என் மலர்
பெரம்பலூர்
- சிறப்பு பட்டா முகாம்கள் இன்று நடக்கிறது.
- பெரம்பலூர்-குன்னத்தில் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களுக்கும், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், குன்னம் தாலுகாவில் குன்னம் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா முகாம்கள் நடந்தது. சிறப்பு பட்டா முகாமில் வீட்டுமனை பட்டா மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்கள், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான மனுக்கள், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்
- சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரத்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட இணை செயலாளர் மீனா கோரிக்கைகளை வலியுறுத்தி படிவத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டும், கைரேகை வைத்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ரத்த கையெழுத்து இயக்க படிவத்தை வருகிற 30-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடும், கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை சமூக நல ஆணையர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.
- கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் பஸ் நிலையம் அருகே கலையரங்கம் உள்ளது. இதன் அருகே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக் கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்தப்பகுதியில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றி கொள்வதாக கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். மேலும் அந்த இடத்தில் யாரும் கொடிக்கம்பம் நடுவதில்லை என முடிவு செய்து ஏற்கனவே நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகளே அகற்றிக்கொண்டனர்.
- அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்- தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
- அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் அதிமுக சார்பில் வரும் 20-ம்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் வரும் 20-ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டின் டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனமும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டமும் சென்னையிலிருந்து துவங்கி மாநில முழுவதும் சுற்றி வந்து நாளை (19ம்தேதி) மதுரை சென்றடைகிறது. இந்த மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனம் மற்றும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டம் நேற்று பெரம்பலூர் வந்தது.
பெரம்பலூரில் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சாரம் வாகனம் மற்றும் ஜோதி ஓட்டம் நகர் முழுவதும் வலம் வந்தது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரம்பலூரில் சிலை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது
- பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் நான்குமேம்பாலம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு சிலை வைக்கவேண்டும் என நகர பாஜக வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நான்கு ரோடு கட்சி கொடிகம்பம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பொது செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருள், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாய்பாய்-க்கு பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலம் பகுதியில் உருவ சிலை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டம் தேனூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றிருந்த விவசாயி பலியானார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 65). விவசாயியான இவர் தனது வயலில் இரவு காவல் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். திருச்சி எதுமலை ரோடு, டி.களத்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர், பிடாரி அம்மன் கோயில் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். அவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற மாருதி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அவர் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. மணிவேல், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
- அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்
குன்னம்,
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு புகார் மனு முகாம் நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடந்தது.
பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கனை பெற்று விசாரணை நடத்தினார். முகாமில் பெறப்பட்ட 31 மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் அனைத்து போலீஸ்ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையும் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இம்முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வருவதற் பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் புது பஸ்ஸ்டாண்ட் செல்லவும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என எஸ்பி ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.
- கருப்பட்டங்குறிச்சியில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாவாதாக வேதனை தெரிவிக்கின்றனர்
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.
அகரம்சீகூர் ஊராட்சியில் திட்டக்குடி பார்டர், வயலூர் கருப்பட்டங்குறிச்சி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கருப்பட்டங்குறிச்சியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் சுமார் 60- வருடங்களாக வயலூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
கருபட்டங்குறிச்சியில் இருந்து வயலூரில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் எனவே கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை புதிய நியாய விலை கடை அமைக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கருப்பட்டங்குறிச்சி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கோவில்பாளையத்தில் 3 முறை பாம்பு கொத்தியதில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி சாவு
- குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மலர்கொடி (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் தனித்தனியாக கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு மலர்கொடியின் கையில் 3 இடங்களில் கடித்துள்ளது. பாம்பு கடித்ததை உணராத மலர்க்கொடி, தனது கணவரை அழைத்து சிறுநீர் கழிக்க அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அவரை அழைத்து சென்றுவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மலர்கொடியின் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட பெரியசாமி கட்டிலில் பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மலர்கொடியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.சாவு
- பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
- பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலா ளரும், சார்பு நீதிபதியு மான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அ ட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தி னவிழா கொ ண்டாடப்பட்டது. பெரம்ப லூரில் உள்ள மரகதவ ல்லித்தாயார் சமேத மதனகோ பாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து வி.சி.க.வினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது
பெரம்பலூர்,
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திராதேவி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை நீதிபதியின் முன்பு நிறுத்தி விரைந்து தண்டனை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் வீர.செங்கோலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






