என் மலர்
பெரம்பலூர்
- பெ.நல்லூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பெ.நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி நாள்தோறும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. மேளம் தாளம் முழங்க ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோடும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறைவு பெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
- பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி ஊத்தா கூடை, வலை மூலம் கெண்டை, ஜிலேபி, தேங்காய்பாறை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் குத்தகைக்கு ஏலம் எடுத்து மீன்களை வளர்த்து வருவார்கள். இவ்வாறு மீன்களை வளர்த்து குறிப்பிட்ட காலம் வரை பிடித்து விற்பனை செய்வார்கள். பின்னர் ஏரியில் குறிப்பிட்ட அளவிற்கு நீர் அளவு குறைந்தால் பொதுமக்கள் சார்பில் அங்கு மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது ஏரியில் நீர் அளவு குறைந்ததால் பொதுமக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை பொதுமக்கள் மீன்பிடித்து கொள்ளலாம் என மீனவர்கள் அறிவித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவே ஏரியில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் மீன்பிடித்த பொதுமக்களிடம் பேசி நாளை காலை (நேற்று) முதல் மீன் பிடித்துக்கொள்ளலாம் என அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி ஊத்தா கூடை, வலை மூலம் கெண்டை, ஜிலேபி, தேங்காய்பாறை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். இதில் அரும்பாவூர்,அன்னமங்கலம், பூலாம்பாடி, வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். நேற்று முன்தினம் இரவே மீன்களை சிலர் பிடித்ததால் பொது மக்களுக்கு குறைந்தளவு மீன்களே கிடைத்தன. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி சென்றனர். பின்னர் அவர்கள் குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதனால் அரும்பாவூர், அன்னமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.
- கட்டுமான தொழிலாளர்கள் 18-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
- கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான சங்கத்தின் மாநில பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் 35, 36, 37-வது வாரிய கூட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும்.
மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் வருகிற 18-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- குன்னம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், பேரளியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குன்னம் வட்டார வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பேரளிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வட்ட வழங்கல் அலுவலரின் உதவியாளர் அருள்முருகன், குன்னம் தனி வருவாய் ஆய்வாளர் ஏகாம்பரம், பேரளி கிராம உதவியாளர் பெரியசாமி ஆகியோருடன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதாக கூறப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் தேடி கொண்டிருந்தனர். அப்போது பேரளியில் மருவத்தூர் பிரிவு சாலையில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அவர்களை கண்டவுடன் சரக்கு வாகன டிரைவர் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடினார்.
போலீசார் துரத்தி சென்றும் டிரைவரை பிடிக்க முடியவில்லை. பின்னர் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 45 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. பின்னர் அந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றிய குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 1,800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பெரம்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள முருக்கன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கென்று தனியாக தேர் இல்லாததால் விழாக்காலங்களில் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான தேரை கொண்டு வந்து தேரோட்டம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் மகா மாரியம்மன் கோவிலுக்காக புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது. இதையடுத்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.
- செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடந்தது.
- பக்தர்களுக்கு பச்சை குங்குமம் மற்றும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. முதலில் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது குபேர ஹோமமும் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் சேரும், செல்வாக்கு உயரும் என்பதும், தொடர்ந்து 3 முறை குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இதனால் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பச்சை குங்குமம் மற்றும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் அடுத்த குபேர ஹோமம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறவுள்ளது.
- ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- பயிற்சி முகாமை பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தொடங்கி வைத்தனர்
பெரம்பலூர் :
பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் பெரம்பலூர், எசனை, சிறுவாச்சூர், குரும்பலூர், அம்மாபாளையம் ஆகிய 5 இடங்களில் உள்ள பள்ளிகளில் நடந்தது. பயிற்சி முகாமை பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தொடங்கி வைத்தனர். பயிற்சியை பள்ளி கல்வித்துறையின் உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், டயட் விரிவுரையாளர் உமா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் கருத்தாளர்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் நலம், மன நலம் பேணுதல், நல்வாழ்வு மற்றும் சிறப்பு தேவை கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கையாள்வது ஆகிய தலைப்புகளில் 103 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
- இது தொடா்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு. கொத்தனாரான இவர் கடந்த 2-ந்தேதி இரவு ஈரோடு மாவட்டம், காசிபாளையம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த், அஜித் ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து பெரம்பலூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டினார். துறையூர்-பெரம்பலூர் சாலையில் அடைக்கம்பட்டியில் டி.களத்தூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, அஜித்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அந்த வழியாக நடந்து சென்ற அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கார்த்திக் (32) என்பவர் மீது மோதியது.
