என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நடந்தது.
    • மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார் கடன் கேட்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் பெரம்பலூர் தாலுகாவில் 16 விண்ணப்பங்களும், ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாக்களில் தலா 12 விண்ணப்பங்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 9 விண்ணப்பங்கள் என மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.



    • பெரம்பலூர் சீனிவாசன் கலை - அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது
    • வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று விழாவினைத் துவக்கி வைத்து பேசினார்.

    பெரம்பலூர்,

    சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று விழாவினைத் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, " இந்த கல்வி நிறுவனமானது உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளும் சிறந்த களமாக அமையும். கல்வி மட்டும் கற்று தருவதோடு அல்லாமல் மாணவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்புக்களை அள்ளித் தரும் தளமாக இருக்கும்.

    வாழ்க்கையின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் வரையறத்து அதை அடைவதற்கான குறிக்கோளோடு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும்" என்று தெரிவித்தார். விழாவில், சிறப்பு விருந்தினர் திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சா.நீலகண்டன், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன், தன்னாட்சி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கல்லூரியின் சிறப்புகளை பற்றி பேசினர்.

    முன்னதாக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்வி முதன்மையர் பேரா.வ.சந்திர சௌத்ரி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பெ. செந்தில்நாதன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ராஜசேகர் (வயது 29). இவருக்கு கடந்த ஒரு ஆண்டாக ஒற்றை தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகர் நேற்று மதியம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு போனது
    • இது குறித்து புஷ்பநாதன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடையில் நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாபிஷேகம் கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி எட்டாம் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை தர்மகர்த்தா புஷ்பநாதன் கோவிலை திறந்து பார்த்தபோது உண்டியலில் இருந்த சுமார் ரூ.9 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து புஷ்பநாதன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் 4 கிராமங்களில் நாளை நடக்கிறது.
    • நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அதன்படி முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் பின்வருமாறு:- பெரம்பலூர் தாலுகாவிற்கு க.எறையூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு பெரியவடகரை கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் தாலுகாவிற்கு எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் தலைமையிலும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தொிவித்துள்ளார்.



    • லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே நெடுவாசல் மேற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). இவர் நேற்று இரவு நெடுவாசல் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். அப்போது கிரஷரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு பெரம்பலூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் பெரம்பலூர் செல்வதற்காக அந்த டிப்பர் லாரியை கைகாட்டி நிறுத்தி ஏறியுள்ளார். மீண்டும் லாரி புறப்படும் போது பின் பக்கம் இடது சக்கரத்தில் கந்தசாமி சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீபாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ம்பாபிஷேகத்தை முன்னிட்டு கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் ஸ்ரீபாலமுருகன் மூலவர், ஸ்ரீராஜகணபதி மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் நிறைவுற்று, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி, சுதர்சன ஹோமங்கள், கோபூஜை, அதனைத்தொடர்ந்து அன்று மாலை வாஸ்து பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

    நேற்று காலை 2-ம்கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம்கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 5 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை யாசாலையில் இருந்து புனிதநீருடன் கடங்கள் புறப்பாடும், கோபுர விமான மகா கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது. இன்று இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா விமரிசையாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா மற்றும் மகா அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீபாலமுருகன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • 10 மாத பெண் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் அட்சயராஜசேகர். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினர் பாண்டகப்பாடியில் உள்ள தனது வயலிலேயே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யுவராஜ் (3) என்ற மகனும், துர்கா தேவி என்ற 10 மாத பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் குழந்தை துர்காதேவி நேற்று வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் குழந்தை துர்காதேவி தவறி விழுந்துள்ளார்.

    வீட்டில் குழந்தை இல்லாததால் சரஸ்வதி அருகில் தேடியுள்ளார். அப்போது கிணற்றில் குழந்தை மூழ்கிக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தையை மீட்டனர். மேலும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் புதுமுக வரவேற்பு விழா நடைபெற்றது
    • முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) முதலாம் ஆண்டு மாணவிகள் புது முக வரவேற்பு விழா தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் புதுமுக மாணவிகள் குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து விநாயகர் பூஜை நடைபெற்றது. இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், புதுமுக மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இனிப்புக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். விநாயகர் பூஜை முடிந்தவுடன் புதுமுக மாணவிகள் அனைவரும் கல்லூரி மைதானத்தில் புதிய முயற்சி, புதிய சிந்தனை, பெற்றோர்களின் நம்பிக்கை போன்றவற்றை மனதில் நிறுத்தி, பலூன் காற்றில் உயர பறப்பது போல கல்வி பயணத்திலும், வாழ்விலும் தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும் என்ற உயர் சிந்தனையோடு உற்சாகத்துடன் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். அதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைக்கு சென்று தனது கல்லூரி பயணத்தை இனிதே தொடங்கினர்.

    • ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
    • அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    பெரம்பலூர் :

    சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, மணிவிழுந்தான் அருகே ஏட்டுக்காட்டை சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் ஜீவா என்ற ஆனந்தராஜை (வயது 27) நாட்டு சாராயம் விற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா, தேவையூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கள்ளக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் சிவா (28) மங்களமேடு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று ஆனந்தராஜ், சிவா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    • பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் விபத்தில் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புது வேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் புது வேட்டைகுடி பஞ்சாயத்தில் மேற்கண்ட அதே பணிகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் கடந்த 1-ம் தேதி அதிகாலை பொது மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவ தற்காக புது வேட்டைகுடி -வேப்பூர் சாலையில் மொபட்டில் சென்றார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பெரியசா மி சிகிச்சை பலன் அளிக்கா மல் இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி குன்னம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது
    • வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்.

    பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறை பாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், க,எறையூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பெரியவடகரை கிராமத்தில், மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் வட்டம், எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சு.சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.சரவணன் தலைமையிலும் வருகிற 08.07.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    ×