என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் டெய்சிராணி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சட்டப்பணிகள் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகரன் சிறப்புரையாற்றும்போது, பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபடுதல், மகளிருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, பிரச்சினை ஏற்பட்டால் சட்ட உதவியை நாடவேண்டிய அவசியம், மாணவிகளுக்கு பாலியல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி குறித்தும், மாணவர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றபின் மோட்டார் வாகனங்களை இயக்கிசெல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் வக்கீல் சங்கர் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், வக்கீல் ஆனந்தி பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து மகளிர் விடுபடுதல் மற்றும் தற்காத்துக் கொள்வது பற்றியும் விளக்கிப்பேசினார்கள். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சசிகலா(வயது 45). இவர்களுக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சசிகலா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • விவசாயி ரேஷன் கடை விற்பனையாளரை உள்ளே வைத்து கடையை இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கடையின் விற்பனையாளர் ராஜா கடையை திறந்து வைத்து மண்எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பூமிதானம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் அங்கு வந்து எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் ராஜா இந்த மாதம் வந்த அரிசி முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடன் சேர்த்து 8 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைவாக வந்துள்ளது. இதனை அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் உங்களுக்கு வழங்குகிறோம். அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

    இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த நடேசன் இப்போதே எனக்கு அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் யாருக்கும் எந்த பொருளும் வழங்கக்கூடாது எனக்கூறி விற்பனையாளரான ராஜாவை உள்ளே வைத்து ரேஷன் கடையின் கதவை இழுத்துப் பூட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் மற்றும் அரும்பாவூர் போலீசார் கடையை பூட்டிய நடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிசி வந்தவுடன் உங்களுக்கு முதலில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை நடேசன் கைவிட்டார். அதன் பின்னர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    • பிரத்யேக வசதியுடன் கால்நடைகளுக்கு அவசர கால ஊர்தி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
    • கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள நமையூர் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை அமைச்சர் சிவசங்கர், மற்றும் பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நடைபெற்ற விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம், பால்வளத்துறை மற்றும் கிருஷி கால்நடை தீவன நிறுவனம் மூலம் 100 விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருட்கள், பால் வளத்துறை சார்பில் முருக்கன்குடி பால் உற்பத்தியாளர்கள் கடன் சங்கத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் 15 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகள், கூத்தூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கத்திற்கு பதிவு சான்றிதழையும் வழங்கினார்.

    பின்னர் விழாவில் அமைச்சர் பேசுகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 100 மாடுகளுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனையின் அடிப்படையில் சினையூட்டும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு என்று பிரத்யேக வசதியுடன் கூடிய அவசர கால ஊர்தி இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாகனம் என 4 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கான அவசர ஊர்தி வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் செல்வராணி வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன்,ஒகளூர் பால்பண்ணை செயலாளர் சக்திவேல், நமையூர் பால்பண்ணை செயலாளர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, ஆண்டாள் குடியரசு, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


    • வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
    • இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). விவசாயியான இவர் ஆட்டுக்குட்டிகளுக்கு தழை வெட்டுவதற்காக வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார். மரத்தில் தழை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் செல்லும் மின்கம்பி மீது மரம் உரசியது. இதில் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார்
    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை மதியழகனிடம் போலீசார் வழங்கினர்.

    பெரம்பலூர் :

    தஞ்சை மாவட்டம், வல்லம்புதூர் அருகே கருவாடிப்பட்டி கிராமத்தில் உள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மதி என்ற மதியழகன்(வயது 38). இவர் மீது பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மதியழகனை, மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள மதியழகனிடம் மங்களமேடு போலீசார் நேற்று வழங்கினர்.

    • கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மகன் அஜித்(வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஜித், பெரம்பலூர் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது தன்னுடன் கூலி வேலை செய்த குரும்பலூரை சேர்ந்த பழனிமுத்துவின் மகளான சாந்தியை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து குரும்பலூரிலேயே அஜித்-சாந்தி தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சாந்தி கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை சாந்தி ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    இதையடுத்து அவரை அஜித் மற்றும் சாந்தியின் உறவினர்கள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து அஜித் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மனைவி சாவில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    • பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
    • விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் சாலையில் உள்ள இளங்கோநகர் மற்றும் வடக்குமாதவி சாலையில் உள்ள கிரசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் இயங்கும் வகையில், 1,728 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிதாக முழு நேரமும் இயங்கும் வகையில் 2 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். புதிய ரேஷன் கடைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் பிரத்யேக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி கூடுதலாக நிதி கேட்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் சஹர்பானு, கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் மாயகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பசும்பலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டை தேவராஜ் (வயது 45) என்பவர் வாடகைக்கு எடுத்து, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அந்த குழுவினர், அவற்றை பெரம்பலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி ஜோதி. இவர்கள், தங்களது மகன் பரமேஸ்வரன், மருமகள் ராணி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காைல ராஜேந்திரனும், அவரது மனைவி ஜோதியும் பாண்டகப்பாடியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். மேலும் வீட்டை பூட்டிவிட்டு பரமேஸ்வரன் வெளியூருக்கு வேலைக்கும், ராணி ஆடு மேய்க்கவும் சென்றுள்ளனர்.

    பின்னர் மாலையில் பரமேஸ்வரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறையில் ேமாட்டார்-கருவிகள் திருட்டு போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மோகன் (வயது 34). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோகன் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் பட்டறையை திறக்க வந்தபோது, பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த வாட்டர் சர்வீஸ் செய்யும் கம்பிரசர் மோட்டாரும், இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கருவிகள், வாகன ஆயில் ஆகியவையும் திருட்டு போயிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக மோகன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தி.மு.க. பேரூராட்சி தலைவரை திட்டிய 3 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • மேலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பாக்யலட்சுமி (வயது 40). இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். பாக்யலட்சுமியின் கணவர் செங்குட்டுவன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் கடம்பூரை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தேனூரை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பிரிவிற்கு அனுமதி வழங்க கோரி தகராறில்ஈடுபட்டதாகவும், அப்போது சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் அரும்பாவூர் போலிசார் விசாரணை செய்தனர். புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்த அரும்பாவூர் போலீசார் கடம்பூரை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன் மற்றும் தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சி பேரூராட்சி தலைவர் வீட்டிற்கே சென்று சாதியை சொல்லி திட்டியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பூலாம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×