என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரையை அடுத்துள்ள சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 33). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) அவர் குடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • சிறந்த கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பித்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழக அரசு மாவட்ட கலை மன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-03 முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலை பழமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட உள்ளது.

    ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பாவைக்கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், கனியான் கூத்து, புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புற கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை இளமணி' விருதும், 19 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை வளர்மணி' விருதும், 36 முதல் 50 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலைச் சுடர்மணி' விருதும், 51 முதல் 65 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை நன்மணி' விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு 'கலை முதுமணி' விருதும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது (கலை மாமணி) மற்றும் மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கக்கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பித்த கலைஞர்கள், தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இம்மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடம் இருந்து வருகிற 15-ந்தேதிக்குள் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய லாரி டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து தொழுதூர் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரி வருவதற்குள் சிவசாமி சாலையை கடந்து விட்டார்.

    ஆனாலும் லாரியின் டிரைவரான ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் சவுந்திரமோகன் (28) லாரியை நிறுத்தி, கீழே இறங்கி வந்து சிவசாமியிடம், லாரி வருவது உனது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் (செருப்பு) அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவசாமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திர மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    • ஆம்னி பஸ்கள்-கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • மேலும் இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று திருப்பூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பிரிவு சாலையில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ், காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் சாலையில் இருந்து பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தாமல் விபத்து குறித்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த உத்திரமொழி (வயது 42) முன்னால் சாலையில் காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்ததை கண்டார். இதனால் அந்த வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக உத்திரமொழி திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் தள்ளாடினர். இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அந்த பஸ்சின் முன்பக்கம் அமர்ந்திருந்த கிளீனர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, குருவம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமியின் மகன் விஜய் (24) பஸ்சின் படிக்கட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவலறிந்த பாடாலூர் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பஸ் கிளீனர் விஜயின் உடல் பஸ்சின் பாகங்களுக்கிடையே சிக்கியிருந்ததால் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்த 12 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:- திடீரென பிரேக் போட்டதில் உத்திரமொழி ஓட்டிச்சென்ற ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை திருவேற்காடு மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ்மோகனின் மனைவி செல்வி (49), பின்னால் வந்து மோதிய பஸ்சின் டிரைவர் சிவகங்கை மாவட்டம், மாத்தூரை சோ்ந்த சோனை மகன் முருகன் (35), அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளான காரைக்குடி தாலுகா, கழனிவாசலை சேர்ந்த சோனைமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி (48), மகள் சவுமியா (20), காரைக்குடியை சேர்ந்த பெருமாளின் மனைவி ஜோதிலட்சுமி (37), தேவகோட்டை தாலுகா, நகரமங்கலத்தை சேர்ந்த அப்துல் ஹமீதுவின் மனைவி பாத்திமா சோபியா (30), சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மனைவி உமையாள் (53), மாற்று டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாலன் (53), திருமயம் தாலுகா, ஒணங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி (32), காஞ்சீபுரம் எம்.ஜி.ஆர். சாலை, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பஷீர்கானின் மனைவி சைலானி (33), மகன் முகமது பஷீர் (9), மகள் பர்கான் (6) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.

    இதில் சிறுமி பர்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள். செல்வி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்க அதற்கான குறிப்புரையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை தொடங்க பட உள்ளது
    • நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே ராணுவத்தில் முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அதில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மைதானம் தயார் நிலையில் உள்ளது. மைதானத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ்கள் சர்பார்ப்பு பணிக்காக இணையதள வசதியுடன் கூடிய கணினி வசதிகள், மருத்துவ பரிசோதனைக்காக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்வுகள் நடத்துவதற்கு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடற் தகுதித்தேர்வுகள் இரவிலும் நடக்கும் என்பதால் போதிய வெளிச்சத்திற்கு ஒளிரூட்டப்பட்ட விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மைதானத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் ராணுவ கட்டுப்பாட்டில் வந்து விட்டதே என்று கூறலாம். அந்த அளவுக்கு ராணுவ வீரர்கள் மைதானத்தில் முன்னேற்பாடுகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முகாம் ஏற்கனவே முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. புதியவர்களுக்கு அல்ல. எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் புதியவர்கள் வர தேவையில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதுவேட்டக்குடி கிராமத்தில் ஓம் பராசக்தி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • இரவு சுவாமி திரு வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் எழுந்தரு ளியிருக்கும் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், ஓம் பராசக்தி அம்மன், ஆகிய தெய்வங்களுக்கு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் மகா கும்பா பிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை மங்கள இசை, நாடி சந்தானம், ஸ்பார்சாஹீதி, திரவ்யாஹுதி,கோபூஜை, ஹோமம், மற்றும் பூர்ணாஹீதி, நடைபெற்றது. இரவு சுவாமி திரு வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுவேட்டக்குடி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை புதுவேட்டக்குடி கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.



    • மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ரமேஷ் அரசலூரிலிருந்து மூலக்காடு செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    • முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
    • போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர்.

    பெரம்பலூர் :

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 10 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் டெய்சிராணி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சட்டப்பணிகள் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகரன் சிறப்புரையாற்றும்போது, பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபடுதல், மகளிருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, பிரச்சினை ஏற்பட்டால் சட்ட உதவியை நாடவேண்டிய அவசியம், மாணவிகளுக்கு பாலியல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி குறித்தும், மாணவர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றபின் மோட்டார் வாகனங்களை இயக்கிசெல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் வக்கீல் சங்கர் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், வக்கீல் ஆனந்தி பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து மகளிர் விடுபடுதல் மற்றும் தற்காத்துக் கொள்வது பற்றியும் விளக்கிப்பேசினார்கள். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சசிகலா(வயது 45). இவர்களுக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சசிகலா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • விவசாயி ரேஷன் கடை விற்பனையாளரை உள்ளே வைத்து கடையை இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கடையின் விற்பனையாளர் ராஜா கடையை திறந்து வைத்து மண்எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பூமிதானம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் அங்கு வந்து எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் ராஜா இந்த மாதம் வந்த அரிசி முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடன் சேர்த்து 8 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைவாக வந்துள்ளது. இதனை அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் உங்களுக்கு வழங்குகிறோம். அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

    இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த நடேசன் இப்போதே எனக்கு அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் யாருக்கும் எந்த பொருளும் வழங்கக்கூடாது எனக்கூறி விற்பனையாளரான ராஜாவை உள்ளே வைத்து ரேஷன் கடையின் கதவை இழுத்துப் பூட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் மற்றும் அரும்பாவூர் போலீசார் கடையை பூட்டிய நடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிசி வந்தவுடன் உங்களுக்கு முதலில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை நடேசன் கைவிட்டார். அதன் பின்னர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    ×