என் மலர்
பெரம்பலூர்
- பிரியாணி கடை உரிமையாளருக்கு அபராதம்
- 3 மணி நேர ஆய்வுக்கு பின் தரமற்ற உணவு பொருட்களுடன் தயாரித்ததாக அபராதம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்குரோடு சந்திப்பு அருகே சர்வீஸ் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. இந்த கடையை பேரளியை சேர்ந்த ரகு என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பிரியாணி கடையில் கால்நடை டாக்டர் ராஜேஷ் கண்ணா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியாணி வாங்கி சென்றுள்ளார்.ஆனால் பழைய பிரியாணியை சுடவைத்து விற்பனை செய்துள்ளதாகவும், இந்நிறுவனத்தினர் மீது உணவு பாதுப்புத்துறையினர் நடவடிக்கை தக்க எடுக்க வேண்டும் என்றும் கூறி, பிரியாணி வாங்கியதற்கான பில்லையும் இணைத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமாருக்கும் புகார் சென்றது. அவரது உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம், கால்நடை டாக்டர் புகார் அளித்திருந்த கடையில் திடீர் ஆய்வு செய்தனர். சுமார் 3 மணி நேரம் அங்கிருந்து, உணவுகளை பரிசோதித்தனர். இதில் 7 கிலோ அரிசியை சாதமாக வடித்து பிறகு அதனை குளிர்பதன சாதனத்தில் வைத்திருந்தாகவும், நூடுல்ஸ் உணவு தரமாற்றதாக இருந்ததாகவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் கள ஆய்வில் தெரியவந்தது. உடனடியாக குளிர்பதன சாதனத்தில் வைத்திருந்த சாதம் மற்றும் நூடுல்ஸ் உணவு ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். பிறகு அங்கு விற்பனைக்காகவும், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதற்காவும் வைத்திருந்த மட்டன் பிரியாணியை கைப்பற்றி, உணவு தரக்கப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காகவும், சமைக்கப்பட்ட உணவை குளிர்பதன சாதனத்தில் வைத்திருந்ததாகவும் கூறி கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
- 23-ந் தேதி வருடாபிஷேகம் நடைபெறுகிறது
அரும்பாவூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி தேதி நடைபெற உள்ளது.அதனை யொட்டி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் பாரதம் படிக்கும் நிகழ்வும் நடைப்பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பச்சமலை அடிவாரம் வாவடி ஆற்றங்கரையில் ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர்.வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்று வழிபட்டனர்.அதனைத்தொடர்ந்து கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.வரும் 21-ந்தேதி காலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்றிரவு விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துவருகின்றனர்.
பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருடாபிஷேக திருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவி ன் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி நடைபெறஉள்ளது.அன்றுகாலை அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்,பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4-மணிக்கு மேல் நல்லதண்ணி குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டு வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந்தேதி மாலை பொங்கல் மாவிலக்கு பூஜையும்,இரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும்போது,ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது என விழாக்ழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பூலாம்பாடி மண்ணின் மைந்தன் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
- மகா மாரியம்மன் உள்ளிட்ட 10 சாமிகளின் வீதி உலா நடைபெற்றது.
- தேரோட்டம் 22-ந் தேதி நடைபெறுகிறது.
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரியம்மன் உள்ளிட்ட 10 சாமிகளின் வீதி உலா நடைபெற்றது.
இதையொட்டி வாணவேடிக்கையுடன் 10 டிராக்டர்களில் சிறப்பு அலங்காரத்தில் எலி வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், கையேந்தியில் பெருமாள், மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி, அன்ன வாகனத்தில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் காளியம்மன், சரஸ்வதி, மீனாட்சி, ராஜேஸ்வரி எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.
இதில் மோட்டார் சைக்கிளை சிவன் ஓட்டுவது போலவும், பின்னால் பார்வதி அமர்ந்து வருவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.
- பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
- வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்டபோது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு வேலுமணி பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே மது அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் அவர் நீங்கள் அனைவரும் போதைப்பொருட்கள் உபயோகம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும், என்றார்.
- பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு
பெரம்பலூர் பராமரிப்பு பணிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.
பெரம்பலூர் கிராமியத்துக்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோன்று கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர், தொண்டமாந்துறை பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்கள் ரவிக்குமார் (சிறுவாச்சூர்), செல்வராஜ் (பெரம்பலூர் கிராமியம்), மாலதி (கிருஷ்ணாபுரம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் சனி பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.
- லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்
- கணவன் கண் முன்னே நடந்த சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி இந்திராணி (வயது 32). நேற்று இரவு பிரகாசமும், இந்திராணியும் பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி சென்று கொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மீது அந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரகாசம் சாலையின் வலது பக்கம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்திராணி சாலையின் இடது பக்கம் விழுந்ததால் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரகாசத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை கண்டித்தும், அடிக்கடி விபத்து ஏற்படும் இந்தப்பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.
- நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலத்தூர் வட்ட வழங்க அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்தும், செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்தும், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும் பொழுது தரமான பொருட்களாகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷனில் வழங்கப்படும் அரிசியினை எக்காரணத்தை கொண்டும் கால்நடைகளுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் தக்க நடவடிக்கை அரசு அதிகாரிகளால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, எரிவாயு சிலிண்டரை நுகர்வோர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியை- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பரமேஸ்வரி (23) பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார். பின்னர் பரமேஸ்வரி தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.
ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு குமார் மற்றும் அவரது குடும்பத்தினா் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைத்து பார்த்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், தொடர்ந்து விசாரணை நடத்தியும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இரு சக்கர வாகனம் மீது கார் மோதி துணி வியாபாரி பலியானார்
- வியாபாரத்திற்கு சென்ற போது சம்பவம்
பெரம்பலூர்,
விருதுநகர் மாவட்டம் சுத்தமடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சிவக்குமார் (வயது 45). இவர் பெரம்பலூர் வெங்க டேசபுரம் கோல்டன் கேட்ஸ் பள்ளி அருகில் தங்கி மோட்டார் சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.
வழக்கம் போல் சிவக்குமார் இன்று காலை தொழுதூருக்கு துணி வியாபாரம் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 ரோடு பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முன்பு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சிவகங்கையில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் தவசி மகன் கவியரசன் (வயது 19) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் எதிர்பார விதமாக சிவக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
கார் டிரைவர் கவியரசன், காரில் இருந்த காளையார் கோவிலை சேர்ந்த நடராஜ் (43), அசோக்குமார் ஆகிேயார் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமார் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
- மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளதால், பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் புதிதாக தொடங்க வேண்டும். நகர் ஊரமைப்பு அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், நிரந்தர கட்டிடத்தில் செயல்படும் வகையில் புதிதாக அலுவலகம் கட்டித்தர வேண்டும். மாவட்ட மைய நூலகத்தில் முழுமையாக சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். பெரம்பலூர் வருவாய் கோட்டத்தை 2 ஆக பிரித்து குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். தாலுகா தலைநகரான குன்னம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட ஆலோசகரும், பன்னாட்டு ஜேசீஸ் சங்கத்தின் பயிற்சியாளருமான வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






