என் மலர்
பெரம்பலூர்
- மூதாட்டிகளிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்த புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு அருகே உள்ள திருமாந்துறையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் 1¼ பவுன் தங்க சங்கிலியையும், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் 6¼ பவுன் தங்க சங்கிலியையும் மர்மநபர் ஒருவர் கடந்த ஆண்டு பறித்துச்சென்றார். இதுகுறித்த புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டிகளிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் அரசம்பட்டி மேலத் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
- பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது
பெரம்பலூர்,
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, இத்திட்டத்தின் விண்ணப்ப படிவங்களை நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் தங்கள் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று குடும்பத்தலைவிகளிடம் வழங்கி ஒப்புகை பெற வேண்டும்.
வீட்டில் குடும்பத்தலைவிகள் இல்லை என்றால் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடம் வழங்கி ஒப்புகை பெற வேண்டும். விண்ணப்பங்களை வழங்கும்போதே, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கு அமைக்கப்படவுள்ள சிறப்பு முகாம்கள் குறித்தும், எந்த நாளில் எந்த நேரத்தில் குடும்பத்தலைவிகள் சிறப்பு முகாமிற்கு வரவேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் டோக்கன் வழங்கிட வேண்டும். பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 282 நியாயவிலைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முகாம்கள் நடத்த உகந்த வகையில் உள்ள சமுதாய க்கூடங்கள், பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாட்களில் முகாமிற்கு உரிய நாளில் வர இயலாத குடும்பத்தலைவிகள் முகாம் நடைபெறும் கடைசி 2 நாட்களில் விண்ணப்பங்களை வழங்கலாம். முகாமிற்கு வரும் குடும்பத்தலைவிகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப்புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளை கொண்டுவரவேண்டும் என்ற விபரங்கள் உங்கள் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களாக உள்ள அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர்பா ண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்திய பாலகங்காதரன், துணை ப்பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், கூட்டுறவுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் பாரில் மதுகுடித்த தொழிலாளி திடீரென இறந்தார்.
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அருணாச்சல கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் குடிநீர் கேன்களை வீடுவீடாக வினியோகம் செய்து வந்தார். இவருக்கு சுமதி (39) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி கொண்டு அங்குள்ள பாரில் மரத்தடியில் அமர்ந்து குடித்துள்ளார்.
பாரில் வேலை செய்யும் பணியாளர்கள் இவர் மரத்துக்கு அடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் மின்விளக்கை நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான பாருக்கு வந்து பார்த்த போது, மரத்தடியில் கண்ணன் வாந்தி எடுத்து அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கண்ணன் மது குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த மது மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது மதுபானத்தில் வேறு ஏதேனும் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் அருகே 25 கிலோ கஞ்சாவை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் :
ஆந்திராவில் இருந்து ராணிப்பேட்டை வழியாக பெரம்பலூருக்கு சிலர் கஞ்சா கடத்தி வருவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் ேபரில் பெரம்பலூர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி மேற்பார்வையில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் மணியண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பால்கர், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார் பெரம்பலூர் வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற காரை விரட்டி சென்றனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா கடத்தி வரப்பட்ட காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை, ஒரு ஷேர் ஆட்டோவிற்கு 9 பேர் கொண்ட கும்பல் மாற்றி கொண்டு இருந்தது. அப்ேபாது அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் செட்டிகுளம் கிராமம் மலையடிவாரம் பகுதியை சேர்ந்த மாயழகு என்பவரது மகன் மதியழகன் (வயது 35), செட்டிகுளத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகன் நாகப்பா (45), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கமல் (30), ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்செல்வன் (48), வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ்குமார் (34), ஆலத்தூர் தாலுகா பெருமாள் கோவிலை சேர்ந்த சுந்தராசு மகன் சசிகுமார் (27), பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அசோக்குமார் (26), பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த மெகபூ பாஷா என்பவரது மகன் ஷாஜகான் (52) திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுதாகர் (43) என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்து ஷேர் ஆட்டோவிற்கு கஞ்சா பொட்டலங்களை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்திய ஷேர் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையை சேர்ந்த ஷாஜகான், தனது காரில் கஞ்சா பொட்டலங்களை ராணிப்பேட்டையில் இருந்து கடத்தல் கும்பல் உதவியுடன் மொத்தமாக வாங்கி வந்துள்ளார். பிறகு கஞ்சா வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வதற்கு செட்டிகுளத்திற்கு அதே காரில் எடுத்து சென்றுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைதான 9 பேரும் பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குரும்பலூர்-அம்மாபாளையம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மங்கூன் துணைமின் நிலையத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சி பகுதி, பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புதுஅம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- செட்டிகுளம் மாவிலங்கு பகுதியில் வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
