என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மங்களமேடு தேவையூர் அருகே நடந்த கார் விபத்தில் திருநங்கை பலியானார்
    • உடன் சென்ற இரண்டு வாலிபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்த நாசர் பாஷாவின் மகன் அகமது(வயது 22). அதே தெருவை சேர்ந்த அப்பாசின் மகன் சுதீப்(19). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரெமோ(35) என்ற திருநங்கையுடன் நள்ளிரவில் ஒரு காரில் சென்றனர்.மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் பிரிவு ரோடு அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருநங்கை ரெமோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெமோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 பேரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாடலூர் காவல் நிலையம் அருகே
    • அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது

    குன்னம்

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூர் அருகே இரூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான கல்குவாரிகளும், கல் உடைக்கும் கிரஷர்களும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையொட்டி துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் துர்நாற்றம் வீசிய பகுதிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது சாலையோரத்தில் அழுகிய நிலையில் பிணம் ஒன்று கிடந்துள்ளது. நீல நிறம் ஜீன்ஸ் பேன்ட், மஞ்சள் கருப்பு கோடு போட்ட டீசர்ட்டும் அணிந்திருந்த இறந்த நபரின் வயது சுமார் 25 - 30க்குள் இருக்கலாம் என்று தெரிகிறது. பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் கிடந்த அந்த உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். யாரேனும் கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து பிணத்தை வீசி சென்றுள்ளார்களா? அல்லது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தவரா? அருகில் நிறைய கல்குவாரிகள் இருப்பதால் அதில் ஏற்பட்ட மோதலால் கொல்லப்பட்டவரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டு பணிக்கு வராத 16 பேருக்கு ஒரு வருட தடை
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் திடீர் ஆய்வில் அதிரடி நடவடிக்கை

    பெரம்பலூர்

    வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பணிக்கு வராத 16 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூரில் ஊரக வளர்ச்சித் துறையின் 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இக்குளத்திற்கான கரைகளை சமப்படுத்தி, பலப்படுத்தும் பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) மூலம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த பணியினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டினை பார்வையிட்ட கலெக்டர், பணியில் இருந்த தொழிலாளர்களை எண்ணிப்பார்த்தார்.

    அப்போது வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொழிலாளர்களில் 16 பேர் குறைவாக பணி செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார்.

    இதையடுத்து கலெக்டர் இதுகுறித்து பணி தள பொறுப்பாளரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் உரிய விளக்கம் அளிக்குமாறும், பணிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்த 16 தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை நீக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி 16 தொழிலாளர்களுக்கு அடுத்த ஓராண்டிற்கு 100 நாள் வேலையில் பணி வழங்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று 100 நாள் வேலை நடைபெறும் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். பணிகளில் ஏதேனும் முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்ட பணி தள பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் எச்சரித்தார்.

    • 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
    • ஜெர்மன் வங்கி உதவியுடன் 500 பஸ்கள் வாங்க உள்ளதாக தகவல்

    பெரம்பலூர்,

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு இறந்த 62 போக்குவரத்துத்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 21 பேருக்கு டிரைவர் பணி நியமன ஆணைகளும், 35 பேருக்கு கண்டக்டர் பணி நியமன ஆணைகளும், 6 பேருக்கு தொழில்நுட்ப பணியாளர்களுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

    விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரம்பலூர் பணிமனையில் பணியாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையினை அமைச்சர் திறந்து வைத்தார்.

    கடந்த 10 ஆண்டு காலமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஆணையின்படி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த அரசுக்கு ரூ.40 கோடி கூடுதல் செலவாகும்.

    ஏற்கனவே, மின்சார பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து விட்டோம். ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு 500 பஸ்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 100 பஸ்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் சென்னையில் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பிற பெருநகரங்களில் மின்சார பஸ் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கான பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையினை மாற்றி முதல்-அமைச்சர் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார். 

    • பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது
    • கணவரை பிரிந்த நிலையில, தான் பழகி வந்த லாரி டிரைவர் வேறாரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக புகார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு பெண் வந்தார். அங்கு அவர் தர்ணாவில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பெண் கூறுகையில், எனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தபோது, எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். மேலும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி நானும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். ஆனால், என்னை அந்த லாரி டிரைவர் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். அதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அந்த லாரி டிரைவரிடம் கேட்டபோது அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அவரிடம், ஏற்கனவே இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    • பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் சான்றிதழை வழங்கினார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 77- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர்களை சிறந்த தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டியும் சான்றிதழ்களையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

    மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள் .இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடக்கம்
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பிஆர் 10 மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான அரசு , பெரம்பலூர் சரக துணை பதிவாளர் அ. இளஞ்செல்வி பெரம்பலூர் நகர மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவர் வேப்பந்தட்டை க. ராமலிங்கம் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கடன் மேலாவிற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கம் தலைவர் கருணாநிதி செய்து இருந்தார்.

    • கீழப்புலியூர் பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் சாமி கோவிலில் ஆவணி மாத தேர்த்திருவிழா நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சாமி வீதி உலா வந்த நிலையில் நேற்று காலை திருக்கல்யாணம் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து மாலை 4-மணியளவில் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து கோவிலைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது.பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.ஆடி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புகளை மங்களமேடு உட்கோட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது
    • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர், வேப்பூர் சாரண மாவட்டங்களை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பெரம்பலூர் மாவட்ட சாரண முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் சாரண ஆசிரியர்களுக்கு சாரண இயக்கம் பற்றியும், இதன் மூலம் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும், அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் தொடங்கி மிக சிறப்பாக நடத்துமாறு ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

    • சிறப்பு பட்டா முகாம்கள் இன்று நடக்கிறது.
    • பெரம்பலூர்-குன்னத்தில் நடைபெற்றது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களுக்கும், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், குன்னம் தாலுகாவில் குன்னம் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா முகாம்கள் நடந்தது. சிறப்பு பட்டா முகாமில் வீட்டுமனை பட்டா மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்கள், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான மனுக்கள், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    • சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரத்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட இணை செயலாளர் மீனா கோரிக்கைகளை வலியுறுத்தி படிவத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டும், கைரேகை வைத்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    ரத்த கையெழுத்து இயக்க படிவத்தை வருகிற 30-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடும், கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை சமூக நல ஆணையர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் பஸ் நிலையம் அருகே கலையரங்கம் உள்ளது. இதன் அருகே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக் கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்தப்பகுதியில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றி கொள்வதாக கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். மேலும் அந்த இடத்தில் யாரும் கொடிக்கம்பம் நடுவதில்லை என முடிவு செய்து ஏற்கனவே நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகளே அகற்றிக்கொண்டனர்.

    ×