இந்த விபத்தில் சின்ராசு, கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனந்த், அஜித் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதில் சின்ராசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடா்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் வெங்கடேசன்(வயது 35). இவர் தனது வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 1-ந் தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- இழப்பீடு தொகையாக ரூ.59 லட்சத்து 5 ஆயிரத்து 400-க்கான காசோலைகள், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட 2 அமர்வுகளில், ஒரு அமர்வில் பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் மூர்த்தியும், குற்றவியல் நடுவர் எண்-2 சங்கீதா சேகரும் அமர்ந்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடித்தனர். 2-வது அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன் மற்றும் மூத்த வக்கீல் காமராசு அமர்ந்து வங்கி வாராக்கடன் வழக்குகளை எடுத்து சமரசமாக பேசி முடித்தனர்.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 22 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.59 லட்சத்து 5 ஆயிரத்து 400-க்கான காசோலைகள், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை, வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.
- நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
- தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, மரவத்தூர் போலீஸ் சரகம், சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாளி கண்டபுரம் பகுதியில் வயல் உள்ளது. மகன் நகுல்ராஜ் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நகுல்ராஜ் தனது நண்பர்கள் தர்மராஜ் (16) மற்றும் இரண்டு சிறுவர்களுடன் அந்த வயலுக்கு சென்றார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை நகுல்ராஜ் ஓட்டிச் செல்ல அருகாமையில் தர்மராஜ் மற்றும் 2 சிறுவர்கள் உட்கார்ந்திருந்தனர்.
வயல் காட்டில் இருந்து சற்று தொலைவில் டிராக்டர் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஓடை பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவன் நகுல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலக சாதனை படைத்த சட்டக்கல்லூரி மாணவரை மற்றவர்கள் பாராட்டி வருகின்றனர்.
- தமிழகத்தில் தட்டச்சு மூலம் ஓவியம் வரையும் முதல் நபர் என்ற பெருமையை மாதேஸ்வரன் பெற்றுள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கல்லை கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 22). இவர் சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வருகிறார். ேமலும் இவர் தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஜூனியர், சீனியர் கிரேடுகள் மற்றும் உயர்வேகம் முடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மாதேஸ்வரன் ஏ 4 காகிதத்தில் முதலில் இந்திய வரைபடத்தை வரைந்து, அதனை தட்டச்சு எந்திரத்தில் வைத்து இந்தியா என ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்தார்.
பின்னர் அவர் ஏ 4 தாளில் கடவுள்களின் உருவங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களின் உருவங்களை, ஆங்கிலத்தில் அவர்களது பெயர்கள் மூலம் தட்டச்சு செய்து படமாக வரைந்துள்ளார். தட்டச்சு செய்து வரைந்த அரசியல் தலைவர்களின் உருவப்படங்களை அவர்களிடம் நேரில் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் தட்டச்சு எந்திரத்தில் மொத்தம் 324 ஏ 4 தாள்களில் அம்பேத்கர் என்ற பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 17.8 அடி நீளம், 12.5 அடி அகலம் என்ற அளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்.
இந்த சாதனையை புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனை புத்தகம் என்ற நிறுவனம், சாதனை புத்தகத்தில் இடம் பெறச்செய்து மாதேஸ்வரனுக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி பாராட்டியுள்ளது. தமிழகத்தில் தட்டச்சு மூலம் ஓவியம் வரையும் முதல் நபர் என்ற பெருமையை மாதேஸ்வரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.






