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தாளாளர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் யோகா கலை குறித்து பேசினர். யோகா மைய ஒருங்கிணைப்பாளர் கீதா, உதவி ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் யோகாவின் சிறப்புக்கள் குறித்து எடுத்துக்கூறி செயல்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தனர். இதில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா அனைவரையும் வரவேற்றார். முடிவில் லெப்டினண்ட் பிரவீன் பெருமாள் நன்றி கூறினார்.
பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மனவளக்கலை மன்ற உதவி பேராசிரியர் பவானி மாணவிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து விளக்கி கூறி, யோகா செய்முறை பயிற்சி அளித்தார். இதில் 300க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி வரவேற்றார். முடிவில் யோகா ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.