- வனச்சரக அலுவலர் பழனி குமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன் மற்றும் .அன்பரசு ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பழனி குமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன் மற்றும் .அன்பரசு ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் சிலர் டார்ச் லைட் வேட்டை நாய்களுடன் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. செட்டிகுளம் அடுத்த மாவிலங்கை பகுதியில் மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் கண்ணபாடியை சார்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவரது தலைமையில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த கீர்த்திவாசன், ரகுராம் உள்ளிட்ட 6 நபர்கள் அடங்கிய குழுவினர் 3 வேட்டை நாய்கள் மற்றும் சில டார்ச் லைட்டுகள் எடுத்துக் கொண்டு 3 இருசக்கர வாகனங்களில் வனவிலங்குகளை வேட்டையாட சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி மாவட்டத்திலிருந்து வீடு செப்பனிடும் வேலை செய்வதற்காக ஐந்து நபர்களும் கண்ணபாடியை சார்ந்தசெந்தமிழ் செல்வன் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் செந்தமிழ் செல்வன் தூண்டுதலின் பேரில் வேட்டைக்கு புறப்பட்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தாங்கள் வேட்டையாட வந்ததாக ஒப்புக்கொண்டு இணக்க கட்டணம் கட்ட சம்மதித்ததின் பேரில் வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.90 ஆயிரம் இணக்க கட்டணம் விதித்தனர்.
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை கல்லூரியில் புதுமுக வரவேற்பு விழா நடைபெற்றது
- விழாவில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) புதுமுக வரவேற்பு விழா மற்றும் மாணவிகள் பொறுப்பு ஏற்கும் விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வேந்தர் சீனிவாசன் சிறப்பு விருந்தினர் தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடைப் அணிவித்து நினைவு பரிசினினை வழங்கினார்.
தொடர்ந்து கல்லூரி செய்தி மடலை வெளியிட்டார். அதனை சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை படிக்கற்களாக நினைத்து முன்னேறவேண்டும் என கூறி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிறைவாக ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீநிதி நன்றியுரை கூற மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர், புலமுதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
- பெரம்பலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வாக்குறுதி 313-ன்படி முறையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் தமிழக அரசு வழங்கிட வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் உண்ணாவிரத கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரத்தை வழங்கிட வேண்டும். டேட்டா சென்டர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை நிர்வாகங்கள் பொது வைப்பு நிதி பெறுவதற்கு மூத்த குடிமக்களை வதைக்கக்கூடாது. முன்னாள் சமூக நல இயக்குனர் ஆப்ரஹாம் உத்தரவின்படி ஓய்வு கால பலன்களை ஓய்வு பெறும் அன்றே முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். முடிவில் பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.
- கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது
- மாவட்ட செயலாளர் ராஜா கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பா.ம.க.வின் பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜா என்ற காட்டு ராஜா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
- அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன
பெரம்பலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வட்டார அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் வாழ்த்தி ேபசினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும். வட்டாரத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சங்க நிர்வாகிகளிடம், இயக்குனரின் கடிதப்படி 3 மாதத்திற்கு ஒரு முறை அழைத்து பேசி சரி செய்ய வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொது வைப்பு நிதி பிடித்தம் செய்த தொகையில் கடன் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொது வைப்பு நிதிைய உடனடியாக வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசும், அங்கன்வாடி நிர்வாகமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் வட்டாரங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என முத்திரையிட வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுக்காலனி, கீழப்புலியூர் சிலோன் காலனி மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று பி.ஐ.பி.-எச்.எச். முத்திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் அடையாள அட்டையில் அந்த முத்திரையிடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து எங்களுக்கும் அடையாள அட்டையில் அந்த முத்திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
- பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது, என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.






