என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது
    • இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சீரங்கன் முன்னிலை வகித்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் பதின்ம பருவத்திற்கான மனவெழுச்சி நலன் மற்றும் ஆசிரியர் மாணவர் மனவெழுச்சி நலன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டது.

    ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இந்திராகாந்தி, பரமசிவம், ஜான்ராபிசன், விர்ஜின்சோபியா, ரேவதி, ரவீந்திரன், கோவிந்தராஜூ மற்றும் ரஞ்சித்குமார் ஆகியர் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்காக ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    • மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில், மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம நிர்வாகி காமராஜ் தலைமை வகித்தார். இயக்குநர்கள் நந்தேஸ்வரன், சக்திஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சி ஓங்கார குடில் பாம்பாட்டி சித்தரின் சீடர் வேலுதேவர் கலந்துகொண்டு யாக வேள்வியை தொடங்கி வைத்தார். கோமாதா பூஜை , 210 மகா சித்தர்கள் யாகமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவயோகி மருதவேல் தேவர், எல்ஐசி முகவர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
    • கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக் குளத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    செட்டிக்குளம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடை அடைத்து பூட்டப்பட்டது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி இரும்பு கேட்டின் ஒரு பகுதியை வளைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்குள்ள வாகன மண்டபத்திற்கு சென்ற அவர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த மண்டபத்தில் விநாயகர், முருகன், பைரவர் கல் சிலைகளும், கருடாழ்வார், சிற்ப மரத்தினாலான வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், பைரவர் சிலையை கீழே தள்ளிவிட்டதோடு கருடாழ்வார் மர வாகனத்தையும் உடைத்துள்ளார். பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய கோவில் பதிவேடுகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

    இன்று காலை கோவிலை திறந்த பார்த்தபோது சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சிலைகளை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தது செட்டிக்குளம் அருகேயுள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ் (வயது 36) என்பது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தானாக கோவிலுக்குள் புகுந்தாரா அல்லது யாராவது தூண்டுதலின் பேரில் வந்தாரா என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒப்பந்த மின் ஊழியர் பேரவை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட கிளை சார்பாக ஒப்பந்த ஊழியர் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்து பேசினார். இதில் மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட கோரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலெக்டரிடம் வரும் 4ம்தேதி மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் வினோதன் ,அபிமன்னன், மலரவன், குப்புசாமி, கருப்பையா, பெருமாள், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டனர்
    • இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் பெரம்பலூர் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, வேலூர், மங்கூன், அம்மாபாளையம், குரும்பலூர், லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றி , மான், முயல் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டை தடுப்பு, இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கபட்டது
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குணா கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுதிய டாஸ்மாக் குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு கையேட்டினை விநியோகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கபிலன், சதீஷ், சிவசூரியன், இளைஞரணி பொறுப்பாளர் விஜய்பிரபு, மாவட்ட இணையதள பிரிவு அமைப்பாளர் பிரகாஷ் , மணிகண்டன், வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • லெப்பைகுடிகாடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் அமைந்துள்ள செல்வ விநாயகர்,சுப்ரமணியர், பெரியநாயகி அம்பாள் சமேத, மஹாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பூஜை தொடங்கியது.

    தொடர்ந்து கும்ப பூஜை, சூரிய பூஜை, நான்கு கால யாக வேள்வி பூஜை நிறைவு பெற்ற பிறகு திரவ்யாஹுதியும், அதனையடுத்த பூர்ணாஹீதியும் நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, கயிலாய வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன்பு, கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    லப்பைக்குடிகாடு, ஆடுதுறை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்து, கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கு அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் தினகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் கருணாகரன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேருராட்சி தலைவராக இருப்பவர் பாக்யலட்சுமி. (திமுக) இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. கடம்பூர் கிராமத்தில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே தனியார் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடம்பூரை சேர்ந்த 3 பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமியை அவரது வீட்டிற்கே சென்று திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடம்பூரில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே வீடுகள் கட்ட மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதால் மேற்கண்ட மனைப்பிரிவிற்கு அனுமதிதரவில்லை.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன், தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய 3 பேர் எனது வீட்டிற்கு கம்பு, கல் ஆகியவற்றுடன் வந்து என்னை ஜாதியை சொல்லி திட்டி, தகாதவார்த்தைகளால் அசிங்கமாக பேசினர்.

    ஜாதியை சொல்லி திட்டாதீர்கள் என கூறிய என் கணவர் செங்குட்டுவனையும் தாக்க முயன்றனர். நாளைக்குள் மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே ஜாதிபெயரை சொல்லி அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்த மூன்றுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறுவாச்சூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆட்டுச்சந்தை நடந்தது. பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிந்தனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க முஸ்லிம்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடுகளை பேரம் பேசி வாங்கி சென்றனர். ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் சிறுவாச்சூரில் வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் மீண்டும் ஆட்டுச்சந்தை நடத்துமாறு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 34). இவரது மனைவி கார்த்திகா(31). இவர் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருள்மடல் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இல்லம் தேடி கல்வித்திட்டம் சம்பந்தமாக பெரம்பலூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அசோக்குமார் தனது மனைவி கார்த்திகாவை ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு அழைத்து வந்தார்.

    பின்னர் கூட்டம் முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் செல்வம் (வயது 29). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வத்துக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். இதனால் மன உளைச்சலில் மதுவும் குடித்து வந்தார். கடந்த 22-ந்தேதி காலை 10 மணியளவில் செல்வம் அதேபகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தனது பெரியப்பாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மயங்கி கிடந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியரை தாக்கி மாணவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்
    • போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஆசிரியர் திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் நேற்று காலையில் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவரான பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோடு, சங்குபேட்டையை சேர்ந்த பாண்டியனின் மகன் ஜேம்ஸ்பாண்டி(வயது 19) என்பவர் வந்தார்.

    அப்போது அவர் தான் 10-ம் வகுப்பு படிக்கும்போது தன்னை ஏன் அடித்தாய் என்று ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் கேட்டு, அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். ஜேம்ஸ்பாண்டி தற்போது பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவரது தந்தை பாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    ×