என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் மாயகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பசும்பலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டை தேவராஜ் (வயது 45) என்பவர் வாடகைக்கு எடுத்து, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அந்த குழுவினர், அவற்றை பெரம்பலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.






