என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சங்க அலுவலகம் தீப்பற்றி எரிந்து நாசமானது
    • அரை மணி நேரம் போராடி அணைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் உள்ளே வரும் நுழைவு பகுதி அருகே மாவட்ட தலைமை சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்துக்கு கீற்றுக்கொட்டகையிலான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரை நேற்று காலை திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அலுவலகத்தில் உள்ளே இருந்த வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீற்று கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள அவரது வயலில் கருவேல மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • புகையிலை பொருட்கள் விற்ற

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மங்களமேடு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சக்கரபாணி (53), சங்கர் (51) ஆகியோர் தங்கள் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்கரபாணியிடம் இருந்து சுமார் ரூ.12,990 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், சங்கரிடம் இருந்து சுமார் ரூ.6,600 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் செலுத்திட வேண்டும். கடந்த மே மாதம் 15 நாட்கள் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்த தின ஊதியம் ரூ.580-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பணிகளை புறக்கணித்து காலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மதியம், இரவு நேர உணவுகளை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் போராட்டக்காரர்களிடம் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் போலீசாரும், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராதா தலைமையில் அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆணையாளர் ராதா பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும் என்று எழுதி கையெழுத்திட்டு போராட்டக்காரர்களிடம் கொடுத்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று வழக்கம் போல் அவர்கள் வந்து தங்களது பணிகளை செய்தனர்.

    • போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்து வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் தாலுகா, கொளத்தூர்-திம்மூர் பிரிவு ரோடு அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நொச்சிக்குளம் மேலத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 35), அன்பழகன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெரம்பலூரில் நகராட்சி துய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
    • இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் சிஐடியு தொழி ற்சங்கம் சார்பில் பல்வேறு கோரி க்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட ங்கள் நடத்தியும், கலெக்டரிடம் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் பணியினை புறக்க ணித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு கிளை செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட தலைவர் ரெங்க நாதன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நகராட்சி, பேரூரா ட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணை எண் 10,139 ஐ உடனடியாக திரும்ப பெறவேண்டும், கடந்த மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்,

    ஊதியத்தில் பிடித்தம் செய்த இபிஎப் தொகையை முறைகேடு செய்யாமல் கணக்கில் செலுத்திட வேண்டும், தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி ஆகிய பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள், டிரை வர்கள், குடிநீர் பணியா ளர்கள் உள்ளிட்ட ஊழி யர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவித்த தினக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். 8 மணிநேர வேலை வாரவிடுப்பு, பண்டிகைகால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல் படுத்த வேண்டும்

    இஎஸ்ஐ அடையாள அட்டை, சம்பளசீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் சீருடைகளை தடையின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறு த்தப்பட்டது.கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணியினை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 90 பெண்கள் உட்பட140 பேர் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் நேற்று அகற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார். இதன்படி நகராட்சி ஆணையர் (பொ) ராதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உழவர் சந்தை அருகில் ஆக்கி ரமித்து கட்டப்ப ட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியபாரிகள் கலந்து கொண்டனர்.

    • சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.
    • பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



    • போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது.
    • 32 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், வேலுமணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 32 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்.
    • மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு ஓடி வந்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இ.எஸ்.ஐ.) அடையாள அட்டை, ஊதிய சீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 105 பேரை கைது செய்தனர்.

    • பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததை தொடர்ந்து கோர்ட் உத்தரவு

    பெரம்பலூர்,

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் ரபீக். இவரது மகன் சீராஜ் (வயது 23). ஆப்டீசியனான இவர் அரியலூரில் கண் கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர்-திருச்சி சாலையில் பூவாளூரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று சீராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீராஜின் மனைவி கவுசிநிஷா இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்து 712-ஐ இழப்பீடாக கவுசிநிஷாவுக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கவுசிநிஷாவுக்கு இழப்பீடு வழங்காமல் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது வட்டியுடன் ரூ.38 லட்சத்து 92 ஆயிரத்து 547-ஐ இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த இழப்பீட்டு தொகையையும் அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். 

    ×