என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பேருந்தில் தனியார் நிறுவன ஊழியர் மடிக்கணினி அபகரிப்பு
- அரசு பேருந்தில் தவற விட்ட, தனியார் நிறுவன ஊழியர் மடிக்கணினி அபகரிப்பு
- மடிக்கணினியை அபகரித்தவர் கைது
பெரம்பலூர்,
திருச்சி பட்டவர்த் சாலையில் வசித்து வருபவர் கணபதி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த கணபதி, மீண்டும் வேலைக்கு செல்ல திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, கணபதி தனது மடிக்கணினி வைத்திருந்த பையை பஸ்சில் வைத்துவிட்டு டீக்குடிக்க இறங்கி உள்ளார். அதற்குள் அந்த பஸ் புறப்பட்டுவிட்டது. இதையடுத்து அவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், மடிக்கணினியுடன் அந்த பஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டது குறித்து கூறியுள்ளார். போலீசார் உடனடியாக திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு குறிப்பிட்ட பஸ்சின் பதிவு எண்ணை தெரிவித்து, பஸ்சில் சோதனையிடுமாறு கூறியுள்ளனர். அதன்படி நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார், அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த ஒண்டிமுத்து (40) என்பவர், கணபதியின் மடிக்கணியை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து ஒண்டிமுத்து மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, மடிக்கணினியை மீட்டனர்.






